தமிழ்நாடு

“ஓங்கி சிலரின் முகத்தில் அறைந்திருக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்” : வைகோ பாராட்டு!

தமிழ்த்தாய் வாழ்த்து கட்டாயம் என அரசாணை வெளியிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசுக்கு வைகோ பாராட்டு தெரிவித்துள்ளார்.

“ஓங்கி சிலரின் முகத்தில் அறைந்திருக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்” : வைகோ பாராட்டு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

தமிழ்த்தாய் வாழ்த்து கட்டாயம் என அரசாணை வெளியிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசுக்கு ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ பாராட்டு தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு சட்டமன்றத்தில் கடந்த செப்டம்பர் மாதம் 9 ஆம் நாள், அவை விதி எண்: 110 ன் கீழ் அறிவிப்பு வெளியிட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின், “தி.மு.க எப்போதெல்லாம் ஆட்சிப் பொறுப்பை ஏற்றதோ அப்போதெல்லாம் அது தமிழின் ஆட்சியாக, தமிழினத்தின் ஆட்சியாக இருந்துள்ளது” என்று பெருமிதம் கொண்டார்.

அதே நிலை தற்போதும் தொடர்வதற்கான பல அரசாணைகளை வெளியிட்டு வருகிறது தி.மு.க அரசு.

இனி தமிழே தெரியாமல் எவரும் தமிழ்நாட்டில் அரசுப் பணிகளில் சேர முடியாது என்பதை உறுதி செய்யும் வகையில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு ஆணைய விதிகள் மாற்றப்பட்டு, டிசம்பர் 1 ஆம் நாள் அரசாணை பிறப்பிக்கபட்டது.

அதற்கு முன்பு நவம்பர் மாதம் 1 ஆம் நாள், தமிழ் வழியில் பயின்றவர்களுக்கு அரசுப் பணிகளில் இருபது விழுக்காடு முன்னுரிமை அளிக்கும் விதிமுறைகளை உருவாக்கி அரசாணை வெளியிடப்பட்டது.

தற்போது, தமிழ்த்தாய் வாழ்த்தை, தமிழ்நாடு அரசின் பாடலாக அறிவித்து இருப்பது மு.க.ஸ்டாலின் அரசின் சாதனை மகுடத்தில் வைரமாக ஒளி வீசுகிறது.

தமிழ் தேசிய இனத்தின் தனித்துவத்தைப் பறைசாற்றும் மனோன்மணியம் சுந்தரனார் இயற்றிய “நீராருங் கடலுடுத்த” என்ற தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் இனி அனைத்து கல்வி நிறுவனங்கள், பல்கலைக் கழகங்கள், அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்துப் பொது அமைப்புகளின் நிழ்ச்சிகளிலும் நிகழ்வு தொடங்குவதற்கு முன்பாக கட்டாயம் பாடப்பட வேண்டும்.

பொது நிகழ்வுகளில் தமிழ்த்தாய் வாழ்த்து’ இசைவட்டுக்களைக் கொண்டு இசைப்பதைத் தவிர்த்து, பயிற்சி பெற்றவர்களால் வாய்ப் பாட்டாக பாடப்பட வேண்டும்.

தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடப்படும்போது அனைவரும் எழுந்து நிற்க வேண்டும். இதில் மாற்றுத்திறனாளிகளுக்கு விலக்கு அளிக்கப்படுகிறது என்றும் அரசாணை பிறப்பிக்கப்பட்டு இருப்பது வாழ்த்திப் போற்றத்தக்கது.

இந்த அரசாணையின் மூலம், தி.மு.க அரசு தமிழ் அரசு; தமிழ்த் தேசிய இனத்திற்கான அரசு என்பதை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் நிலைநாட்டி இருப்பதற்கும், இந்த ஒற்றை அரசாணையின் மூலம் “நாம் யார்?“ என்று ஓங்கி சிலரின் முகத்தில் அறைந்து இருப்பதற்கும் பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.

banner

Related Stories

Related Stories