தமிழ்நாடு

“உயர் சாதியினருக்கு 10 சதவிகிதம் இட ஒதுக்கீடு அரசியல் சட்டத்திற்கு எதிரானது”: ‘தினகரன்’ நாளேடு தலையங்கம்!

உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு மூலம் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த மாணவர்களின் மருத்துவ கனவு, நனவாகியுள்ளது என `தினகரன்’ நாளேடு தலையங்கம் தீட்டியுள்ளது.

“உயர் சாதியினருக்கு 10 சதவிகிதம் இட ஒதுக்கீடு அரசியல் சட்டத்திற்கு எதிரானது”: ‘தினகரன்’ நாளேடு தலையங்கம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

மருத்துவப் படிப்புகளில் ஒ.பி.சி. இனத்தவர்களுக்கு 27 சதவிகிதம் இட ஒதுக்கீடு செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதுபற்றி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தீர்ப்பை வரவேற்பதாகவும் பாராட்டு தெரிவித்துள்ளார்.

மேலும் உயர் சாதியினருக்கு 10 சதவிகிதம் இட ஒதுக்கீடு அரசியல் சட்டத்திற்கு எதிரானது அந்த வழக்கிலும் தி.மு.க. போராடி வெற்றி பெறும் என தெரிவித்தார். இதனை கருத்தில் கொண்டு `தினகரன்’ நாளேடு “சபாஷ் சரியான தீர்ப்பு” என்ற தலைப்பில் 8.1.2022 தேதி தலையங்கம் தீட்டியுள்ளது.

அது வருமாறு :-

மருத்துவ படிப்புகளில் எந்த மாநிலத்தவரும், தான் பிறந்த மாநிலம் அல்லாத வேறு மாநிலத்துக்கு சென்று படிக்கும் வகையில் ஒன்றிய அரசு கடந்த 2017-ம் ஆண்டு முதல் நீட் தேர்வை அமல்படுத்தி வருகிறது. இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே இந்தியாவில் மருத்துவ படிப்புகளிலும், மருத்துவ மேல் படிப்புகளிலும் சேர முடியும் என்ற நிலை உருவாகியுள்ளது. இந்த தேர்வு முறையே கூடாது என தமிழக அரசு தொடர்ந்து போராடி வருகிறது. கடந்த 2019-ம் ஆண்டு, பொருளாதார ரீதியாக நலிவடைந்த உயர்சாதி பிரிவினருக்கு உயர்கல்வியில் 10 சதவீத இடஒதுக்கீடு கிடைக்க வழிவகை செய்தது. தொடர்ந்து மருத்துவ படிப்புகளுக்கான சேர்க்கையிலும் பிற்படுத்தப்பட்டோர், பொருளாதார ரீதியாக நலிவடைந்தவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கவேண்டும் என்ற கோரிக்கை வலுத்தது.

எனினும், கடந்த ஆண்டு ஜூலை 12-ம் தேதி நீட் தேர்வு தொடர்பான அறிவிப்பை ஒன்றிய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் அறிவித்தபோது, பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடு இல்லாமலேயே தேர்வு நடைபெறும் என்று கூறியிருந்தார். இதனால், பல மாநிலங்களில் போராட்டம் வெடித்தது. ஒன்றிய அரசின் அறிவிப்புக்கு எதிராக திமுக உள்பட சில அமைப்புகளால் உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு அவ்வப்போது விசாரிக்கப்பட்டு வந்தது. கடந்த இரண்டு நாளாக தொடர்ந்து இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், தற்போது அகில இந்திய ஒதுக்கீட்டில் ஓபிசி பிரிவினருக்கு வழங்கப்பட்ட 27 சதவீத இடஒதுக்கீடு செல்லும் என மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு அளித்துள்ளது.

அத்துடன், முதுநிலை மருத்துவ படிப்பிற்கான கலந்தாய்வை நடத்தவும் அனுமதி அளித்துள்ளது. அதேநேரத்தில், பொருளாதாரத்தில் நலிந்த, உயர்சாதி வகுப்பினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீட்டை இந்தாண்டு வழங்கலாம் என உத்தரவிட்டுள்ள உச்சநீதிமன்றம், பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர்சாதி வகுப்பினருக்கான இடஒதுக்கீட்டு வரம்பு செல்லுபடியாகும் தன்மை குறித்து வரும் மார்ச் 3-ம் தேதி தீர்ப்பளிக்கப்படும் எனவும் கூறியுள்ளது. ‘’இது, சமூகநீதியை பற்றிய புரிதலும், ஆழமான பற்றுதலும் கொண்ட திராவிட முன்னேற்ற கழகத்திற்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் கிடைத்த மிகப்பெரிய வெற்றி, சமூகநீதி வரலாற்றில் முக்கியமான மைல்கல்.

உச்சநீதிமன்றம் அளித்துள்ள இந்த தீர்ப்பைப் பாராட்டி வரவேற்கிறேன்’’ என திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார். பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினர் என்ற பெயரில், உயர்சாதியினருக்கு வழங்கப்படும் 10 சதவீத இடஒதுக்கீடு, அரசியல் சட்டத்துக்கு எதிரானது எனவும் திமுக தொடர்ந்துள்ள வழக்கு அரசியல் சாசன அமர்வு முன் நிலுவையில் உள்ளது. இந்த வழக்கிலும் வெற்றி காண்போம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்துள்ளார். உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு மூலம் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த மாணவர்களின் மருத்துவ கனவு, நனவாகியுள்ளது. நாடு முழுவதும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த 4 ஆயிரம் மாணவர்கள், இனி ஒவ்வொரு ஆண்டும் தங்களுடைய உரிமையை பெறுவார்கள்.” எனக் குறிப்பிட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories