தமிழ்நாடு

“சட்டம் இயற்றுவதற்கு மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது”: ஆளுநருக்கு சட்டப்பேரவையில் அமைச்சர் கொடுத்த பதிலடி!

உச்ச நீதிமன்ற தீர்ப்பை சுட்டிக்காட்டி ஆளுநர் திருப்பி அனுப்பியிருப்பது அடிப்படை அரசியல் சட்ட அமைப்புக்கே எதிரானது" என்று சட்டப்பேரவையில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசினார்.

“சட்டம் இயற்றுவதற்கு மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது”: ஆளுநருக்கு சட்டப்பேரவையில் அமைச்சர் கொடுத்த பதிலடி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

தமிழக சட்டப்பேரவை கூடி கொள்கை அடிப்படையில் நிறைவேற்றிய நீட் விலக்கு மசோதாவை, உச்ச நீதிமன்ற தீர்ப்பை சுட்டிக்காட்டி ஆளுநர் திருப்பி அனுப்பியிருப்பது அடிப்படை அரசியல் சட்ட அமைப்புக்கே எதிரானது" என்று சட்டப்பேரவையில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசினார்.

இதுதொடர்பாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சட்டப் பேரவையில் ஆற்றிய உரை பின்வருமாறு :-

2006-ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் பல் மற்றும் மருத்துவ கல்வி உட்பட அனைத்து தொழிற்கல்வி சேர்க்கையிலும் பொது நுழைவுத்தேர்வை ரத்து செய்வதற்காக, பொதுமக்களின் கருத்து மற்றும் ஏழை எளிய மற்றும் நடுத்தர குடும்பங்களின் மாணவர்களால் இதற்கென தனிப்பயிற்சி பெற முடியாத சூழல் மற்றும் +2 தேர்வுடன் போட்டி தேர்வுகளும் நடைமுறையில் இருக்கும் போது ஏற்படும் மன அழுத்தம் போன்ற பல்வேறு கோணங்களில் முனைவர் M. அனந்தகிருஷ்ணன் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. அதன் பரிந்துரை பெற்ற பின், இதற்கென ஒரு சட்ட முன்வடிவு சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்டு, அதற்கு குடியரசு தலைவரின் ஒப்புதலையும் பெற்று, சட்டம் இயற்றப்பட்டது என்பதை அனைவரும் அறிந்ததே. அதனடிப்படையில், +2 மதிப்பெண்களின் அடிப்படையில், நடைமுறையில் உள்ள இட ஒதுக்கீட்டைப் பின்பற்றி, மருத்துவ கல்வி சேர்க்கையில் மாநில அரசின் இடங்களுக்கு பிரச்சினை இன்றி மருத்துவம் மற்றும் பல் மருத்துவ மாணவர் சேர்க்கை நடைபெற்று வந்தது.

ஆகையால், நீட் முறை அறிவிப்பதற்கு முன்பே, பொது நுழைவுத் தேர்வை தமிழ்நாடு நன்கு ஆராய்ந்து நீக்கி, ஒளிவு மறைவற்ற ரீதியில் மாணவர் சேர்க்கையை நடத்தி வந்த நிலையில் தான், மாநில அரசின் மருத்துவ இடங்களுக்கு அறிமுகப்படுத்திய நீட் முறையை, தமிழ்நாடு, அறிமுக காலத்திலிருந்தே அதிகாரபூர்மவமாகவும், சட்டரீதியாகவும் மற்றும் சட்டமன்றத்தில் சட்ட முன்வடிவை நிறைவேற்றியும், கொள்கை ரீதியாகவும் தொடர்ந்து எதிர்த்து வருகிறது.

மருத்துவக் கல்வி சேர்க்கைக்கான போட்டித் தேர்வுகளுக்காக எடுக்கப்படும் வகுப்புகள் மூலம் படிக்கும் ஏழை மாணவர்களுக்கு, குறிப்பாக கிராமப்புற மாணவர்களுக்கு போட்டித் தேர்வு எதிர்மாறாக மற்றும் சிரமமானதாக அமைந்துள்ளது. தமிழ்நாட்டில் அனைத்து தரப்பினரும் ‘நீட் தேர்வு’ முறையை எதிர்க்கின்றனர்.

