தமிழ்நாடு

பாலியல் தொல்லையால் மாணவி தற்கொலை : தலைமறைவாக இருந்த பள்ளி முதல்வர் மீரா ஜாக்சன் கைது - நடந்தது என்ன?

கோவை 12 ம் வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில், சின்மயா வித்யாலயா மெட்ரிக் பள்ளி முதல்வர் மீரா ஜாக்சனை தனிப்படை போலிஸார் கைது செய்துள்ளனர்.

பாலியல் தொல்லையால் மாணவி தற்கொலை : தலைமறைவாக இருந்த பள்ளி முதல்வர் மீரா ஜாக்சன் கைது - நடந்தது என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

பாலியல் தொல்லையால் மாணவி தற்கொலை செய்து கொண்ட வழக்கில் ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி மீதும், பள்ளி முதல்வர் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தைச் சேர்ந்த 17 வயது மாணவி ஒருவர் கடந்த வியாழனன்று மாலையில் வீட்டின் அறையில் இருந்த மின்விசிறியில் தூக்கிட்டு மாணவி தற்கொலை செய்துகொண்டார். தற்கொலை செய்துகொண்ட மாணவி தமக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர்கள் குறித்து கடிதமும் எழுதி வைத்துள்ளார்.

அந்த மாணவி படித்து வந்த பள்ளியில் மிதுன் சக்கரவர்த்தி என்ற ஆசிரியர், மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாகவும், அவரிடமிருந்து தப்பவே பள்ளியில் இருந்து விலகியதாகவும், இருப்பினும் தொடர்ந்து தொல்லை கொடுத்ததால் தனது மகள் தற்கொலை செய்துகொண்டதாகவும் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் மாணவியின் தந்தை புகார் அளித்தார்.

ஆசிரியரின் பாலியல் தொல்லை குறித்து ஏற்கனவே பள்ளி நிர்வாகத்திடம் புகார் அளித்தும் இந்த விஷயம் வெளியே தெரிந்தால் பள்ளியின் பெயர் கெட்டுவிடும் என்பதால், அப்படியே மூடி மறைத்துவிட்டதாகவும், எனவே சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீதும், பள்ளி நிர்வாகத்தினர் மீதும் நடவடிக்கை எடுக்கவேண்டும் எனக் கோரினர்.

இதையடுத்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி மீது போக்சோ சட்டத்தின் கீழ் தற்கொலைக்கு தூண்டுதல், பாலியல் தொல்லை அளித்தல் ஆகிய இரு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து, நீதிபதி முன் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

அதனைத் தொடர்ந்து அப்பள்ளியின் முதல்வர் மீரா ஜாக்சன் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவரை கைது செய்ய கோவை மாநகர போலிஸார் சார்பில் இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் பெங்களுரில் தலைமறைவாக இருந்த சின்மயா வித்யாலயா மெட்ரிக் பள்ளி முதல்வர் மீரா ஜாக்சனை தனிப்படை போலிஸார் இன்று காலை கைது செய்தனர். இதனைத் தொடர்ந்து அவரிடம் தொடர்ந்து போலிஸார் விசாரணை நடத்திவருகின்றனர்.

banner

Related Stories

Related Stories