தமிழ்நாடு

தமிழ்நாடு என்று எப்போது அழைக்கப்பட்டது? - கழகமும் மொழிவாரி மாகாணமும் : ஊடகவியலாளர் ப.திருமாவேலன் கட்டுரை!

‘எல்லாரும் பிரிந்து போனபிறகு தமிழ்நாட்டுக்கு தமிழ்நாடு என்று பெயர் சூட்டாமல் ஏன் இருக்க வேண்டும்? அதனைப்பார்த்துக் கொண்டு நான் ஏன் உயிரோடு இருக்க வேண்டும்?' என்று கேட்டவர் தந்தை பெரியார்.

தமிழ்நாடு என்று எப்போது அழைக்கப்பட்டது? - கழகமும் மொழிவாரி மாகாணமும் : ஊடகவியலாளர் ப.திருமாவேலன் கட்டுரை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

செந்தமிழம் சேர்ந்த பன்னிருநிலத்தும்' என்றது தொல்காப்பியம். ‘வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ் கூறு நல்லுலகு' என்று தொல்காப்பியப் பாயிரத்தில் பனம் பாரனார் சொன்னார். ‘நெடியோன் குன்றமும் தொடியோன் பௌவமும் தமிழ்வரம் புறந்த தண்புனல் நாடு' - என்கிறது சிலப்பதிகாரம். என்றெல்லாம் அழைக்கப்பட்ட நாடு ‘தமிழ்நாடு' என்று எப்போது அழைக்கப்பட்டது?

1968 ஆம் ஆண்டு சூலை 18 ஆம் நாள் திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சி அமைந்தபிறகு அன்னைத் தமிழகத்துக்குப் பெயர் சூட்ட தனயன் அண்ணா, முதலமைச்சராக வந்த பிறகு தான் நடந்தது. ‘ஒரே ஒரு சங்கரலிங்கனார் தான் செத்துப்போயிருக்கிறார் என்று நினைப்பீர்களேயானால் தமிழ்நாடு என்ற ஒவ்வொரு எழுத்துக்கும் சேர்த்து ஐந்து உயிர்களைத் தரத் தயாராக இருக்கிறோம்' என்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் குரல் கொடுத்தவர் தமிழினத்தலைவர் கலைஞர் அவர்கள்!

‘எல்லாரும் பிரிந்து போனபிறகு தமிழ்நாட்டுக்கு தமிழ்நாடு என்று பெயர் சூட்டாமல் ஏன் இருக்க வேண்டும்? அதனைப்பார்த்துக் கொண்டு நான் ஏன் உயிரோடு இருக்க வேண்டும்?' என்று கேட்டவர் தந்தை பெரியார். பிள்ளை பிறந்ததும் பேர் வைத்திருந்தால் பிறந்தநாளைக் கொண்டாடலாம். பெயர் வைக்கவே 12 ஆண்டுகள் ஆனதால்தான் பெயர் வைத்த நாளே முக்கியமானதாகிறது.

தமிழ்நாடு என்று எப்போது அழைக்கப்பட்டது? - கழகமும் மொழிவாரி மாகாணமும் : ஊடகவியலாளர் ப.திருமாவேலன் கட்டுரை!

‘தமிழ்நாடு வாழ்க' என்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் குரல் கேட்க நடந்த போராட்டங்கள், தமிழக வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கத்தக்கவை. அதில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் பங்களிப்புகள் உன்னதமானவை. ‘திராவிட நாடு' கேட்டு போராடிய காலத்திலும் மொழிவாரி மாகாணம் அமைக்கும் போராட்ட நோக்கத்தை கழகம் ஏற்றுக் கொண்டது. தமிழர் பெரும்பான்மை வாழும் பகுதிகள் தமிழ்நாட்டுக்குள் தான் இருக்க வேண்டும் என்பதை ஒப்புக்கொண்டது தி.மு.க அதேநேரத்தில் ஆந்திரம், கேரளம், கர்நாடகம் ஆகிய திராவிட மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த மாகாணங்கள் பிரிந்து சென்று தனிக் கூட்டமைப்பை உருவாக்க வேண்டும் என்பதை இலக்காகக் கொண்டு போராட்டங்களை முன்னெடுத்தது தி.மு.க 1963 வரை இத்தகைய போராட்ட இலக்குகள் இருந்தன.

இந்நிலையில் தமிழகத்தின் வடக்கு எல்லை, தெற்கு எல்லை ஆகியவற்றை காக்கும் போராட்டங்களில் கழகத்தின் செயல்பாடுகள் கவனத்துக்குரியவை. வடக்கு எல்லை என்பது திருத்தணியை தமிழகத்துக்கு பெறும் போராட்டம் ஆகும். தென் எல்லை என்பது குமரி உள்ளிட்ட பகுதிகளை தமிழகத்துடன் இணைக்கும் போராட்டம் ஆகும்.

மும்முனையின் ஒரு முனை!

சித்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த தமிழர்கள் தங்கள் பகுதி தமிழகத்துடன் இணைக்கப்பட வேண்டும் என்று போராட்டம் நடத்தினார்கள். தமிழரசுக் கழகத் தலைவர் ம.பொ.சி.யும், விநாயகமும் அண்ணாவைச் சந்தித்து இந்த போராட்டத்துக்கு ஆதரவு தரவேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார்கள். சித்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த கழக உறுப்பினர்கள் அனைவரும் இதில் பங்கெடுப்பார்கள் என்று அண்ணா அறிவித்தார். 144 தடை உத்தரவை மீறி கழகத் தொண்டர்கள் ஏ.எல்.சி.கிருஷ்ணசாமி தலைமையில் மறியல் செய்து கைதானார்கள். இதைத் தொடர்ந்து தினந்தோறும் ரயிலை மறிப்பது என்று முடிவெடுக்கப்பட்டது. தி.மு.க.வினர் இதில் பங்கெடுத்தனர். ‘இப்படி போராடுபவர்கள் அனைவரும் முட்டாள்கள்' என்று பிரதமர் நேரு கூறியது போராட்டக்காரர்களை அதிகம் கொந்தளிக்க வைத்தது.

தமிழர்களை மிகக் கேவலமான முறையில் பிரதமர் நேரு விமர்சிப்பதைக் கண்டித்து அவருக்கு எதிராக கருப்புக் கொடி போராட்டத்தை தி.மு.க செயற்குழு அறிவித்தது. இதுதான் வரலாற்றுச் சிறப்பு மிக்க மும்முனைப் போராட்டம் ஆகும். மும்முனைப் போராட்டத்தில் ஒன்று தான், சித்தூர் போராட்டத்தை கொச்சைப்படுத்திய நேருவைக் கண்டித்து ரயில் மறியல் நடத்துவது என்பதாகும். இப்போராட்டம் எழுச்சியுடன் நடத்தியது. நாடு முழுவதும் இரயில் மறியல் போராட்டத்தை கழகம் அறிவித்தது. (1953 ஜூலை 15) சுமார் ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் தமிழகம் முழுவதும் கைது செய்யப்பட்டு சிறை வைக்கப்பட்டார்கள். தூத்துக்குடியில் நடந்த ரயில் மறியல் போராட்டத்தில் பங்கெடுத்த கழகச் செயல்வீரர்களை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. நான்கு பேர் உயிரிழந்தார்கள்.

1.10.1953 அன்று மதுரைக்கு வந்தார் பிரதமர் நேரு. மதுரை முத்து தலைமையில் நேருவுக்கு கருப்புக் கொடி காட்டப்பட்டது. நேரு செல்லும் பாதை எல்லாம் கருப்புக் கொடி பறந்தது. ‘நான்சென்ஸ் என்று எங்களைக் கூறிய நேருவே திரும்பிப் போ' என்று முழக்க மிட்டார்கள். கோவையிலும் பிரதமருக்கு கருப்புக் கொடிகாட்டப்பட்டது.

தமிழ்நாடு என்று எப்போது அழைக்கப்பட்டது? - கழகமும் மொழிவாரி மாகாணமும் : ஊடகவியலாளர் ப.திருமாவேலன் கட்டுரை!

“தேசிய உணர்வே அரசியல் அமைப்பு”

மொழிவழி மாநில சீரமைப்புக் குழு 1953 டிசம்பர் 23 அமைக்கப்பட்டது. இக்குழுவின் முன் 3.5.1954 அன்று தி.மு.க தனது கருத்தை அளித்தது. “பரந்த இந்தியத் துணைக்கண்டமானது, இன்றைய தினம் வலிந்து திணிக்கப்பட்ட பல நிர்வாகப் பகுதிகளின் தொகுப்பாகக் காட்சியளிக்கிறது. மொழி வழி பிரிவினை என்பது பல்லாயிரக்கணக்கானவர்கள் தத்தமது தாயகத்தைப் பெறவும், தங்களது அறிவால் ஆற்றலாம் அதைச் சீராக்கிச் செம்மைப்படுத்தவும் விரும்பும் இதய எழுச்சியாகும். இதுதான் தேசிய உணர்வாகும். மொழிப்பற்று இந்த உணர்வின் வெளிப்படை அம்சமாகும். ஒரு பொதுவான தாய்மொழியின் மூலம் உறவு கொண்ட ஒரு குறிப்பிட்ட மக்கள் கூட்டம் தங்கள் இயற்கையான தேசிய அவாக்களை நிறைவேற்றிக் கொள்ள அமைக்கப்படும் ஒரே அரசியல் அமைப்பு இது.” என்று தனது அறிக்கையில் தி.மு.க குறிப்பிட்டது.

