தமிழ்நாடு

“தமிழ்நாட்டு மக்கள் அரசியல் தெளிவு பெற்றவர்கள்.. உங்கள் பருப்பு வேகாது” : JP நட்டாவுக்கு சிலந்தி பதிலடி!

தமிழ்நாட்டில் நட்டாவின் பருப்பு வேகாது என முரசொலியில் சிலந்தி கட்டுரை தீட்டியுள்ளார்.

“தமிழ்நாட்டு மக்கள் அரசியல் தெளிவு பெற்றவர்கள்.. உங்கள் பருப்பு வேகாது” : JP நட்டாவுக்கு சிலந்தி பதிலடி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

தமிழகத்தில் மட்டும்தான் ஒரு கூமுட்டையை, அறிவுஜீவி என நினைத்து பா.ஜ.க. தலைமைப் பொறுப்பைத் தந்துள்ளதுஎன்று எண்ணியிருந்தோம்! இல்லை; இல்லை- தமிழகத்தில் மட்டுமல்ல; எங்கள் தேசியத் தலைவரும் அந்த ரகத்தைச் சேர்ந்தவர்தான் என்று கருதிடும் வகையில் பா.ஜ.க.வின் தேசியத் தலைவர் நட்டா, திருப்பூருக்கு வந்து தன்னை வெளிச்சம் போட்டுக் காட்டிக் கொண்டிருக்கிறார்.

திருப்பூரில் பாரதிய ஜனதா கட்சிக்கு புதிய அலுவலகத்தைத் திறந்து வைத்துவிட்டு,அந்தக் கட்சியின் நிர்வாகிகள்முன் அவர் பேசிய பேச்சு தன்னிலை மறந்து கண்ணாடிக் கூண்டுக்குள் இருந்து பைத்தியக்காரன் கல்லெறியும் காட்சி போலிருந்தது!

‘அறுக்கத் தெரியாதவன் கையில் ஐம்பது அரிவாள்’- என்ற பழமொழிக் கேற்ப, பாரதிய ஜனதா கட்சிக்கு தமிழகத்தில் நான்கு அலுவலகங்களைத் திறந்து வைத்தார் நட்டா! அத்தோடு பாரதிய ஜனதா கட்சியின் அருமை பெருமைகளைப் பேசிவிட்டுப் போயிருக்கலாம். அதை விடுத்து அரசியல் பேசுவதாக நினைத்து அறியாத்தனத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

தமிழ்நாடு, மற்ற மாநிலங்களைப்போல் இல்லை; இது பெரியார், அண்ணா, கலைஞர் போன்ற ஆற்றல்மிக்க அரும் பெருந்தலைவர் களால் பண்படுத்தப்பட்ட நிலம்! கருவிலேயே அரசியல் கற்கத் தொடங்கிடும் மக்கள், தமிழர்கள்! இங்கு நட்டாவின் அரைவேக்காட்டு அரசியல் அரங்கேறாது என்பதை அவர்முதலில் உணர வேண்டும்!

தி.மு.கழகம் வாரிசு அரசியல் நடத்து கிறதாம்; நட்டா சொல்கிறார்! இந்தக் குற்றச் சாட்டு பல ஆண்டு காலமாகக் கூறப்பட்டு, தமிழக மக்களால் ஒதுக்கித் தள்ளப்பட்ட ஒன்று!

தி.மு.க. தலைவர்கள், முன்னணியினர் தங்களை மட்டுமல்ல; தங்கள் குடும்பத்தையே மக்கள் சேவைக்காக நேர்ந்துவிட்டு விட்டவர்கள்!

பதவியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் கழகக் கண்மணிகள் தோளோடு தோளாக எங்கள் தலைமை மட்டுமல்ல; தங்கள் குடும்பமே ஒன்றிணைந்து மக்கள் பணியாற்றிட இயங்கும். இந்த இயக்கமே குடும்ப இயக்கமாக, அண்ணா காலத்தில் அண்ணன் - தம்பி உறவோடு, கலைஞர் காலத்தில் உயிரினும் மேலான உடன்பிறப்புகள் என்ற உணர்வோடு, இன்றைய தலைவர் தளபதி காலத்தில், ‘உங்களில் ஒருவன்’ எனும் உறவு முறையோடு - வளர்ந்து வரும் இயக்கம்!

இந்த இயக்கம் குடும்ப இயக்கம்; அதனால் அங்கே குடும்ப அரசியல்தான் இருக்கும்! ஆனால் நட்டா அவர்களே; உங்கள் இயக்க நிலை என்ன, நீங்கள் எதிரியை நோக்கி ஒரு விரல் காட்ட, மற்ற விரல்கள் உங்களை நோக்குவதை எண்ணிப் பார்த்தீர்களா? உங்களோடு மேடையில் அமர்ந்திருந்தாரே கர்நாடக அமைச்சர் சி.டி.ரவி! நீங்கள் குடும்ப அரசியல் பற்றிப் பேசியபோது, அவர் கூனிக்குறுகி நெளிந்ததைப் பார்த்தீர்களா?

பா.ஜ.க.வின் வாரிசு அரசியல் சந்தி சிரிக்கும்போது - நீங்கள் வாரிசு அரசியல் பற்றிப் பேசியது, “ஊசியைப் பார்த்து சல்லடை, உன் வாயில்ஒரு ஓட்டை” என்று கூறியதுபோல் இல்லையா?

சி.டி.ரவி அமைச்சராக இருக்கும் கருநாடகா வில் பாரதிய ஜனதா ஆட்சியில் எடியூரப்பா முதலமைச்சர், அவரது மூத்த மகன் ராகவேந்திரா நாடாளுமன்ற உறுப்பினர், இளையமகன் கருநாடக மாநில பா.ஜ.க.வின் பொதுச் செயலாளர்.உண்டா; இல்லையா? இதற்குப் பெயர் என்ன?

இன்றைய கருநாடக முதல்வர் பஸ்வராஜ் பொம்மை, முன்னாள் முதல்வர் பொம்மையின் மகன் அல்லவா? - இந்த அரசியலுக்கு என்ன பெயர் சூட்டுவார் நட்டா? - இவை எல்லாம் நட்டாவுக்கு அதிக பரிட்சயமில்லா தெற்கில் நடப்பது? அந்தத் தெற்கிலும் ஒரே ஒரு மாநிலத்தில்தான் பாரதிய ஜனதா ஆட்சி; அங்கேதான் இப்படி வாரிசு அரசியல் கொட்டமிடுகிறது! தமிழ்நாட்டு வாரிசு அரசியல்பற்றிக் கவலை கொள்ளும் நட்டா, உடனேகருநாடகா சென்று, பொம்மையை முதல்வர் பொறுப்பிலிருந்து நீக்கி, எடியூரப்பா மற்றும் அவரது புதல்வர்களை அரசியலில் இருந்து நீக்கி, ஜனநாயகத்தைக் காப்பாற்றிடுவாரா?.

சரி; தெற்கு அரசியலை விடுங்கள். வட இந்தியாவில் என்ன நிலை..? ‘வாரிசு அரசியல் தி.மு.க. நடத்துகிறது; ஜனநாயகம் செத்து விடும்’ என்று புலம்பும் தேசியத் தலைவர் நட்டாவுக்கும், தமிழகத்தில் பா.ஜ.க.வை வளர்க்க நினைத்து ‘ஒற்றை ஓட்டு பா.ஜ.க.’வாக ஆக்கிய தமிழகத் தலைவருக்கும் வைக்கும் கேள்வி இதுதான்! பட்டியலிடப்பட்டிருக்கும் இவர்களெல்லாம் யார்? விளக்குவார்களா?

நாடாளுமன்ற மக்களவையில் பா.ஜ.க. உறுப்பினர்களாக விளங்கும் அனுராக் தாகூர், துஷ்யந்சிங், பூனம் மகஜன், பிரிதம் முண்டே, பிர வேஷ் சாகிப் சிங் வர்மா, பி.ஒய். ராகவேந்திரா இவர்களெல்லாம் யார்? தேசியத் தலைவரும், தமிழக ஒற்றை ஓட்டுத் தலைவரும் விளங்கிக்கொள்ள விளக்கமாகத் தருகிறோம்.