தமிழ்நாட்டு மக்களின் ஒட்டுமொத்த உணர்வை மீறியும், 2017ஆம் ஆண்டுக்கு பிறகு, மருத்துவம் மற்றும் பல் மருத்துவ சேர்க்கை நீட் அடிப்படையில் தான் நடைபெற்று வருகிறது. இதிலிருந்து முறையாக விலக்கு பெற, ஏற்கனவே 2017ல் இயற்றிய சட்டத்திற்கு குடியரசுத் தலைவரால் ஒப்புதல் நிறுத்தி வைத்த நிலையில், இந்த அரசு பொறுப்பேற்றவுடன் ஓய்வு பெற்ற நீதியரசர் A.K. ராஜன் அவர்கள் தலைமையில் உயர்மட்டக் குழு இது குறித்து ஆராய்ந்து, விரிவாக அறிக்கை பெற்று, அதன் பின்பு தான் இந்த புதிய சட்ட முன்வடிவு 13.09.2021ல் ஒருமனதாக தமிழ்நாடு சட்டமன்றத்தில் இயற்றப்பட்டதை நாம் எல்லோரும் நன்கு அறிவோம்.

இதற்கான விரிவான காரணங்கள் மற்றும் விளக்கங்கள் தெளிவாக இந்த சட்டமுன்வடிவினை ஏற்கனவே முன்மொழியும்போது எடுத்துரைத்துள்ளேன். தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த உணர்வினை பிரதிபலிப்பதாக உள்ள இந்த சட்ட முன்வடிவை, ஆளுநர் அவர்கள் அரசியல் சட்ட அமைப்பின் படி, குடியரசுத் தலைவரின் பரிசீலனைக்கு அனுப்புவதற்கு, ஆளுநர் அவர்களுக்கு 18.9.2021 அன்று அனுப்பப்பட்டது. அதன் பிறகு, முதலமைச்சர் அவர்கள், ஆளுநரை நேரில் சந்தித்து, 27.11.2021 அன்றும் 14.10.2021 அன்றும் வலியுறுத்தினார்கள். 8.1.2022 அன்று நடந்த அனைத்து சட்டமன்ற கட்சி கூட்டத்தின் வாயிலாகவும் இதே கருத்து வலியுறுத்தப்பட்டது. இருப்பினும், 142 நாட்களுக்கு பிறகு, சில காரணங்களைச் சுட்டிக்காட்டி மீண்டும் சட்டமன்ற உறுப்பினர்களின் மறுபரிசீலனைக்கு ஆளுநர், பேரவைத் தலைவர் அவர்களுக்கு ஒரு கடிதத்தை அனுப்பியுள்ளார்.

ஆளுநர் அவர்கள் இந்திய அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 200ன் படி சட்ட முன்வடிவை குடியரசுத் தலைவர் அவர்களுக்கு அனுப்பி, குடியரசுத் தலைவர் அவர்களுக்கு சட்ட முன்வடிவு குறித்த சந்தேகங்கள் அல்லது விளக்கங்கள் தேவைப்பட்டால், மீண்டும் ஆளுநர் மூலம் இந்த சட்டமன்றத்திற்கு அனுப்ப வேண்டுமே தவிர, தன்னிச்சையாக ஆளுநர் சம்பந்தப்பட்ட சட்ட முன்வடிவை திருப்பி அனுப்பியுள்ளது, அரசியல் சட்ட அமைப்பின்படி சரியான முடிவு அல்ல. ஆளுநர் அவர்கள் குறிப்பிட்டுள்ள கருத்தினையும், அதன்மீதான அரசின் விளக்கங்களையும் ஒவ்வொன்றாக உங்களின் கவனத்திற்கு கொண்டு வந்து அதற்கான விபரங்களை இந்த அவை முன் வைக்க கடமைப்பட்டுள்ளேன்.

ஆளுநரின் கருத்து-

  1. ஓய்வுபெற்ற நீதியரசர் A.K.ராஜன் அவர்கள் தலைமையில் அமைக்கப்பட்ட உயர்மட்டக் குழுவின் அறிக்கை தான் இந்த சட்ட முன்வடிவிற்கு அடிப்படை என்று ஆளுநர் கூறியுள்ளார்.

பதில் - நீதியரசர் திரு.ஏ.கே.ராஜன் அவர்கள் தலைமையில் அமைக்கப்பட்ட உயர் மட்டக் குழு, இதுகுறித்து விரிவாக ஆய்வு செய்து பொதுமக்களின் கருத்துக்களை கேட்டறிந்து, சட்ட நுட்பங்களை ஆராய்ந்து, கடந்த ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட மாணவர் சேர்க்கையின் புள்ளி விவரங்களின் அடிப்படையிலேயே அறிக்கையை அளித்துள்ளது. உண்மை நிலை என்னவென்றால், நீதியரசர் A.K.ராஜன் அவர்கள் தலைமையில் அமைக்கப்பட்ட உயர்மட்டக்குழு இது குறித்து விரிவாக ஆய்வு செய்தும், பொதுமக்களின் கருத்தினைப் பெற்றும், சட்ட நுட்பங்களை விரிவாக ஆரய்ந்தும், ஏழு பரிந்துரைகளை வழங்கியுள்ளது.

அரசை பொறுத்தமட்டில், இந்த ஏழு பரிந்துரைகளை மதிப்பிற்குரிய தலைமைச்செயலர் அவர்களின் தலைமையில் பல்வேறு செயலர்களை கொண்ட குழு ஆராய்ந்து, அதில் உள்ள 3வது பரிந்துரையை ஏற்றுக்கொண்டு, சட்டத்துறை மூலம் ஆராய்ந்து, இந்த சட்ட முன்வடிவு சட்டமன்றத்தில் கொண்டுவரப்பட்டுள்ளது. ஆகையால், ஆளுநர் கூறியவாறு, ஏதோ அறிக்கையின் அடிப்படையில் அறிமுகப்படுத்தப்பட்ட சட்டம் என்பது முற்றிலும் தவறான கருத்து.

  1. நீதியரசர் தலைமையிலான உயர்மட்டக்குழுவின் அறிக்கை யூகங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது என்றும், நீட் நோக்கமற்றது, நீட் தேர்வு தகுதிக்கு எதிரானது என்றும்,
    நீட் தேர்வினால் திறன் குறைவான, சமுதாயத்தில் முன்னேறிய பணம் படைத்த மாணவர்கள், மருத்துவ த்துறையில் இடம்பெறுவர் என்றும், மற்றும் மாநில பாடத்திட்டத்தின் அடிப்படையில் நடத்தப்படும் தேர்வு அளவிற்கு நீட் தேர்வு முறை திறனை வளர்ப்பதில்லை போன்ற கருத்துக்களை யூகங்கள் என்று ஆளுநர் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.

பதில் - இவைகள் அனைத்தும் முற்றிலும் தவறான கருத்தாகும். ஆளுநர் அவர்களின் கருத்து இந்த உயர்மட்ட குழுவினை அவமானப்படுத்துவது போல் உள்ளது. நடைமுறையில் உள்ள உண்மை நிலையை கவனித்தால், பயிற்சி நிறுவனங்களில் பயிற்சி பெற்ற மற்றும் அதற்கான வசதி படைத்தவர்களுக்கு மட்டுமே நீட் தேர்வு எழுதுவது மற்றும் தேர்ச்சி பெறுவது எளிதாக அமைந்துள்ளது.

சமூகத்திலுள்ள இதர பிரிவு மாணவர்கள் குறிப்பாக, கிராமப்புற அரசு மற்றும் இதர வகை பள்ளிகளில் பயிலும் பட்டியலின மற்றும் பழங்குடியின மற்றும் இதர நலிவுற்ற பிரிவினருக்கு இவ்வகை பயிற்சி எட்டாக்கனியாகவே உள்ளது. அது மட்டுமன்றி, ஒன்றுக்கு மேற்பட்ட முறை நுழைவுத் தேர்வு எழுதி, மருத்துவ கல்லூரிகளில் மாணவர்களுக்கு சேரும் வாய்ப்பு உள்ளதால், அந்தாண்டு 12வது படிக்கும் மாணவர்களுக்கு மாறாக பன்முறை எழுத வசதியுள்ள மாணவர்களுக்கு சாதகமாக நீட் அமைந்துள்ளது.

மேலும், நீதியரசர் ஏ.கே.ராஜன் தலைமையிலான உயர்மட்டக்குழு கடந்த ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட மருத்துவப் படிப்புகளில் சேர்க்கப்பட்ட மாணவர்களின் விவரங்களை ஆராய்ந்து, இதனால் கிராமப்புற மற்றும் நகர்புற ஏழை மாணவர்கள் 'நீட்' தேர்வினால் பாதிக்கப்படுகிறார்கள் என்பதையும், அரசு பள்ளி மற்றும் தமிழ் வழியில் பயின்றவர்களையும் எதிர்மறையாக பாதிக்கிறது என்ற விவரத்தையும் புள்ளி விவரங்கள் மூலம் ஆய்வு செய்து, பொதுமக்களிடம் கருத்துக் கேட்டு அவற்றின் அடிப்படையில் விரிவான அறிக்கையை அரசுக்கு அளித்தது.

  1. ஆளுநரின் கருத்து - இயற்பியல் மற்றும் உயிரியல் தேர்வில் திறன் பற்றி கூறாமல் அனைத்து வகை பொது அறிவு குறித்து வரையறுக்கப்படாத கருத்துக்கள் கூறப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார்.

பதில் - பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவர்கள் அனைவரும் இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் தேர்வு எழுதி அந்த பாடங்களில் மாணவர்களின் அறிவு சோதிக்கப்படுகிறது. 'நீட்' தேர்வு கட்டாயம் ஆவதற்கு முன்பு வரை பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வின் அடிப்படையிலேயே மருத்துவப் படிப்பில் மாணவர் சேர்க்கை நடைபெற்றது.

ஆளுநரின் கருத்தான ஏழை எளிய மாணவர்கள் படிக்கும் அரசு பள்ளிகளிலிருந்து 1 விழுக்காட்டிற்கும் குறைவாக மாணவர்கள் மருத்துவக் கல்லூரியில் சேர்வது அரசு பள்ளியின் தரத்தை காட்டுவதாகவும், இதனை குழு கருத்தில் கொள்ளாமல் அறிக்கை நீட் தேர்வை குறை கூறியுள்ளது என கருத்து தெரிவித்துள்ளார்.

சட்டமன்றத்தால் இயற்றப்பட்ட சட்ட முன்வடிவை குடியரசுத் தலைவரின் பரிசீலனைக்கு அனுப்புவதற்கு பதிலாக ஆளுநர் நீதியரசரின் குழுவின் அறிக்கையில் உள்ள கருத்துக்கள் பற்றி தனது கருத்துக்களை சுட்டிகாட்டுவது அரசியல் அமைப்பின்படி சரியானது அல்ல. 'நீட்' தேர்வு முறை கிராமப்புற மற்றும் நகர்ப்புற ஏழை எளிய மாணவர்களை எதிர்மறையாக பாதிக்கிறது. மேலும், 'நீட்' தேர்வு, பள்ளிக்கூடங்களின் பயிற்று முறையை ஊக்குவிக்காமல், 'நீட்' தனிப்பயிற்சியை ஊக்குவிக்கிறது. இதனால், ஒரு மாணவருக்கு இரண்டு முதல் மூன்று ஆண்டுகள் பயிற்சி தேவை என்ற நிலையும் ஏற்பட்டுள்ளது. இதற்கான பயிற்சிக் கட்டணங்களும் கூடுதலாக வசூலிக்கப்படுகின்றன. இதனால், பொருளாதாரத்தில் பின்தங்கிய, ஏழை எளிய கிராமப்புற மாணவர்களுக்கும், நகர்ப்புற ஏழை மாணவர்களுக்கும் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 'நீட்' தேர்வுமுறை பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள கிராமப்புற மற்றும் நகர்ப்புற ஏழை மாணவர்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என்பதனை உயர்மட்டக்குழு தனது அறிக்கையில் தெளிவாக விளக்கியுள்ளது. உண்மை நிலையும் அதுவே.

  1. ஆளுநரின் கருத்து. - உயர்மட்டகுழுவின் அறிக்கை ஒருதலைபட்சமானது.

உயர்மட்டக்குழுவின் அறிக்கை ஒருதலைப்பட்சமான முடிவினை அளித்துள்ளது என்பது முற்றிலும் தவறான கருத்து ஆகும். புள்ளி விவரங்களை ஆய்வு செய்தது மட்டுமன்றி, குழு பொதுமக்களிடம் விரிவாக கருத்து கேட்டு, அதனை வல்லுநர்களுடன் ஆராய்ந்து அறிக்கை அளித்துள்ளது. சட்டமன்றத்தில் இருந்த அனைத்துக் கட்சிகளும் 'நீட்' தேர்வுமுறைக்கு எதிரான சட்டமுன்வடிவிற்கு ஒப்புதல் அளித்துள்ளன.

CMC. Vellore (எதிர்) ஒன்றிய அரசு வழக்கில், உச்சநீதிமன்ற தீர்ப்பு நீட்டை உறுதிபடுத்தி வகையில் உள்ளது என ஆளுநர் தெரிவித்துள்ளார்.

பதில் – ஆளுநர் அவர்கள் கொள்கை அடிப்படையில் இயற்றப்பட்ட சட்டத்தை அரசியல் சட்ட அமைப்பின் அடிப்படையில், குடியரசுத் தலைவருக்கு அனுப்புவதை தவிர்த்துவிட்டு, ஒரு உச்சநீதிமன்ற தீர்ப்பை சுட்டிக்காட்டியுள்ளது சரியான அனுகுமுறை அல்ல என கருதுகிறேன். அரசியல் சட்ட அமைப்பில் மாநில அரசுக்கும் சட்டம் இயற்றுவதற்கான அதிகாரம் உள்ளது. எந்த ஒரு சட்டமும், ஏதாவது ஒரு ஒன்றிய அரசின் சட்டத்திற்கு மாறாக இருந்தால் அதற்கு அரசியல் சட்ட அமைப்பு 254(2)ன் கீழ் குடியரசுத்தலைவரின் ஒப்புதல் பெறுவதற்கு நடவடிக்கை எடுக்க மாநில அரசுகளுக்கு உரிமை உண்டு. சட்டமன்றத்தால் சட்டமே இயற்றக்கூடாது என்று ஒரு உச்சநீதிமன்ற தீர்ப்பை சுட்டிக்காட்டுவது, அரசியல் சட்ட அமைப்பின் அடிப்படை கட்டமைப்பையே கேள்விக்குறியாக்கும் என்பதை பணிவன்புடன் தெரிவிக்க கடமைப்பட்டுள்ளேன்.

மேலும், இந்த பிரச்சினையை கருத்தில் கொண்டு தொடர்ந்து சமூக வலை தளத்திலும் மற்றும் சில விவாதங்களிலும் ‘நீட்’ உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின் அடிப்படையில் உள்ளதாக தொடர்ந்து பதிவு செய்யப்பட்டு வருகிறது. நீட் தேர்வினை 2010ம் ஆண்டில் அப்போதைய MCI (இந்திய மருத்துவ குழுமம்) ஒரு விதி மூலம் கொண்டு வந்தது. தமிழ்நாடு அரசு அப்போது அதை எதிர்த்து ஒரு வழக்கு தொடர்ந்து உச்ச நீதிமன்றத்தில் தடையாணை பெற்றது. இது குறித்து நிலுவையில் இருந்த அனைத்து வழக்குகளும், மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றப்பட்டது.

உச்சநீதிமன்றத்தில் மறைந்த நீதியரசர் அல்தாமஸ் கபீர் தலைமையிலான மூன்று நீதிபதிகள் அமர்வு, இந்த சட்டம் அரசியல் சட்ட அமைப்பிற்கே எதிரானது என்று இந்த விதிமுறையை ரத்து செய்தார்கள். இதனை அமல்படுத்தாமல், ஒன்றிய அரசு மறு ஆய்வுக்கு முயற்சி செய்து, அந்த மறு ஆய்வில் இந்த தீர்ப்பை மீண்டும் விசாரிக்கலாம் என்று கூறியது. இந்த நேரத்தில் உச்ச நீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு (மாடர்ன் பல் மருத்துவ கல்லூரி (எதிர்) மத்திய பிரதேச மாநிலம்) வழக்கில் வரலாற்று சிறப்பு மிக்க ஒரு தீர்ப்பினை வழங்கியது.

இத்தீர்ப்பின் சாராம்சம் பின்வருமாறு :

"42வது அரசமைப்புச் சட்டத்திருத்தத்தின் படி, பட்டியல் II இல் இருந்த பதிவு 11 நீக்கப்பட்டு பட்டியல் III இல் பதிவு 25 இல் இணைக்கப்பட்டது. பட்டியல் I – பதிவு 66இல் மாணவர் சேர்க்கை உள்ளடங்கவில்லை.

'மாடர்ன்' பல் மருத்துவக் கல்லூரி (எதிர்) மத்திய பிரதேச மாநிலம் வழக்கின் மாணவர் சேர்க்கை விவகாரத்தை உச்சநீதிமன்றம் பரிசீலித்துள்ளது. உயர்கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கை குறித்து மத்தியபிரதேச அரசு இயற்றிய சட்டத்தின் செல்லுபடி குறித்து வழக்குத் தொடுக்கப்பட்டது. அந்த அதிகாரம் மாநிலத்திற்கு இல்லை என்றும், ஒன்றிய அரசுக்கே உண்டு என்றும் வாதம் முன் வைக்கப்பட்டது.