7.3.1954 திருச்சி தி.மு.க பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் இப்பிரச்சினை விரிவாகச் சொல்லப்பட்டது. “தமிழகத்தை ஒட்டித் தொடர்ந்தாற் போல் உள்ள சித்தூர் மாவட்டத்தின் தமிழ்ப்பகுதிகள் மொழிவழி மாநில அடிப்படையில் தமிழகத்தோடு இணைக்கப்படுதல் வேண்டும். சித்தூர் தமிழ்ப்பகுதிகளை இப்பொழுது ஆந்திர மாநிலத்தோடு சேர்த்துக் கணக்கிட்டிருப்பது தமிழக மொழிவழி உரிமைக்கு இழைத்த அநீதியாகும். இந்த அநீதியைத் துடைப்பதற்கான முயற்சிகளிலும், கிளர்ச்சிகளிலும் ஈடுபட்டு கழகத்தின் குறிக்கோளை நிறைவேற்றும் வகையில் தங்களால் ஆன அளவு பாடுபட்டு வரும் கழகத் தோழர்களைப் பாராட்டுகிறோம். அதற்கான நடவடிக்கைகளை அவ்வப்போது எடுக்க என்.வி.நடராசனைத் தலைவராகவும் சி.வி.எம்.அண்ணாமலை, ஏ.எல்.சி.கிருஷ்ணசாமி, கே.எம்.கண்ணபிரான் ஆகியோரை உறுப்பினராகவும் கொண்ட குழு அமைக்கப்படுகிறது” என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அண்ணாவின் அகண்ட தமிழகம்!

இதேபோல் தெற்கு எல்லை குறித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. “தமிழகத்தின் தெற்குப் பகுதியில் தமிழகத்தோடு ஒட்டி திருவிதாங்கூர் - கொச்சி மாநிலத்தில் இருக்கும் நாஞ்சில் பகுதியும், பிற தமிழ்ப்பகுதிகளும் தமிழகத்தோடு இணையவேண்டும் என்ற கருத்தை நாஞ்சில் மாவட்ட முதல் தி.மு.கழக மாநாட்டிலும் திராவிட முன்னேற்றக் கழக முதல் சென்னை மாநில மாநாட்டுத் தீர்மானத்திலும் வலியுறுத்திச் சொல்லப்பட்டது.

இதைத் தொடர்ந்து சித்தூர் மாவட்ட மாநாடு 1954 ஜூலை 10,11 ஆகிய நாட்களில் பொதட்டூர்பேட்டையில் நடந்தது. ஆந்திர மாநிலத்தோடு இணைக்கப்பட்ட தமிழ்ப் பகுதிகளை தமிழகத்தோடு இணைக்க இம்மாநாடு வலியுறுத்தியது. இம்மாநாட்டில் பேசிய பேரறிஞர் அண்ணா அவர்கள், “சித்தூரை ஆந்திராவில் இருந்து மீட்டு தமிழகத்தோடு சேர்க்க வேண்டியது மகத்தான வேலை. அதேபோல் நாஞ்சில் பகுதிகள் கொச்சியில் இருந்து பிரித்து தமிழகத்தோடு சேர்க்க வேண்டும். புதுவையிலே பிரெஞ்சு ஏகாதிபத்தியத்தின் பிடியிலிருக்கும் தமிழர்களை திராவிடத்துடன் இணைக்க வேண்டும். இந்த நாட்டிலே பிறந்து வாழ வழியின்றி கடல் கடந்து வயிறு வளர்க்கச் சென்றவர்களில் இலங்கையிலே வாழுகின்ற இலட்சக்கணக்கான திராவிடரின் உரிமை காக்க பணிபுரிய வேண்டும்” என்று அனைத்தையும் வரிசைப்படுத்தினார்கள்.

சித்தூர் பிரச்சினைக்காக மத்தியில் ஆளும் நேருவையோ, மாநிலத்தை ஆளும் காமராசரையோ எதிர்த்து போராடத் தேவையில்லை, ஆந்திர முதலமைச்சர் பிரகாசத்தை எதிர்த்து போராடவேண்டும் என்று தமிழரசுக் கழகத் தலைவர் ம.பொ.சி சொல்லி இருந்ததை அண்ணா கண்டித்தார். சித்தூரை தமிழகத்தோடு இணைக்க வேண்டும் என்று கே.ஏ.மதியழகன், நாகர்கோவில் வி.எம்.ஜான், சித்தூர் என்.கேசவன் ஆகியோர் முன்மொழிந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதேமாநாட்டில் தெற்கு எல்லை தொடர்பாகவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. “கொச்சியில் வாழும் 15 லட்சம் தமிழ் மக்கள் மொழி அடிப்படையில் தாய்த் தமிழகத்தோடு சேரவேண்டும் என்ற கிளர்ச்சியை இம்மாநாடு வரவேற்கிறது” என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதேகோரிக்கையை வலியுறுத்தி போராடிய வர்கள் கைது செய்யப்பட்டு இருப்பதை இம்மாநாடு கண்டித்தது. இந்த தீர்மானத்தை நாகர்கோவில் வி.எம்.ஜான், அ.பொன்னம்பலம் ஆகியோர் முன்மொழிந்தார்கள்.

Related Stories

Related Stories