தமிழ்நாடு

திருப்பத்தூர் அருகே பதுங்கிய ராஜேந்திரபாலாஜி.. உதவிய 2 அதிமுக நிர்வாகிகள் கைது- தனிப்படை போலிஸார் அதிரடி!

திருப்பத்தூர் அருகே அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியுடன் தொடர்பில் இருந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திருப்பத்தூர் அருகே பதுங்கிய ராஜேந்திரபாலாஜி.. உதவிய 2 அதிமுக நிர்வாகிகள் கைது- தனிப்படை போலிஸார் அதிரடி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

கடந்த அ.தி.மு.க ஆட்சியில் பால்வளத்துறை அமைச்சராக இருந்தவர் ராஜேந்திர பாலாஜி. இவர் ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாகக் கூறி பலரிடம் மூன்று கோடி ரூபாய்க்கு மேல் பணமோசடி செய்ததாகப் புகார் எழுந்தது.

புதிய அரசு அமைந்ததும், அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜியிடம் பணம் கொடுத்து ஏமாந்த பலரும் போலிஸாரிடம் புகார் அளித்தனர். இதனடிப்படையில் ராஜேந்திரபாலாஜி மீது விருதுநகர் மாவட்டக் குற்றப் பிரிவு போலிஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

இதற்கிடையே சென்னை உயர்நீதிமன்றத்தில் ராஜேந்திரபாலாஜி தாக்கல் செய்த முன்ஜாமின் மனு டிச.17-ஆம் தேதி தள்ளுபடியானது. இதையடுத்து ராஜேந்திரபாலாஜி தலைமறைவானார்.

இதனால் விருதுநகர் மாவட்டக் குற்றப் பிரிவு போலிஸார் 8 தனிப் படைகள் அமைத்து ராஜேந்திர பாலாஜியை தேடி வருகின்றனர். ராஜேந்திரபாலாஜியை தனிப்படை போலிஸார் டிச.18-ஆம் தேதி முதல் வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

இந்நிலையில், ராஜேந்திரபாலாஜியின் மொபைல் போன் சிக்னலை தனிப்படை போலிஸார் கடந்த 2 நாட்களாக தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர். அதைத் தொடர்ந்து தனிப்படை போலிஸார் குறிப்பிட்ட பகுதியில் முகாமிட்டு அவரது நடவடிக்கைகளை நுணுக்கமாகக் கண்காணிக்கின்றனர்.

இதன் அடிப்படையில், முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியுடன் தொடர்பில் இருந்துவந்த அ.தி.மு.க நிர்வாகிகள் 2 பேரை போலிஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

திருப்பத்தூரை அடுத்த அக்ரகாரம் பகுதியை சேர்ந்த அ.தி.மு.க தொழில்நுட்ப பிரிவு துணை செயலாளர் விக்கி என்கிற விக்னேஸ்வரன், ஜோலார்பேட்டையை அடுத்த கோடியூர் பகுதியை சேர்ந்த இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளர் ஏழுமலை ஆகியோரை விருதுநகர் தனிப்படை காவல்துறையினர் கைது செய்து அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த கட்சி நிர்வாகிகளிடம் அடிக்கடி செல்போனில் தொடர்புகொண்டு பேசியதாகக் கண்டறியப்பட்டதின் பேரில் தனிப்படை போலிஸார் 2 பேரை கைது செய்துள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராஜேந்திரபாலாஜியை தனிப்படை போலிஸார் நெருங்கியிருப்பதாகவும், ஓரிரு நாட்களில் அவர் கைது செய்யப்படுவார் என்று காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

banner

Related Stories

Related Stories