அனுராக் தாகூர் (இமாச்சலப்பிரதேச முன்னாள் முதல்வர் மகன்), துஷ்யந்சிங் (ராஜஸ்தான் முன்னாள் முதல்வரின் மகன்), பி.ஒய்.ராகவேந்திரா (கருநாடகத்தின் முதல்வர் எடியூரப்பாவின் மகன்), ராஜ்பீர்சிங் (முன்னாள் உ.பி.முதல்வர் கல்யாண்சிங் மகன்), பிரவேஷ் சாகிப் சிங் வர்மா (முன்னாள் டெல்லி முதல்வரின் மகன்), சங்கமித்ரா மயூர்யா (உ.பி.யின் அமைச்சர் சுவாமி பிரசாத் மயூராவின்மகள்), பூனம் மகஜன் (ஒன்றியத்தின் மறைந்த அமைச்சர் பிரமோத் மகஜன் மகள்), பிரிதம் முண்டே (ஒன்றிய அமைச்சராக இருந்து மறைந்த அமைச்சர் கோபிநாத் முண்டே மகள்), மேனகா காந்தி, அவரது மகன் வருண்காந்தி இருவருமே நாடாளு மன்ற உறுப்பினர்கள்.

இப்படி பி.ஜே.பி.யில் உள்ள அரசியல் வாரிசுகள் பட்டியலை அடுக்கிக்கொண்டே போகலாம். இது மட்டு மல்ல!

ஒன்றியத்தின் முன்னாள் அமைச்சர் கோபிநாத் முண்டேயின் ஒரு மகள் நாடாளுமன்ற உறுப்பினர் என்றால், இன்னொரு மகள் அவரது மாநிலத்தின் அமைச்சராகவும் இருந்துள்ளார். இன்றைய தினம் ஒன்றிய அமைச்சராக இருக்கும் ராஜ்நாத் சிங் அவர்களின் மகன்பங்கஜ்சிங் உ.பி.யில் சட்டமன்ற உறுப்பினர்.

ஏன்? பியூஸ்கோயல் பி.ஜே.பி.யின் பொருளாளர் வேத்பிரகாஷ் கோயல் மகன்தானே! பியூஸ் கோயல் தாயார் மூன்று முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர்.

இப்படி, இன்னும் ஒரு நீளமான பட்டியலே இருக்கிறது; இதெல்லாம் தெரியாது ஏதோ ஒரு அரிய பெரிய கண்டுபிடிப்பை தமிழ்நாட்டில் கண்டுபிடித்தது போல பேசியிருக்கிறார் நட்டா!

சமீபத்தில் வெளிவந்த ஒரு ‘சர்வே’படி, ஏறத்தாழ 45 பி.ஜே.பி. எம்.பி.க்கள் நாடாளுமன்ற இரு அவையிலும் ‘வாரிசு’களாக விளங்குகின்றனர். இதெல்லாம் தெரியாமல் நட்டா வாய்நீளம் காட்டியுள்ளார். வாரிசு அரசியல் குறித்து, அடுக்கடுக்கான வாரிசுகளை தங்களது கட்சியின் எம்.பி.க்களாக, எம்.எல்.ஏ.க்களாக, மந்திரிகளாக வைத்துள்ள கட்சியின் அகில இந்தியத் தலைவர் பேசுவது அறியாத்தனமா? அல்லது அரைவேக் காட்டுத்தனமா?

நட்டா போன்ற பா.ஜ.க.வின் அகில இந்திய கூமுட்டைத் தலைவர்களுக்கு ஒன்றை கூறிக்கொள்கிறோம். இது தமிழ்நாடு - இங்கு கல்லும் கவிபாடும் என்பது போல, இந்த மண்ணின் நகரங்கள் மட்டுமல்ல; சிற்றூர்கள், குக்கிராமங்கள் எங்கும் வாழும் மக்கள் அரசியல் தெளிவு பெற்றவர்கள். இங்கு ‘உங்கள்பருப்பு விற்பனையாகாது; வேகவும் செய்யாது;பம்மாத்தும் செல்லாது!’

சிலந்தி

நன்றி - முரசொலி நாளேடு

banner

Related Stories

Related Stories