ஐந்து நீதிபதிகளைக் கொண்ட அரசியல் சாசன அமர்வு பின்வருமாறு தீர்ப்பு வழங்கியுள்ளது :

"93. எங்களைப் பொறுத்தவரை, பட்டியல் I – பதிவு 66 மிகவும் திட்டவட்டமானது மற்றும் குறிப்பிட்ட நோக்குடையது, அது, உயர்கல்வி நிறுவனங்கள் அல்லது ஆராய்ச்சி உள்ளிட்ட அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்களின் தரநிலைகளை ஒருங்கிணைத்தல் மற்றும் நிர்ணயித்தல் தொடர்புடையது. ஒருங்கிணைத்தல் மற்றும் தரநிலைகளை நிர்ணயித்தல் என்னும் சொல், குறிப்பிட்ட தரநிலைகளை வரையறுத்தல் என்ற பொருளை உணர்த்தும். இவ்வாறாக, அத்தகைய உயர் கல்வி நிறுவனங்களுக்கு தரங்களைப் பரிந்துரைப்பதற்குப் பிரத்யோக அதிகார வரம்பு, ஒன்றியத்திற்கு வழங்கப்படுகிறது. ஆனால் இதில், தேர்வுகளை நடத்துதல் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கை நடத்தல் ஆகியன உள்ளடங்காது".

அதே வழக்கில், நீதியரசர் பானுமதி வழங்கிய தனித் தீர்ப்பில், இது இன்னும் விரிவாகப் பின்வருமாறு விளக்கப்பட்டுள்ளது :

"எதிர்க்கப்பட்ட சட்டத்தின் செல்லுந்தன்மையை ஏற்றுக் கொள்வதில் எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை; ஏனென்றால், உயர்கல்வி நிறுவனங்களின் மாணவர் சேர்க்கையினை ஒழுங்குறுத்தும் மாநில அரசின் சட்டம் மாநிலங்களின் அதிகார வரம்பிற்கு உட்பட்டதாகவே இருக்கின்றது. இன்னும் சொல்லப்போனால் மக்களின் நல்வாழ்வு மற்றும் வளர்ச்சிக்குப் பொறுப்பாகவுள்ள மாநிலத்திற்கு, மாணவர்களின் நலன் சார் நடவடிக்கைகளை மேற்கொள்வது கடைமையே ஆகும்.

உயர்கல்வித்துறை, மாநிலத்தின் நலனையும் வளர்ச்சியையும் நேரடியாகப் பாதிக்கும் சூழலில் மக்ள் நலனையும் மேற்படி மாணவர்களின் உயர்கல்வியையும் மேம்படுத்தத் தேவையான என்.ஐ.டி போன்ற ஒன்றிய அரசால் நிதியளிக்கப்படும் நிறுவனங்கள் தவிர்த்து பிறவற்றில் மாணவர் சேர்க்கை நடைமுறை மற்றும் கட்டணங்கள் உள்ளிட்ட இன்ன பிறவற்றையும் மாநிலங்கள் மட்டுமே வகுக்க வேண்டும். ஏனென்றால் அம்மாநில மக்களின் தேவைகளையும் வாய்ப்புகளிலே உள்ள சமத்துவமின்மையையும் அம்மாநிலத்தைத் தவிர வேறு யாராலும் மதிப்பிட முடியாது. மாநிலச் சட்டங்கள் மட்டுமே அம்மாநில பாடத்திட்டத்திலும் அம்மாநிலத்திலேயே பிற பாடத்திட்டங்களிலும் பயிலும் மாணவர்களுக்குச் சமமான வாய்ப்புகளை ஏற்படுத்தித் தர முடியும்".

மேற்கூறிய ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வில் உச்சநீதிமன்ற தீர்ப்பின் படி மாநிலங்களுக்கு இது போன்ற சட்டமியற்ற அதிகாரம் உள்ளது. எனவே, இச்சட்டமுன்வடிவினை சட்டப் பேரவை ஒருமனதாக நிறைவேற்றிட அனைத்து மாமன்ற உறுப்பினர்களையும் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

Related Stories

Related Stories