தமிழ்நாடு

“இவர்களால்தான் எழுந்துநிற்கிறது தி.மு.க எனும் மாபெரும் தமிழின இயக்கம்”: முதல்வர் மு.க.ஸ்டாலின் உரைவீச்சு!

“தியாகத்தின் திருவுருவங்களால் தான் திராவிட முன்னேற்றக் கழகம் என்ற மாபெரும் தமிழியக்கம், தமிழின இயக்கம் எழுந்து நிற்கிறது" என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

“இவர்களால்தான் எழுந்துநிற்கிறது தி.மு.க எனும் மாபெரும் தமிழின இயக்கம்”: முதல்வர் மு.க.ஸ்டாலின் உரைவீச்சு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

தி.மு.க மாணவரணி சார்பாக மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளிக்காட்சி வாயிலாக உரையாற்றினார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரை வருமாறு:

''ஓடிவந்த இந்திப்பெண்ணே கேள்

நீ தேடி வந்த கோழை நாடு இதுவல்ல! '' - என்று தனது கால்சட்டைப் பருவத்தில் புலி வில் கயல் கொடி தாங்கி திருவாரூர் வீதிகளில் புறப்பட்டவர் தான் முத்தமிழறிஞர் கலைஞர்.

இதுபோன்ற எத்தனையோ தமிழ் இளைஞர்களை தமிழைக் காப்பாற்றுவதற்காக தட்டி எழுப்பினார் தந்தை பெரியார் அவர்கள்.

1938 ஆம் ஆண்டு தமிழகத்தில் நடந்த மொழிப் போராட்டத்தின் வெப்பம்தான் இந்த 2021ஆம் ஆண்டு வரைக்கும் தணியாமல் இருக்கிறது.

அன்றைய தினம் பெரியார் மூட்டிய நெருப்பு என்பது ஒட்டுமொத்த தமிழர்களையும் ஒன்று சேர்த்தது. பெரியாரின் குரலுக்கு சோமசுந்தர பாரதியாரைப் போன்ற தமிழறிஞர்கள் அணிதிரண்டார்கள்.

மறைமலையடிகளைப் போன்ற சமயநம்பிக்கையாளர்களும் அணி திரண்டார்கள்.

அண்ணாவைப் போன்ற இளைஞர்கள் ஒன்று சேர்ந்தார்கள்.

கலைஞரைப் போன்ற பள்ளி மாணவர்கள் போர்க்கொடி தூக்கினார்கள்.

இவை அனைத்துக்கும் மேலாக அதிகப்படியான பெண்கள் கலந்து கொண்ட மாபெரும் போராட்டம் தான் 1938 இந்திப் போராட்டம் ஆகும்.

அவர்களைக் கைது செய்தபோது தங்களது கைக்குழந்தைகளோடு பெண்கள் சிறைக்குச் சென்றார்கள். இப்படி பெண்களையும் தமிழுக்காக போராடத் தூண்டினார் என்பதற்காகத் தான் தந்தை பெரியார் அவர்கள் கைது செய்யப்பட்டு பெல்லாரி சிறையில் அடைக்கப்பட்டார்.

குடும்பம் குடும்பமாக கைதாகிச் சிறையில் இருந்தார்கள்.

'இருப்பது ஓர் உயிர், அது போகப் போவது ஒரு முறை, அது நல்ல காரியத்துக்காக நாட்டுக்காகப் போகட்டுமே' என்று சிறைச் சாலையில் முதலில் உயிர் துறந்தார் நடராசன்.

அதன்பிறகு சிறையில் உயிர் துறந்தார் தாளமுத்து.

அந்த இரண்டு தியாகிகள் நினைவாக தாளமுத்து - நடராசன் என்ற மாபெரும் மாளிகையை எழும்பூரில் அமைத்தது தான் திராவிட முன்னேற்றக் கழக அரசு.

1938 இல் தொடங்கிய போராட்டம் - 1940 ஆம் ஆண்டு இந்தி கட்டாயமில்லை என்று அறிவிக்கும் வரைக்கும் நடந்தது!

1948 ஆம் ஆண்டு மீண்டும் இந்தித் திணிக்கப்பட்டது. அப்போதும் பெரியாரும் அண்ணாவும் போர் பரணி பாடினார்கள். இரண்டாண்டு காலம் அந்த போராட்டம் நடந்தது.

1963 ஆம் ஆண்டு மீண்டும் இந்தி ஆதிக்கம் தலைவிரித்தாடியது. பேரறிஞர் அண்ணாவும் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களும் அமைத்த மொழிப்போர் களம் என்பது இரண்டாண்டு காலம் தமிழகத்தில் நீடித்தது.

தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களைச் சேர்ந்த கழகத் தொண்டர்களும் பங்கெடுத்து சிறை சென்றார்கள். ஆறு மாதம் முதல் அதிகபட்சமாக ஒன்றரை ஆண்டுகள் வரை நம்முடைய கழகத் தொண்டர்கள் சிறையில் இருந்தார்கள்.

மதுரை, ராமநாதபுரம் மாவட்டங்களில் கைதான தி.மு.க.வினர் ஓராண்டு சிறைத்தண்டனை பெற்றனர். காஞ்சி, குமரி, கோவை, சென்னை ஆகிய ஊர்களில் கைதானவர்கள் ஆறுமாத சிறைத் தண்டனை பெற்றனர். மற்ற மாவட்டங்களில் மூன்று மாதம் முதல் ஆறுவாரம் வரை தண்டனை பெற்றனர். தி.மு.க.வின் முன்னணிச் செயற்பாட்டாளர்கள் அனைவரும் சிறைப்பிடிக்கப்பட்டனர். இதுதான் தமிழ்நாட்டின் மொழிப்போராட்டத்தின் வரலாறு ஆகும்.

இந்த இரண்டாண்டு கால எழுச்சிதான் 1965ஆம் ஆண்டு மாணவ சமுதாயத்தை மாபெரும் கிளர்ச்சிக்கு தயார் ஆக்கியது.

தங்களது உடலில் தாங்களே தீவைத்து

* கீழப்பழுவூர் சின்னச்சாமி,

* கோடம்பாக்கம் சிவலிங்கம்,

* விருகம்பாக்கம் அரங்கநாதன்,

* ஆசிரியர் வீரப்பன்,

* கீரனூர் முத்து,

* சாரங்கபாணி போன்றோரும் -

அமுதம் அருந்துவது போல விஷம் அருந்தி மறைந்த தண்டாயுதபாணி, முத்து, விரலிமலை சண்முகம் போன்றோரும் - மொழிக்காக தங்கள் உயிரைத் தந்தார்கள்.

இன்றைக்கும் படங்களாக இருந்து நம்மை வழிநடத்திக் கொண்டு இருக்கிறார்கள்.

இவர்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தீரர்கள்!

* மொழிப் போர்க்களத்தின் முதல் தியாகி, கீழப்பழுவூர் சின்னச்சாமி! இவர் திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர். தனது மகளுக்கு 'திராவிடச் செல்வி' என்றுதான் பெயர் சூட்டி இருந்தார் சின்னச்சாமி!

* சென்னை கோடம்பாக்கத்தில் தீக்குளித்த சிவலிங்கம் என்ற 21 வயது இளைஞரும் திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர். நுங்கம்பாக்கம் பகுதி பொருளாளர்!

* தீக்குளித்த விருகம்பாக்கம் அரங்கநாதன் மத்திய அரசின் தொலைபேசித் துறை ஊழியர். அவரும் திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர்.

* சத்தியமங்கலம் முத்து என்ற தி.மு.க. தொண்டர் தீக்குளித்தார். அவருக்கு 22 வயது!

* அய்யம்பாளையம் ஆசிரியர் வீரப்பன் தீக்குளித்தார். தி.மு.க.வைச் சார்ந்தவர் இவர்!

* 22 வயதே ஆன விராலிமலை சண்முகம். தி.மு.க. தொண்டர்.

இத்தகைய தியாகத்தின் திருவுருவங்களால் தான் திராவிட முன்னேற்றக் கழகம் என்ற மாபெரும் தமிழியக்கம், தமிழின இயக்கம் எழுந்து நிற்கிறது.

அதனால் தான் 1967ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்ததும் அத்தகைய உணர்வோடு பேரறிஞர் அண்ணா அவர்கள் ஆட்சி நடத்தினார்கள்.

மாணவர்களின் தியாகத்தை மதிக்கும் வகையில், இந்திக்கு தமிழ்நாட்டில் இடமில்லை என்று அண்ணா அவர்கள் அறிவித்தார்கள். தமிழும் ஆங்கிலமும் என்ற இருமொழிக் கொள்கையை சட்டம் ஆக்கினார் பேரறிஞர் அண்ணா அவர்கள்!

நாம் வாழும் நாட்டுக்கு தமிழ்நாடு என்று அண்ணா அவர்கள் பெயர் சூட்டினார்கள்.

அவரது வழியில் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் தமிழாட்சி நடத்தினார்கள்.

இவ்வாறு உரையாற்றினார்.

banner

Related Stories

Related Stories