தமிழ்நாடு

“சமூகநீதிக்கு எதிராக பொய் மூட்டைகளை கட்டவிழ்த்துவிடும் பா.ஜ.க” : தோலுரித்து காட்டிய கி.வீரமணி!

அனைத்திந்திய தலைவர்களே முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை பாராட்டுகின்றபொழுது பா.ஜ.க.வினருக்கு வயிற்றெரிச்சல் ஏன்? என திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கேள்வி எழுப்பியுள்ளார்.

“சமூகநீதிக்கு எதிராக பொய் மூட்டைகளை கட்டவிழ்த்துவிடும்   பா.ஜ.க” : தோலுரித்து காட்டிய கி.வீரமணி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சமூகநீதிக்கு எதிரான பா.ஜ.க.வின் நடவடிக்கைகளை அம்பலப்படுத்தி, பா.ஜ.க. கூறும் பொய்யான தகவல்களைத் தோலுரித்து, திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.

அவரது அறிக்கை வருமாறு:

26.1.2022 அன்று அனைத்திந்திய மாநிலங்கள் பலவற்றின் ஒடுக்கப்பட்ட சமூகத் தலைவர்கள் பலரும் திராவிட மாடல் ஆட்சியின் தொடர்ச்சியில், 'சமூகநீதிக்கான சரித்திர நாயகர்' தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், அவரது சட்டப் போராட்டத்தால் வென்று, மருத்துவக் கல்வித் துறையிலும் 27 சதவிகித இட ஒதுக்கீடு - இதற்குமுன் மறுத்து வந்ததைப் பெற்றுத் தந்து, ஒரு சமூகநீதிப் போராளியாக களத்தில் நின்று - பெரியார், அண்ணா, கலைஞர் பாரம்பரியத்தை இன்றும் அரசியலில் கட்டிக் காத்து வருவதற்காகவும், அவரே நம்பிக்கை நட்சத்திரமாக ஒடுக்கப்பட்டோர் உரிமை காப்பு இயக்கத்திற்கு அகில இந்திய நிலையில், ஒரு பாதுகாப்பு இயக்கத்தைக் கட்டிக் காக்கும் தகுதியும், ஆற்றலும் படைத்தவர் என்று பலரும் - ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதிகளும், நாடாளுமன்ற உறுப்பினர்களும், பிற மாநில அமைச்சர்களும் மனந்திறந்த பாராட்டினைக் குவித்தது கண்டு, தமிழ்நாடு பூரிப்பும், பெருமகிழ்ச்சியும் அடைகிறது.

‘திராவிட மாடல்’ ஆட்சியின் தத்துவத்தைப் பின்பற்றித் தீருவது காலத்தின் கட்டாயம்!

டில்லியிலிருந்து உ.பி.,க்கு அறிவுரை கூறும் முதிர்ந்த எழுத்தாளர்கள்கூட முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் - 'திராவிட மாடல்' ஆட்சியின் தத்துவத்தைப் பின்பற்றித் தீருவது காலத்தின் கட்டாயம் என்ற கருத்துப்பட, 'ஹிந்து' போன்ற ஆங்கில நாளேடுகளில் கட்டுரை தீட்டுகின்றனர்!

ஆனால், இங்குள்ள பூணூல் திருமேனிகளுக்கு, காவிக் கட்சியினருக்கு ஏற்றுக்கொள்ள மனமில்லாமல், எரிச்சலை, பொய் மூட்டையை அவிழ்த்துக் கொட்டி, சமூகநீதி வரலாறுபற்றி மறைத்தும், திரித்தும் புளுகி அறிக்கைவிடும் அறியாமை கண்டு நாடே எள்ளி நகையாடும் நிலைதான் உள்ளது!

பா.ஜ.க. செய்தித் தொடர்பாளரான நாராயணன் திருப்பதி என்பவர் விடுத்துள்ள அறிக்கை - கோயபெல்சின் குருநாதர்கள் இவர்கள் என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது!

வரலாற்றை எப்படி திரிபுவாதம் செய்கிறார் காவி கயிறு திரிப்பாளர்! 'இதர பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான சமூகநீதிப் போராட்டத்தில் தி.மு.க. துரும்பைக் கூடக் கிள்ளிப் போடவில்லை' என்கிறார் இந்த காவி கயிறு திரிப்பாளர்! அதுமட்டுமா - வரலாற்றை எப்படி திரிபுவாதம் செய்கிறார் தெரியுமா?

1977-1979 இல் ஜனதா கட்சியின் ஆட்சியில்தான் மண்டல் ஆணையம் அமைந்தது என்று கூறி, உண்மையை வளைக்கிறார்!ஜனதா கட்சி என்று, மூன்று, நான்கு கட்சிகள் இணைந்த கூட்டு ஆட்சி. அதில் இடம்பெற்ற சவுத்திரி சரண்சிங்தான் தனியே பிற்படுத்தப்பட்ட சமூக மக்களின் உரிமைக்கான ஓர் ஆணையம் (அரசமைப்புச் சட்டப் பிரிவு 340-இன்படி) அமைக்கவேண்டும் என்று கூறி, மொரார்ஜி தேசாய் தலைமையிலான ஆட்சியை ஏற்கச் செய்தார்.

பிந்தேஸ்வரி பி.மண்டல் அவர்கள் தலைமையில், ஜனதா கட்சியின் தேர்தல் அறிக்கையில் முதல் ஆணையமான காகாகலேல்கர் கமிட்டியின் பரிந்துரைகளைச் செயல்படுத்துவோம் என்று கூறியிருந்தாலும், அது பிற்படுத்தப்பட்டோர் நலனுக்குக் கூறிய பரிந்துரை - உண்மையில் அதற்கு மாறானது; குழப்பங்கள் நிறைந்தது - என்று குறிப்பிட்டு, தனியே ஒரு புது ஆணையம் அமைக்கவேண்டும் என்று கூறி, பிறகு அதையும், சரண்சிங் கருத்தை ஏற்று, பீகார் மேனாள் முதலமைச்சர், வழக்குரைஞர் பிந்தேஸ்வரி பி.மண்டல் அவர்கள் தலைமையில், 20.12.1978 நாடாளுமன்றத்தில் அறிவித்தார் - நான்கு உறுப்பினர்களைக் கொண்டு, மொத்தம் அய்ந்து பேர்.

அக்குழு பொறுப்பேற்ற அடுத்த ஆண்டு 12.12.1980 இல் பிரதமர் இந்திரா காந்தியிடம் அறிக்கை அளிக்கும் - நிறைவு நிகழ்ச்சி நடைபெற்றது. (பிரதமர் மொரார்ஜி தொடக்க உரை - மண்டல் அறிக்கைக்காக 21.3.1979). பிரதமர் இந்திரா காந்தி இக்கமிஷன், மண்டல் கமிஷனுக்கு, இரண்டு முறை கால நீடிப்புகள் தந்து, ஆதரவைக் கொடுத்தார் என்று மண்டல் அறிக்கையில் கூறுகிறார் (31.12.1980 இல் சமர்ப்பித்தார்).

“சமூகநீதிக்கு எதிராக பொய் மூட்டைகளை கட்டவிழ்த்துவிடும்   பா.ஜ.க” : தோலுரித்து காட்டிய கி.வீரமணி!

திராவிடர் கழகத்தால் - 16 போராட்டங்கள், 42 மாநாடுகள்!

இதில் ஏறத்தாழ 10 ஆண்டுகள் ஒன்றிய அரசு இதனை வெளியிடாத நிலையில், ஏற்று செயல்படுத்த வற்புறுத்தி, அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் பல அமைப்புகளையும் ஒன்று திரட்டி, பல மாநிலங்களில் - தமிழ்நாட்டிலும் 16 போராட்டங்கள், 42 மாநாடுகள் - 10 ஆண்டுகளில் திராவிடர் கழகத்தால் நடத்தப்பட்டது.

தமிழ்நாட்டில் தி.மு.க., தலைவர் கலைஞரும், அகில இந்திய ஒடுக்கப்பட்டோர் சமூகத் தலைவர்கள் கலந்துகொண்ட மாநாட்டில் கலந்துகொண்டு, மண்டல் கமிஷன் செயல்பாட்டிற்கு முழு ஆதரவு தந்தார். 1969 இல் முதலமைச்சரான கலைஞர் அவர்கள், பிற்படுத்தப்பட்ட துறைக்கென தனியே அமைச்சரையும், தனித் துறையையும் இந்தியாவிலேயே முதன் முதலில் உருவாக்கிய முதலமைச்சர்.

நாடாளுமன்றத்திலோ, வெளியிலோ வாய் திறந்தது உண்டா?

நாங்கள்தான் மண்டல் வருவதற்குக் காரணம் என்னும் நாராயணன்களே, இதில் உங்கள் கட்சி (1980 இல்தான் பா.ஜ.க. பிறந்தது - அதற்குமுன் அது பாரதீய ஜனசங்கம்) கிள்ளிப் போட்ட துரும்பு ஏதாவது உண்டா? வாஜ்பேயி அவர்களோ, அத்வானியோ இதனை அமல்படுத்த நாடாளுமன்றத்திலோ, வெளியிலோ வாய் திறந்தது உண்டா?

சமூகநீதிக் காவலரான வி.பி.சிங் பிரதமர் ஆன பிறகு (அவரது ஆட்சிக்கு வெளியில் இருந்து ஆதரவு கொடுத்தது பா.ஜ.க.) அதன் ஒரு பகுதியை நிறைவேற்றிய (16(4) ஆவது வேலைவாய்ப்புக்கானது) அவரது ஆட்சிக்கு, பா.ஜ.க. கொடுத்த ஆதரவை 'வாபஸ் பெற்று' அதனைக் கவிழ்த்ததோடு, அத்வானிகள் ரதயாத்திரை என்று கமண்டலைத் தூக்கிக் கிளம்பியதால், மண்டலுக்கும், கமண்டலுக்கும் ஏற்பட்ட போராட்டத்தில் உங்கள் பா.ஜ.க. மண்டல் பக்கம் நிற்காவிட்டாலும், ஆட்சியைக் கவிழ்க்காமல் இருந்ததா?

தேர்தல் அறிக்கையில் நாங்கள் 1978-லேயே (ஜனதா கட்சி) கூறினோம் என்பதில் இவர்களுக்கு உண்மையும், உறுதியும் இருக்குமானால், இவர்கள் வி.பி.சிங் ஆட்சியை கவிழ்ப்பதற்கு முனையலாமா?

பா.ஜ.க.வின் பங்கு பூஜ்யம்தானே!

27 சதவிகித வேலை வாய்ப்பு, பிறகு கல்வியில் வேலை வாய்ப்பு, 93 ஆவது திருத்தம், தி.மு.க. பங்கேற்ற அய்க்கிய முற்போக்குக் கூட்டணி (யு.பி.ஏ.) அரசின் மூலமாக மத்திய கல்வி நிலையங்களில் இட ஒதுக்கீடு கிடைத்ததில் உங்கள் கட்சியின் பங்கு பூஜ்யம்தானே!

தமிழ்நாடு முதலமைச்சரைப் பாராட்டினால் உங்களுக்கு ஏன் வயிற்றெரிச்சல்?

மருத்துவக் கல்லூரி வழக்கு - உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்து நடைபெற்றதே அதை தி.மு.க.தான் முதலில் முன்னெடுத்து, நீதிமன்ற அவமதிப்பு வழக்கு உள்பட போட்டு, அடிமேல் அடி சட்டப்படி அடித்ததால், நகராத 'அம்மி'யும் ஒன்றிய அரசும் வேறு வழியின்றி அசைந்தது; இசைந்தது. அதற்குரியவர் தமிழ்நாடு முதலமைச்சர்தானே - அவரைப் பாராட்டினால் உங்களுக்கு ஏன் வயிற்றெரிச்சல்? வக்கணைப் பேச்சு?

நீங்கள் கூறுவது அப்பட்டமான புரட்டு என்பதற்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் போட்ட வழக்குகள் உயர்நீதிமன்றத்திலும், உச்சநீதிமன்றத்திலும் நடந்ததையே மறுக்கப் போகிறீர்களா? முதலில் பா.ஜ.க. அரசு பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 27 சதவிகித ஒதுக்கீடு தர பலவித 'சால்ஜாப்புகளை' கூறி, மறைமுகமான தங்களது விருப்பில்லாமல்தானே தந்தது!

ஆர்.எஸ்.எஸ். கொள்கை -இன்றுள்ள சமூக ரீதியாகவும், கல்வி ரீதியாகவும் உள்ள பிற்படுத்தப்பட்டவர்களுக்கு என்று அரசமைப்புச் சட்டத்தில் முதல் அரசமைப்புச் சட்டத் திருத்தம் பெரியார் - திராவிடர் இயக்கத்தால் வந்ததே, அதனை எப்போதாவது ஆதரித்தோ, வரவேற்றோ உள்ளார்களா?

பலூன் போன்ற உங்கள் பொய்ப் பிரச்சாரம் எங்களின் உண்மை என்ற ஊசியால் உடையவே செய்யும்! எல்லாவற்றிற்கும் ஆதாரங்கள் உள்ளன. பலூன் போன்ற உங்கள் பொய்ப் பிரச்சாரம் எங்களின் உண்மை என்ற ஊசியால் ஒரு நொடிப்பொழுதில் உடையவே செய்யும். 69 சதவிகிதத்தின் வரலாற்றில் உங்கள் பங்கு துளியும் உண்டா?

இட ஒதுக்கீடு மறுபரிசீலனை செய்யப்படவேண்டும் என்று தொடர்ந்து கூறி வருபவர்தானே ஆர்.எஸ்.எஸின் தலைவர் திருவாளர் மோகன் பாகவத். உண்மைகள் ஒருபோதும் உறங்காது. எம்.ஜி.ஆரின் 9 ஆயிரம் ரூபாய் வருமான வரம்பு ஆணையை எதிர்த்தது திராவிடர் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, முஸ்லீம் லீக் - இவைதானே கட்சி ரீதியாக போராடியவை. அதன் பரிணாம வளர்ச்சிதானே 69 சதவிகிதமாக மலர்ந்து, திராவிடர் கழகம் தந்த வரைவுப்படிதானே அன்றைய ஜெயலலிதா ஆட்சி செய்தது - பா.ஜ.க.வுக்கு உரிமை கொண்டாடிட வெட்கமாக இல்லையா? உண்மைகள் ஒருபோதும் உறங்காது - மறவாதீர்!

இவ்வாறு கி.வீரமணி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories