தமிழ்நாடு

மழை பாதிப்பு: ”மேம்போக்காக ஆய்வு நடத்திட வேண்டாம்” - ஒன்றிய குழுவுக்கு தினகரன் நாளேடு வலியுறுத்தல்!

நிரந்தர தீர்வு என்ன என்பதை மக்கள் பிரதிநிதிகளின் கருத்துகளை கேட்டறிந்து, நிரந்தர திட்டங்களை தீட்ட ஒன்றிய அரசு உதவி புரிவதற்கு வழிவகை செய்ய வேண்டும் என தினகரன் நாளேடு வலியுறுத்தியுள்ளது.

மழை பாதிப்பு: ”மேம்போக்காக ஆய்வு நடத்திட வேண்டாம்” - ஒன்றிய குழுவுக்கு தினகரன் நாளேடு வலியுறுத்தல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

ஒன்றியக் குழுவினர் மேம்போக்காக ஆய்வு நடத்தாமல் முழு விவரங்களையும் திரட்டிச் சென்று வெள்ளச்சேத நிவாரணமாக தமிழ்நாடு அரசு கோரிய ரூ.2079 கோடி முழுமையாக வழங்க வேண்டும் என்று ‘தினகரன்’ ஏடு 22.11.2021 தேதிய இதழில் ‘முறையான நிவாரணம்’ என்ற தலைப்பில் தலையங்கத்தில் வலியுறுத்தியுள்ளது.

இது குறித்து ‘தினகரன்’ நாளேடு வெளியிட்டுள்ள தலையங்கம் வருமாறு:-

பருவமழை தீவிரம் காரணமாக தமிழகத்தில் பல மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, டெல்டாவில் தஞ்சை, திருவாரூர் மற்றும் கடலூர், கன்னியாகுமரி உள்ளிட்ட பல மாவட்டங்கள் இன்னமும் வெள்ளப்பாதிப்பில் இருந்து மீளவில்லை.

சென்னையில் கடந்த 2015ம் ஆண்டுக்கு பின்னர் கனமழை பெய்ததால், சாலைகள், குடியிருப்புகளில் வெள்ளம் புகுந்து பொதுமக்கள் அதிக இன்னல்களை அனுபவித்து வருகின்றனர். குமரியில் பெய்து வரும் கனமழையால் ஆயிரக்கணக்கான வீடுகள் வெள்ளத்தில் மிதக்கின்றன. தமிழகத்தில் பல அணைகள் முழு கொள்ளளவை எட்டிவிட்ட நிலையில், ஆறுகளில் வெள்ளம் பாய்கிறது. குளங்கள் உடைந்து தண்ணீர் ஊருக்கு வருமோ என்ற அச்சமும் நிலவுகிறது. சாகுபடி நடக்குமா என கடந்த மாதம் விவசாயிகள் காத்திருந்த நிலையில், இப்போது வெள்ளநீர் எப்போது வடியும் என காத்திருக்கின்றனர்.

டெல்டா மாவட்டங்களில் மட்டுமே 70 ஆயிரம் ஏக்கர் பரப்பில் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. தென்மாவட்டங்களில் 30 ஆயிரம் ஏக்கருக்கு மேல் விவசாய நிலங்கள் தண்ணீரில் மிதக்கின்றன. தமிழகத்தில் கனமழையால் 50க்கும் மேற்பட்டோர் இறந்துள்ள நிலையில், 9600 குடிசைகளும், 2100 வீடுகளும் இடிந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில், வெள்ள சேதங்களை பார்வையிட நேற்று மத்திய குழுவினர் டெல்லியில் இருந்து சென்னை வந்தனர். மத்திய உள்துறை இணை செயலாளர் ராஜீவ் சர்மா தலைமையில் 7 பேர் கொண்ட குழுவினர் இன்றும், நாளையும் தமிழகம் முழுவதும் இரு குழுக்களாக வெள்ள சேதங்களை பார்வையிட உள்ளனர்.

கடந்த காலங்களில் வெள்ள சேதங்களை மத்திய குழுவினர் பார்வையிடும்போது, ஏதாவது சில இடங்களை பெயரளவுக்கு பார்வையிட்டு செல்வது வழக்கமாக இருந்துள்ளது. மாநிலம் முழுவதும் பாதிப்பு அதிகமுள்ள இடங்களை கண்டறிந்து, அங்கு நேரடியாக சென்று பார்வையிடுவதோடு, அங்குள்ள மக்களின் கருத்துகளையும் நிதானமாக கேட்டறிவதே நல்லது. மேலும் வெள்ள சேத இடங்களை பார்வையிடும்போது அங்குள்ள எம்.பி., எம்எல்ஏக்களின் கருத்துகளை கேட்டறிவதோடு, விவசாய சங்கங்கள், உள்ளாட்சி பிரதிநிதிகளின் ஆலோசனைகளையும் மத்திய குழுவிற்கு எடுத்துச் செல்ல வேண்டும்.
மத்திய குழுவினர் இன்றும், நாளையும் மேம்போக்காக ஆய்வு நடத்தாமல், வெள்ள சேத விபரங்களையும் முழுமையாக திரட்டி செல்ல வேண்டும்.

சென்னை, கன்னியாகுமரி, கடலூர் உள்ளிட்ட மாவட்டங்கள் எப்போது வெள்ளம் வந்தாலும் கடும் பாதிப்புக்கு உள்ளாகின்றன. அதற்கு நிரந்தர தீர்வு என்ன என்பதை மக்கள் பிரதிநிதிகளின் கருத்துகளை கேட்டறிந்து, நிரந்தர திட்டங்களை தீட்ட ஒன்றிய அரசு உதவி புரிவதற்கு வழிவகை செய்ய வேண்டும். தமிழகத்திற்கு வெள்ள சேத நிவாரணமாக ரூ.2079 கோடி தேவை என ஒன்றிய அரசிடம் மாநில அரசு கேட்டுள்ளது. முழு நிவாரண தொகையும் வழங்குவதோடு, தமிழகத்தின் வெள்ளப் பாதிப்புகளை சரி செய்ய மத்திய குழு பரிபூரணமாக துணை நிற்க வேண்டும்.

banner

Related Stories

Related Stories