தமிழ்நாடு

“அப்பா கல் குவாரியில் கூலி வேலை.. அரசு பள்ளியில் படித்து டாக்டர் ஆகிறார் ஏழை மாணவி”: நெகிழ்ச்சி சம்பவம்!

வேலூர் மாவட்டம் பென்னாத்தூர் அருகே அரசுப் பள்ளியில் படித்த, கல் உடைக்கும் தொழிலாளியின் மகளுக்கு தமிழ்நாடு அரசின் 7.5 % ஒதுக்கீட்டின் கீழ் மருத்துவ படிப்பில் சேர சீட் கிடைத்துள்ளது!

“அப்பா கல் குவாரியில் கூலி வேலை.. அரசு பள்ளியில் படித்து டாக்டர் ஆகிறார் ஏழை மாணவி”:  நெகிழ்ச்சி சம்பவம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

வேலூர் மாவட்டம் பென்னாத்தூர் அருகே உள்ள கணேசபுரத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மனைவி வித்யா இருவரும் கல்குவாரியில் கூலி வேலை செய்து வருகின்றனர். இவர்களின் மகள் சத்யா மாற்றுத்திறனாளியான இவர் பென்னாத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்து வந்தார்.

குடும்ப வறுமை காரணமாக பள்ளிப் படிப்பை தொடர முடியாத நிலை ஏற்பட்டது. இதையறிந்த பள்ளி ஆசிரியர்கள் சிலர் மாணவி சத்யாவின் பெற்றோரைச் சந்தித்து பேசினர். மாணவியின் பள்ளி படிப்பு செலவை தாங்களே ஏற்றுக்கொள்வதாக கூறி சத்யாவை மேற்கொண்டு படிக்க வைக்க சம்மதம் பெற்றனர்.

தொடர்ந்து நடந்து முடிந்த பிளஸ் 2 பொதுத்தேர்வில் மாணவி 600-க்கு 532 மதிப்பெண்கள் பெற்றார். இதையடுத்து நீட் தேர்வில் பங்கேற்று 720-க்கு119 மதிப்பெண் பெற்று மருத்துவ படிப்பில் சேருவதற்கான தகுதி பெற்றார். அரசு பள்ளிகளில் படித்து நீட் தேர்வில் தகுதி பெற்றவர்களுக்கு தமிழ்நாடு அரசின் 7.5 விழுக்காடு ஒதுக்கீட்டின் கீழ் மருத்துவ படிப்பு களில் சீட் வழங்கப்பட்டது.

இந்த நிலையில், மருத்துவ படிப்புகளில் சேருவதற்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு வியாழனன்று தொடங்கியது. இதில் விளையாட்டு வீரர்கள் மாற்றுத்திறனாளி மாணவ மாணவிகள் பங்கேற்ற சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு சென்னையில் நடந்தது. இதில், அரசு பள்ளி மாணவி சத்யாவுக்கு வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ் படிப்புக்கான சீட் வழங்கப்பட்டது.

கடந்த ஆண்டு வேலூர் மாவட்டத்தில் 7.5 விழுக்காடு இட ஒதுக்கீட்டில் 17 பேர் எம்.பி.பி.எஸ், 3 பேர் பி.டி.எஸ். படிப்பு படித்து வருகின்றனர். இந்த ஒதுக்கீட்டில் மாவட்டத்தில் இந்த ஆண்டு மருத்துவ படிப்பில் சேர்ந்த முதல் மாணவியாக மாற்றுத்திறனாளி பிரிவை சேர்ந்த முதல் மாணவியாக சத்யா விளங்குகிறார்.

இது குறித்து பென்னாத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் உமாதேவன் கூறுகையில்:- மாணவி சத்யா மிகவும் நன்றாக படிக்கக் கூடியவர். ஆனால் அவரின் பெற்றோர் கூலி தொழிலாளி என்பதால் பள்ளிப்படிப்பைத் தொடரமுடியாத நிலை இருந்தது. தொடர்ந்து மாணவியின் பெற்றோரிடம் பேசிய ஆசிரியர்கள் மாணவியின் படிப்பைத் தொடர்வதற்கு உதவி செய்தனர்.

மேலும் நீட் தேர்வை எதிர்கொள்ள ஆசிரியர்கள் பயிற்சி மற்றும் புத்தகங்கள் உதவியுடன் தேர்ச்சி பெற்று மருத்துவ படிப்பிற்கு தேர்வாகி உள்ளார். இந்த பள்ளியில் படித்து மருத்துவ படிப்பில் சேர்ந்த முதல் மாணவி என்ற பெருமைக்கு உரியவராக சத்யா விளங்குகிறார். இவர் பள்ளியில் படிக்கும் மற்ற ஏழை மற்றும் நடுத்தரக் குடும்பங்களைச் சேர்ந்த மாணவ மாணவிகளுக்கு முன்னுதாரணமாகவும் உத்வேகத்தை ஏற்படுத்தும் சக்தியாக விளங்குகிறார்” எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories