தமிழ்நாடு

''முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு ஒன்றிய அரசுக்கே வழிகாட்டி” : ஆசிரியர் கி.வீரமணி புகழாரம்!

''சமூகநீதிக்கான சரித்திர நாயகர்'' முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி ஒன்றிய அரசுக்கே வழிகாட்டியுள்ளது எனத் தெரிவித்துள்ளார் ஆசிரியர் கி.வீரமணி.

''முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு ஒன்றிய அரசுக்கே வழிகாட்டி” : ஆசிரியர் கி.வீரமணி புகழாரம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

''சமூகநீதிக்கான சரித்திர நாயகர்'' முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி தந்தை பெரியார் நினைவு நாளில், சமூகநீதிக் கண்காணிப்புக் குழு ஆணை பிறப்பித்து, ஒன்றிய அரசுக்கே வழிகாட்டியுள்ளது எனத் தெரிவித்துள்ளார் ஆசிரியர் கி.வீரமணி.

தந்தை பெரியார் நினைவு நாளில் சமூகநீதிக் கண்காணிப்புக் குழுவுக்கான ஆணையைப் பிறப்பித்து அனைத்து மாநிலங்களுக்கும், ஒன்றிய அரசுக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் வழிகாட்டியுள்ளார் என்று கூறி, முதலமைச்சருக்கு நன்றியையும், கண்காணிப்புக் குழுவுக்கு வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

"தமிழ்நாட்டில் கடந்த ஏழு மாதங்களாக நடைபெறும் திராவிடர் தொடர் ஆட்சி, பொற்காலத்தின் வரலாற்றில் பதிய வைக்கும் ஆட்சியாக, ‘சமூகநீதிக்கான சரித்திர நாயகர்’ முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் நடைபெற்று வருகிறது என்ற பெருமையுடன் கூடுதலாக இந்தியாவின் பல மாநில முதலமைச்சர்களிலேயே முதல் முதலமைச்சராக இருக்கிறார் என்ற சிறப்பையும் தட்டிப் பறித்திருக்கிறது!

காலம் என்ற பாறையில் செதுக்கப்பட்டுவரும் மறுக்கப்பட முடியாத உண்மை

‘‘திராவிடர் ஆட்சி என்பது வெறும் காட்சிக்கான ஆட்சி அல்ல; மீட்சிக்கான ஆட்சி’’ என்று நாம் தொடர்ந்து கூறி வருவது, அலங்காரத்திற்காக அல்ல, அப்பட்டமான உண்மை; அதுவும் காலம் என்ற பாறையில் செதுக்கப்பட்டுவரும் மறுக்கப்பட முடியாத உண்மை என்பதை உலகு உணர்ந்து பாராட்டு தெரிவிக்கிறது!

சிறந்த ஆட்சி என்றால், அதற்கான தனித்துவக் கொள்கை நெறி- இலட்சிய இலக்குடன் செயல்படும் ஆட்சியாக அது நடைபெறவேண்டும் என்பதற்கான இலக்கணத்துடன், நாளும் நடைபெற்று வருகிறது.

பகுத்தறிவுப் பேராசான் தந்தை பெரியார் அவர்களின் 48 ஆம் ஆண்டு நினைவு நாளில் (24.12.2021) இவ்வாட்சியின் இலக்கினை மிகத் தெளிவாகப் பிரகடனப்படுத்தியுள்ளார் நமது மானமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள்.

திராவிட எழுச்சி வரலாற்றின் வைர வரிகள்!

‘‘ஈராயிரம் ஆண்டுகள் அடக்கப்பட்ட இனத்தின் மான உணர்ச்சியைத் தட்டியெழுப்பி, சுயமரியாதை ஒன்றே அடிமை விலங்கைத் தகர்த்தெறியும் வழி எனத் தொண்டாற்றிய தந்தை பெரியாரின் நினைவு நாளில், ஆதிக்கச் சக்திகளின் சூழ்ச்சிகளை வென்று - திராவிடக் கொள்கைகள் கொண்டு தமிழ் மானம் காக்கச் சூளுரைப்போம்‘’ என்ற வாக்கியங்கள் திராவிட எழுச்சி வரலாற்றின் வைர வரிகள் ஆகும்!

‘‘ஈ.வெ.ராமசாமி என்கிற நான் - திராவிட சமுதாயத்தைத் திருத்தி, உலகில் உள்ள மற்ற சமுதாயத்தினரைப்போல் மானமும், அறிவும் உள்ள சமுதாயமாக ஆக்கும் தொண்டை மேற்போட்டுக் கொண்டு, அதே பணியில் இருப்பவன்’’ என்றார்.

அறிஞர் அண்ணா மாநிலங்களவையில் தன்னை - தனது இயக்கத்தைப்பற்றிக் குறிப்பிட்டபோது, ‘‘நான் திராவிட இனத்திலிருந்து வந்தவன்’’ என்றே அறிமுகம் செய்து, தனது உரையை அழகான ஆங்கிலத்தில் நிகழ்த்தி, அவையினரை ஆச்சரியப்பட வைத்தார்!

இன்று அரசியலில் திராவிடர் ஆட்சி மூன்றாவது தலைமுறையாக - அரை நூற்றாண்டாக இந்த இலக்கை நோக்கிய சமூகநீதிக் கொடி தலைதாழாமல் பறக்கும் மாநிலமாகத் தமிழ்நாடு உள்ளது!

அதனையே ரத்தினச் சுருக்கமாக நமது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உறுதிபட தனது சூளுரையாக முழங்கியுள்ளார்!

சீலம் மிக்க ஆட்சியாக நாளும் நடைபோடுகின்றது

இது வெற்று முழக்கமோ, அலங்கார சொற்களின் ஆரவாரமோ அல்ல.

செயற்கரிய செயல்களால் பூத்துக் குலுங்கும் செப்பேடு, சிலாசனங்களாக இடம்பெறும் சீலம் மிக்க ஆட்சியாக நாளும் நடைபோடுகின்றது.

சமூகநீதிக்காக 105 ஆண்டுகளுக்குமுன் திராவிடர் கட்சி பிறந்தது! 100 ஆண்டுகளுக்குமுன் ஆட்சியாக மலர்ந்தது!

இன்றும் பெற்றதனைப் பாதுகாக்க, கற்றதனைப் பரப்பிடும் ஆட்சியாக, சமூகநீதிக் களத்தில் நாளும் சரித்திரம் படைக்கிறது!

ஒன்றிய அரசுக்கும்கூட வழிகாட்டியிருக்கிறது!

இட ஒதுக்கீடு- சமூகநீதி இதுவரை கண்காணிப்புக்குட்படாத ஏட்டுச் சுரைக்காய்போல் ஆணைகளாகவும், சட்டங்களாகவும் மட்டுமே இருந்த நிலை - இவ்வாட்சியில் செயல் வடிவில் சென்றடைந்த தூரம் எவ்வளவு என்று கண்டறிய தக்கார்களைக் கொண்ட ஒரு ‘‘சமூகநீதிக் கண்காணிப்புக் குழு’’வினை தகுதிமிக்க எண்மரைக் கொண்டு அமைத்து, இந்தியாவின் இதர மாநிலங்களுக்கும், ஏன் ஒன்றிய அரசுக்கும்கூட வழிகாட்டியிருக்கிறது!

சமூகநீதி இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முகப்புரையில் இடம் பெற்றுள்ள இலக்குகளில் முதன்மையானது.

இதுவரை இப்படி ஒரு கூர்த்த மதியுடன் கண்காணிப்புக் குழு - கொள்கையாளர்களைக் கொண்டு எங்கும் நியமித்து செயல்படவில்லை. அக்குழுவின் பணிகளும், இலக்குகளும் மிகத் தெளிவாகவும், திட்டவட்டமாகவும் வரையறையாக்கப்பட்டது கண்டு, நாம் பூரிக்கிறோம்.

மகிழ்ச்சிக் களிப்பில் திளைக்கிறோம்!

மாண்பமை முதலமைச்சருக்கு, எப்படி நன்றி சொல்வது என்ற திகைப்போடு மகிழ்ச்சிக் களிப்பில் திளைக்கிறோம்!

தமிழ்நாடு அரசின் சமூக சீர்திருத்தத் துறை 24.12.2021 (தந்தை பெரியார் நினைவு நாள் என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க நாள் இது) அன்று வெளியிட்டதை ‘விடுதலை’யில் நேற்று (27.12.2021) 3ஆம் பக்கத்தில் வெளியிட்டுள்ளோம். அதன் அடிநாதம் ஆழமானது; சுட்டும் இலக்கும் முற்றிலும் புதுமையானது மட்டுமல்ல - காலத்தால் தேவைப்படும் கருத்தியல் செயற்பாடும் ஆகும்.

சமூகநீதியின் பல பரிமாணங்களை முற்றாக உணர்ந்தவர்களையே - பேராசிரியர் சுப.வீரபாண்டியன் தலைமையில், (மற்றும் எழுவர்) தமிழ்நாடு அரசு சமூகநீதி கண்காணிப்புக் குழுவை அமைத்து- அதற்கு விரிவான அதிகாரத்தைத் தந்துள்ளது.

புத்தாக்கத்தினை புதிய விடியலாகக் கொண்டு வருவது உறுதி

இதன் பணி 2 ஆண்டுகளில் மிகப்பெரிய வரலாற்று மாற்றத்தை - அமைதிப் புரட்சிக்கு வழிவகுக்கும் வாய்ப்பினை உருவாக்கித் தரும் என்பதில் அய்யமில்லை.

‘‘பசியேப்பக்காரர்களுக்கு பந்தியில் இனி இடமில்லை’’ என்று கதவு சாத்தப்படாததோடு, ‘‘புளியேப்பக்காரர்களே சற்றே விலகியிருப்பீர்’’ என்று கூறி, ‘‘அனைவருக்கும் அனைத்தும்‘’ தரும் பகுத்துண்டு பல்லுயிர் ஓம்பு நெறியினை தொகுத்துத் தரும் தொய்விலாப் பெரும் சாதனையைச் செய்து, இவ்வாட்சியின் மகுடத்தில் ஜொலிக்கும் முத்தாக என்றும் ஒளிவீசி - புத்தாக்கத்தினை புதிய விடியலாகக் கொண்டு வருவது உறுதி என்ற நம்பிக்கையோடு,

முதலமைச்சருக்கும், அரசுக்கும் நன்றி!

நமது இதயங்கனிந்த வாழ்த்துகள்!

சமூகநீதிக் கண்காணிப்புக் குழுத் தலைவர் மற்றும் உறுப்பினர் பெருமக்களுக்கு நமது இதயங்கனிந்த வாழ்த்துகள்!

சமூகநீதிச் செயற்பாடுகளை விரைவுபடுத்தி, சாதனை படையுங்கள் என்று கூறுகிறோம்.

இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

banner

Related Stories

Related Stories