தமிழ்நாடு

வாயில் டேப் ஒட்டி ஆடுகளை இன்னோவா கார்களில் கடத்திய கும்பல்... சிக்கியது எப்படி?

தூத்துக்குடி மாவட்டத்தில் ஆடுகள் திருட இன்னோவா கார்களை பயன்படுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வாயில் டேப் ஒட்டி ஆடுகளை இன்னோவா கார்களில் கடத்திய கும்பல்... சிக்கியது எப்படி?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சூரங்குடி, குளத்தூர், எப்போதும் வென்றான், மாசார்பட்டி, குரும்பூர், கயத்தாறு, திருச்செந்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த சில மாதங்களாக அடிக்கடி ஆடுகள் திருடுபோயின.

இந்த திருட்டு சம்பவங்கள் தொடர்பாக ஆடுகளின் உரிமையாளர்கள் காவல் நிலையங்களில் புகாரளித்தனர். ஆடுகளைத் திருடுபவர்களை கைது செய்ய மாவட்ட எஸ்.பி ஜெயக்குமார், விளாத்திகுளம் காவல் துணை கண்காணிப்பாளர் பிரகாஷ் மேற்பார்வையில் தனிப்படை அமைத்தார்.

ஆடுகள் திருடு போன பகுதியிலுள்ள சி.சி.டி.வி கேமரா பதிவுகள் மூலம் தனிப்படையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வந்தனர். சோதனைச் சாவடிகளிலும் போலிஸார் சோதனை செய்து வந்தனர்.

இந்நிலையில், வேம்பார் சோதனைச்சாவடியில் போலிஸார் சோதனை நடத்தியபோது, சிவகங்கை மாவட்டம் காரைக்குடியைச் சேர்ந்த செல்வராஜ் என்பவர் ஓட்டி ந்த இன்னோவா காருக்குள் வாயில் டேப்பால் ஒட்டப்பட்ட நிலையில் ஆடுகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

இதனால் சந்தேகமடைந்த போலிஸார் சாத்தையன் மற்றும் அதே காரில் வந்த காரைக்குடியைச் ஆறுமுகம் ஆகிய 2 பேரிடமும் விசாரணை நடத்தினர். விசாரணையில் தூத்துக்குடி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஆடுகளைக் கடத்தி கார்களில் கொண்டு சென்றது தெரியவந்தது.

வாயில் டேப் ஒட்டி ஆடுகளை இன்னோவா கார்களில் கடத்திய கும்பல்... சிக்கியது எப்படி?

இதையடுத்து இருவரையும் கைது செய்து அவர்களிடமிருந்த 14 ஆடுகள் மற்றும் ஆடு திருடுவதற்கு பயன்படுத்தப்பட்ட ரூ.50 லட்ச ரூபாய் மதிப்புள்ள 3 கார்களையும் பறிமுதல் செய்தனர். ஆடுகளை உரியவர்களிடம் ஒப்படைத்தனர்.

விசாரணையில், இந்த கும்பல் தூத்துக்குடி மாவட்டத்தில் மட்டும் 20 இடங்களில் 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 101 ஆடுகளை திருடியுள்ளனர். இவர்கள் 2 பிரிவுகளாக பிரிந்து காரில் சென்று ஆடுகளை திருடுவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளனர்.

போலிஸாரிடம் ஆடு திருடர்கள் அளித்த வாக்குமூலத்தில், “தூத்துக்குடி பகுதியில் பகல் நேரத்தில் சில நாட்கள் நோட்டமிட்டு, ஆள் நடமாட்டம், நாய்த்தொல்லை இல்லாத இடங்களை தேர்வு செய்வோம்.

நள்ளிரவு 2 மணிக்கு அப்பகுதிக்குச் சென்று ஆடுகளைத் தூக்கி, அவை கத்தாமல் இருக்க வாயில் டேப்பைச் சுற்றி ஒட்டி, பத்து ஆடுகள் சேர்ந்ததும் காரில் போட்டு காரைக்குடிக்கு கொண்டு சென்று கறிக்கடைகளில் விற்போம்” எனத் தெரிவித்துள்ளனர்.

இந்த கும்பலோடு தொடர்புடைய மற்ற திருடர்களை போலிஸார் தீவிரமாக தேடி வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டத்தில் ஆடுகள் திருட இன்னோவா கார்களை பயன்படுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories