தமிழ்நாடு

பொய் மூட்டைகளை கட்டி மலிவு அரசியல் செய்யும் பாஜக; ஏதுமறியாதது போல் நடிக்கும் எல்.முருகன் - CPI எச்சரிக்கை

தொழிலாளர்களை பிளவுபடுத்தும் ஒன்றிய அரசின் சதி அரசியலை பா.ஜ.கவினர் மூடி மறைத்து வருகிறார்கள் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டின் விவசாயத் தொழிலாளர் சங்கம் சாடியுள்ளது.

பொய் மூட்டைகளை கட்டி மலிவு அரசியல் செய்யும் பாஜக; ஏதுமறியாதது போல் நடிக்கும் எல்.முருகன் - CPI எச்சரிக்கை
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

பா.ஜ.க தலைவர்கள் உண்மை பேச வேண்டும் எனக் குறிப்பிட்டு தமிழ் மாநில விவசாயத் தொழிலாளர் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின் விவரம் பின்வருமாறு:-

ஒன்றிய பா.ஜ.க அரசு தமிழ்நாட்டில் நடைபெற்று வரும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்திற்கு பல மாதங்களாக பணம் அனுப்பவில்லை. இதனால் திட்டப் பணியில் வேலை செய்து ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் நான்கு, ஐந்து மாதங்களாக வேலை செய்த நாட்களுக்கான ஊதியப் பாக்கியை பெறுவதற்காக போராடி வருகின்றனர்.

இதற்கிடையில் ஒன்றிய அரசின் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சகம், வேலை உறுதியளிப்புத் திட்டத் தொழிலாளர்களின் வருகைப்பதிவேடு மற்றும் ஊதியப் பட்டியல் ஆகியவற்றை பட்டியல் சாதியினர், பழங்குடியினர் மற்றும் இதரப் பிரிவினர் எனத் தனித்தனியாக பிரிந்து மூன்றாக வகைப்படுத்த வேண்டும் என மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டது. இதன் மூலம் “எங்களுக்கு வேலை கொடு, ஊதியம் கொடு” என்று ஒன்றுபட்டு கேட்டு வந்த தொழிலாளர்களுக்கு இடையில், அவர்களுக்கு வேலை, ஊதியம் கிடைக்கிறது. எங்களுக்கு எங்கே வேலை, ஊதியம் என கேட்கும் நிலையை உருவாக்கி, மோதல் போக்கை ஏற்படுத்தி, பகை வளர்க்கும் மலிவான செயலில் ஈடுபட முனைந்தது.

தொழிலாளர்களை பிளவுபடுத்தும் ஒன்றிய அரசின் சதி அரசியலை பா.ஜ.கவினர் மூடி மறைத்து வருகிறார்கள். ஆனால் தொழிலாளர்கள் எதிர்ப்புத் தெரிவித்து போராடியதாலும், மாநில அரசும், முதலமைச்சரும் உடனடியாக தலையிட்டதாலும் ஒன்றிய அரசின் சமூக நீதி அமைச்சகம் தொழிலாளர்களை சாதிகளாக பிளவுபடுத்தும் உத்தரவை திரும்பப் பெறுமாறு ஊரக வளர்ச்சித் துறையை வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக 11.10.2021ஆம் தேதி தான் சமூகநீதி அமைச்சகம், ஊரக வளர்ச்சித் துறை அமைச்சக அதிகாரிகள், நிதித்துறை அமைச்சக அதிகாரிகளுடன் பேசியுள்ளனர். இது தொடர்பாக ஒன்றிய அரசு இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடவில்லை என்பதை அறிந்திருந்தும் எல்.முருகன் ஏதுமறியாது இருப்பது போல் நடிப்பது எதற்காக?

பொய் மூட்டைகளை கட்டி மலிவு அரசியல் செய்யும் பாஜக; ஏதுமறியாதது போல் நடிக்கும் எல்.முருகன் - CPI எச்சரிக்கை

முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அ.இ.அ.தி.மு.க சுய ஆதாயம் தேடும் கும்பலாக மாறிப்போனதுடன் பாஜகவின் தமிழ்நாட்டு முகமையாக செயல்பட்டு வந்தது. அப்போதுதான் அ.இ.அ.தி.மு.க ஆட்சியில் தான் வேலை உறுதியளிப்புத் திட்டத்தில் ரூ.246 கோடி ஊழல் நடந்த முறைகேடு வெளியானது. இதனை எல்.முருகனும் பாஜகவினரும் மூடிமறைப்பது யாருக்காக? அ.இ.அ.தி.மு.கவுடன் கூட்டணி வைத்து வெட்கமின்றி பவனி வந்ததை தமிழ்நாட்டு மக்கள் எளிதில் மறந்து விடமாட்டார்கள் என்பதை முருகனும், அண்ணாமலையாரும் அறிந்து கொள்ள வேண்டும். பகுத்தறியும் தனித்துவப் பண்பு கொண்ட தமிழ்நாட்டில் பா.ஜ.கவின் பொய் மூட்டை வியாபாரம் செல்லுபடியாகாது.

தமிழ் மாநில விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் முறையீட்டைத் தொடர்ந்து, முதலமைச்சர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் மேற்கொண்ட தொடர் நடவடிக்கையால் ஒன்றிய அரசு கொடுக்காமல் நிறுத்தி, வைத்திருந்த கூலிப் பாக்கிக்காகத் தான் ரு.1331 கோடி நிதி விடுவித்துள்ளது. இத்திட்டக்கணக்கில் ஒன்றிய அரசு மேலும் பல நூறு கோடி தமிழ்நாட்டுக்கு தர வேண்டும் என்பதை ஒன்றிய இணை அமைச்சர் எல். முருகன் அறிந்து பேச வேண்டும் .

முதலமைச்சர் தலையீட்டால் நூறுநாள் வேலைத் திட்டத் தொழிலாளர்களின் ஊதியப் (கூலி) பாக்கி, அவர்களது வங்கிக் கணக்கிற்கு வந்து கொண்டிருக்கிறது. இந்த உண்மைகளை மறைத்து, பொய்களை மூட்டை கட்டி வியாபாரம் செய்யும் பா.ஜ.கவினர் உடனடியாக அவர்களது மலிவான செயலை நிறுத்திக் கொள்ள வேண்டும் என தமிழ் மாநில விவசாயத் தொழிலாளர் சங்கம் எச்சரிக்கிறது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories