தமிழ்நாடு

“தமிழர்களிடம் மதச்சார்பற்ற கலாச்சாரம் இருக்கிறது.. பாஜக சிந்தனை தமிழ்நாட்டை ஆளமுடியாது” : N.ராம் பேட்டி!

தமிழ்நாட்டில் நல்ல ஒரு கலாச்சாரம் - அரசியல் கலாச்சாரம், மதச்சார்பற்ற கலாச்சாரம் இருக்கிறது. சுயமரியாதைக் கொள்கையுடன் நெருங்கிய தொடர்பு உள்ளவை.

“தமிழர்களிடம் மதச்சார்பற்ற  கலாச்சாரம் இருக்கிறது.. பாஜக சிந்தனை தமிழ்நாட்டை ஆளமுடியாது” : N.ராம் பேட்டி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

“மக்களின் உணர்வை மதிக்காமல் ‘நீட்’ மசோதாவை திருப்பி அனுப்பிய தமிழக ஆளுநரின் செயல் மிகத் தவறானது” என்று ‘இந்து’ என்.ராம் அவர்கள் “சன் நியூஸ் தொலைக்காட்சி” கேள்விக்களம் பகுதி நேர்காணலில் அளித்த பேட்டியில் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ‘இந்து’ என்.ராம் அவர்கள் “சன் நியூஸ் தொலைக்காட்சி” கேள்விக்களம் பகுதிக்கு நேர்காணலில் அளித்த பேட்டி வருமாறு :-

நெறியாளர்: ராகுல் காந்தி அவர்களுடைய பேச்சு, தமிழ்நாட்டை ஆட்சி செய்ய முடியாது பா.ஜ.க.வால், நீட் வேண்டாம் என்றும், மற்ற ரீஜினல் ஆஸ்பிரேசன்ஸ் என்று வரக்கூடிய விஷயங்களை ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு சிந்தனையை, பி.ஜே.பி., பி.ஜே.பி. ஆட்சி செய்யக்கூடியவர்களுக்கு இல்லை - எனவே, தமிழ்நாட்டை நீங்கள் ஒரு நாளும் ஆட்சி செய்ய முடியாது என்று சொல்வது ஒரு ரியலிஸ்டிக்கான ஒன்றா? அல்லது ஓவர் ஸ்டேட்மெண்டா?

‘இந்து’ என்.ராம்: இது உண்மையானது என்று தான் நினைக்கிறேன். இதுவரையில், 1967 ஆம் ஆண்டிலிருந்து பார்த்தோமேயானால், தேசிய கட்சிகளால் தமிழ்நாட்டில் காலூன்ற முடியவில்லை. கூட்டணி கட்சியாகத்தான் அந்தக் காலத்தில்கூட வந்தார்கள். இன்றைக்கு பி.ஜே.பி. என்ற ஒன்றும் பெரிய பலமாக இங்கே கிடையாது. எனவே, அவர் சொல்லியதில் முக்கியமாக சொல்லவேண்டுமென்றால், Idea thing vs idea of union of State என்று சொன்னது - அரசமைப்புச் சட்டத்தில் இருக்கிறது.

அவர் சொல்லியது மிக முக்கியமான கருத்தாகும். கூட்டாட்சித் தத்துவத்தின்படி ஆட்சி நடக்க வேண்டும். தமிழ்நாட்டில் இது ஒரு மய்யமான கருத்தாக - கோரிக்கையாக - ஆஸ்பரேசனாக இருக்கிறது. இதில், பிரிவினையைப்பற்றி யாரும் பேச முடியாது. எனவே, ராகுல் காந்தி சொன்னது முக்கியமானது. கம்யூனஸ் ஆஸ்பெக்ட்டை அவர் சொல்லவில்லை என்றாலும்கூட, மக்களை மத அடிப்படையில் பிரித்து, ஒருவருக் கெதிராக, இன்னொருவரைதூண்டி விட்டு, நடத்தப்படும் அரசியல் இங்கே தேவையில்லை என்பது - நூற்றுக்கு நூறு உண்மை தான் என்று நான் நினைக்கிறேன்.

பி.ஜே.பி.,க்கு ஒரு சித்தாந்தம் இருக்கிறது; அது ஆர்.எஸ்.எஸினுடைய ஒரு பகுதி. ஆனால், அவர்களால் தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வர முடியாது என்று ராகுல் காந்தி அவர்கள் கூறியது, என்னுடைய வாழ்நாளில் அது உண்மையாகத்தான் இருக்கும் என்று நம்புகிறேன்.

நெறியாளர்: உங்கள் ஆயுள் நீளட்டும் என்பது ஒரு வாய்ப்பு - நீங்கள் ஏன் லைப் டைம் என்று சுருக்கிப் பார்க்கிறீர்கள்; ராகுல், பி.ஜே.பி.யினுடைய லைப் டைமை சொல்கிறார்; பி.ஜே.பி.யினுடைய சிந்தனை தமிழ்நாட்டை ஆளமுடியாது என்ற கருத்தை சொல்லியிருக்கிறார். இரண்டு கேள்விகள் உங்களிடம், ஒன்று ஒருசிறிய மாநிலம் கோவா; இன்னொன்று பெரிய மாநிலம் மேற்கு வங்கம்.

மேற்கு வங்கத்தில், இதேபோன்று, ஒரு மாநில உணர்வு - அதற்கென்று ஒரு தனித்தன்மை. அப்படி இருக்கும் இடத்தில், முதன்மையான எதிர்க்கட்சியாக, ஆட்சியைப் பிடிக்கிற முயற்சி கொண்ட ஒரு கட்சியாக அங்கே பி.ஜே.பி. எமர்ஜியானதைப் பார்க்கிறோம். கத்தோலிக்க கிறித்தவர்கள் பெரும்பான்மையாக இருக்கக்கூடிய கோவாவில் பி.ஜே.பி. ஆட்சி அமைத்திருப்பதைப் பார்த்திருக்கிறோம். மேற்கு வங்கத்திற்கும், தமிழ்நாட்டிற்கும் நிறைய ஒற்றுமை உண்டு. ஏன் தமிழ்நாட்டில் பா.ஜ.க.வால் ஆட்சி அமைக்க முடியாது?

‘இந்து’ என்.ராம்: இதற்கு ஒரு முக்கியமான பதில் என்னவென்றால், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சொன்னது போன்று, சுயமரியாதை, திராவிட கொள்கை என்பது மிக முக்கியமான காரணமாகும். திரவிடியன் மாடல் என்கின்ற ஒரு புத்தகத்தைக் கூட நீங்கள் பார்த்திருப்பீர்கள். அந்த மாடலை முழுமையாக ஏற்றுக்கொள்கிறோமே இல்லையோ, அது ஒரு முக்கிய பங்களிப்பாக இருக்கிறது.

ஆகவே, தமிழ்நாட்டில் நல்ல ஒரு கலாச்சாரம் - அரசியல் கலாச்சாரம், மதச்சார்பற்ற கலாச்சாரம் இருக்கிறது. சுயமரியாதைக் கொள்கையுடன் நெருங்கிய தொடர்பு உள்ளவை. பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு வாய்ப்புகள் தரப்படுகின்றன. அந்த வாய்ப்புகள் கிடைத்ததினால், ஒரு ஜாதியினருக்கும், இன்னொரு ஜாதியினருக்கும் உள்ள இடைவெளி குறைந்து வந்திருக்கிறது. குறிப்பாக கல்வித்துறையில் அதை நீங்கள் பார்க்கலாம்.

அந்த வாய்ப்புகள் கிடைத்ததினால், ஒரு வளர்ச்சி ஏற்பட்டு இருக்கிறது. தமிழ்நாட்டை மட்டுமல்ல, கேரளாவையும் சொல்லுகிறார் ராகுல் காந்தி. கல்வியில் சிறந்த மாநிலம் கேரளா. அங்கேயும் பி.ஜே.பி.க்கு முக்கிய இடமில்லை. அவர்கள் அதற்காக பணியாற்றவில்லை என்று சொல்ல முடியாது. கடுமையாக உழைத்திருக்கிறார்கள் ஆர்.எஸ்.எஸ். கேரளாவில் கன்னூர் மாவட்டத்திலும், தமிழ்நாட்டில் கோவை மாவட்டத்திலும் கடுமையாக உழைத்திருக்கிறார்கள். அதற்காக அவர்களுக்கு ரிவார்டு கிடைக்கவில்லை.

அவர்கள் அதுகுறித்து ஆழமாக யோசித்தார்கள் என்றால், அவர்களுக்கு இது நன்றாகப் புரியும். இந்த மண்ணில் நம்முடைய கொள்கைகள் எடுபடாது; தமிழ்நாட்டு மண்ணிற்கென்று ஒரு சிறப்புத் தன்மைகள் உண்டு. மதச்சார்பற்ற ஜனநாயகக் கலாச்சாரம் இங்கே உண்டு. அரசியல் ஆதாரத்தோடு அவர்கள் இதைப்பார்த்திருக்கலாம்.

தேசிய கட்சிகளாக இருக்கின்ற காங்கிரசும், பா.ஜ.க.வும் ஏன் தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வர முடியவில்லை என்றால், கூட்டாட்சித் தத்துவத்தில் அவர்களுக்கு நம்பிக்கை இல்லை என்றுதான் நான் ஒரு முக்கியமான காரணமாகப் பார்க்கிறேன். இன்றைக்கு மாநில சுயாட்சி என்ற முழக்கம் எழவேண்டும். இன்னொரு விஷயத்தை இங்கே சொல்லவேண்டும், அரசமைப்புச் சட்டத்தைப் பற்றி விவாதிக்கும் பொழுது அம்பேத்கர் அவர்கள், ஒவ்வொரு மாநிலமும் தங்களுடைய உரிமைகளை நிலைநாட்ட தனிப்பட்ட அதிகாரத்தைக் கொண்டுள்ளன என்று பேசினார்.

மாநில அரசு உரிமை, மத்திய ஆட்சி உரிமை என்பது இருக்கின்றன. கன்கரண்ட் லிஸ்ட் இருக்கிறது. ஒரே நாடு, ஒரே கலாச்சாரம், ஒரே மொழி என்று இன்றைக்கு பா.ஜ.க. அரசு பேசுகிறது. வெளிப்படையாக இந்தித் திணிப்பைப்பற்றி சொல்கிறார்களே இல்லையோ, இதைப்பற்றி மக்கள் நன்றாகப் புரிந்துவைத்திருக்கிறார்கள்.

நான் கல்லூரியில் படிக்கும் பொழுது இந்தித் திணிப்பு நடந்தது. அதை எதிர்த்துப் போராட்டம் நடந்தது. இந்தி மொழியை யாரும் வெறுக்கவில்லை; ஆனால், திணிப்பதைத்தான் எதிர்க்கிறார்கள். இதையெல்லாம் வைத்துப் பார்க்கும்பொழுது, பா.ஜ.க.வின் கொள்கைக்கும், தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய நடைமுறைக்கும் ஓர் ஆழமான முரண்பாடு இருக்கிறது. அதை சரி செய்யவே முடியாது.

இதைத்தான், ராகுல் காந்தி அவர்கள், அவருடைய பாணியில் நாடாளுமன்றத்தில் உணர்ச்சிகரமாக 45 நிமிடங்கள் பேசினார். அவருடைய உரை தமிழ்நாட்டில் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது என்றுதான் நான் நினைக்கிறேன்.

நெறியாளர்: மாநில சுயாட்சி, மாநில உரிமையும் மேலோங்கி இருக்கக் கூடிய தமிழ்நாட்டில், சுயமரியாதை இயக்க உணர்வு, சமூகநீதி சார்ந்த சிந்தனை, மொழி உணர்ச்சி, மதச்சார்பற்ற தன்மை, ஜனநாயகம் இவற்றில் மக்களுக்கு இருக்கக்கூடிய அந்த உணர்வு வேரூன்றி இருப்பதினால், இந்த இடத்தில், இதற்கு மாறான ஒரு குழுவினர் மேலாதிக்கம் செய்ய முடியாது என்கிற ஒரு கருத்தை சொல்கிறீர்கள்.

நீட் தேர்வு விதிவிலக்கு வேண்டும் என்று சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட ஒரு மசோதாவை, தமிழ்நாடு ஆளுநர் அவர்கள், குடியரசுத் தலைவருக்கு அனுப்புவதற்குப் பதிலாக, மீண்டும் தமிழ்நாடு அரசுக்கே திருப்பி அனுப்பியிருக்கிறார் ஆளுநர்.

அந்த ஆளுநரை திரும்பப் பெறவேண்டும் என்று இன்றைக்குக்கூட தி.மு.க. எம்.பி.,க்கள் போராட்டம் செய்திருக்கிறார்கள். ஆளுநருடைய நடவடிக்கை - நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி பேசியதற்கும், ஆளுநருடைய செயலுக்கும் ஒன்றுக்கொன்று தொடர்புடையதா? என்பதைத் தாண்டி, ஆளுநருடைய இந்த நடவடிக்கை என்பது, சட்டத்தின்பால்பட்டதா? மாநில உணர்வு அதற்கு எதிரானதா? இதை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?

‘இந்து’ என்.ராம்: ஆளுநர் செய்தது மிகத்தவறானது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுதான் ஆட்சியை நடத்த வேண்டும்; ஆளுநர் அதற்கு ஒத்துழைப்புத் தரவேண்டும். ஆனால், இன்றைக்கு எதார்த்தம் என்னவென்றால், ஒன்றிய அரசு சொல்வதைத்தான், மாநில ஆளுநர்கள் கேட்கிறார்கள். சில ஆளுநர்கள் மென்மையாக நடந்துகொள்கிறார்கள்; சில ஆளுநர்கள் கடுமையாக நடந்து கொள்கிறார்கள்.

தமிழ்நாடு அரசின் மசோதாவை திருப்பிஅனுப்பியதை - இவரே செய்தாரா? அல்லது ஒன்றிய அரசின் அழுத்தமா? என்பது தெரியவில்லை. இவருடைய கருத்துக்கு மாறுபாடு இருந்தால், ஆளுநர் பதவியை ராஜினாமா செய்துவிட்டுப்போகலாமே!

ஆளுநர் செய்தது மிகத் தவறானது. காலதாமதம் தான் ஆகும். நீட் தேர்வு வேண்டுமா? வேண்டாமா? என்கிற விவாதம் இப்பொழுது தேவையில்லை. ஆனால், மக்கள் மத்தியில் ஒரு பயம் இருக்கிறது; நீட் தேர்வு தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மாணவர்களின் எதிர்காலத்திற்கு இது தடையாக இருக்கிறது; சமூகநீதிக்கு எதிரானது என்கிற எண்ணம் இருப்பதினால், அதுகுறித்து பேசவேண்டும். அப்படியில்லாமல், உச்சநீதிமன்றம் சொல்லிவிட்டது என்று சொல்வது சரியில்லை. மீண்டும் சொல்கிறேன், நீட் வேண்டுமா? வேண்டாமா? என்கின்ற பிரச்சினைக்கு நான் போகவில்லை.

ஆனால், மக்களின் உணர்வை மதிக்காமல், ஆளுநர் இப்படி செய்திருப்பது தவறான விஷயம்தான். ஆளுநர் அவராகவே இதை செய்தாரோ அல்லது ஒன்றிய அரசிடமிருந்து உத்தரவு வந்ததோ தெரியவில்லை. ஏனென்றால், எந்த மாநில ஆளுநரும் இன்றைக்கு சுதந்திரமாக செயல்பட முடியாது; அப்படி செயல்பட்டால், உடனே அவர் மாற்றப்படுவார்கள்.

இதற்கு முன்பு இருந்த ஆளுநர், மிகவும் மென்மையானவர். இன்றைய ஆளுநர் ரவியையும் நான் ஒருமுறை சந்தித்திருக்கிறேன். அவருடைய தனிப்பட்ட செயலை சொல்லவில்லை. மசோதாவை திருப்பி அனுப்பியது தவறானதுதான். ஓவர் ரீச் என்கின்ற வார்த்தை ஒன்று உண்டு. அரசமைப்புச் சட்டத்தை மீறி செய்கின்ற தன்மை இன்றைக்குப் பல மாநிலங்களில் இருக்கிறது. இவ்வாறு ‘இந்து’ என்.ராம் அவர்கள் கேள்விக் களம் பகுதிக்கு பதிலளித்தார்

banner

Related Stories

Related Stories