தமிழ்நாடு

‘இல்லம் தேடிக் கல்வி’.. யாரும் ஐயம் கொள்ளத் தேவையில்லை - கல்வியில் புதிய இலக்கை எடுத்து வைத்த முதல்வர்!

கல்வியின் மீது ஆர்வத்தை உருவாக்க வேண்டும். அவர்களை மீண்டும் பள்ளிகளை நோக்கி அழைத்து வர வேண்டும். அதற்காகத்தான் ‘இல்லம் தேடிக் கல்வி’ திட்டம் தேவைப்படுகிறது.

‘இல்லம் தேடிக் கல்வி’.. யாரும் ஐயம் கொள்ளத் தேவையில்லை - கல்வியில் புதிய இலக்கை எடுத்து வைத்த முதல்வர்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

முரசொலி நாளேட்டின் இன்றைய (30.10.2021) தலையங்கம் வருமாறு:-

தமிழ்நாட்டைக் கல்வியில் சிறந்த தமிழ்நாடாக மாற்றுவதற்கான அனைத்து முயற்சிகளையும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் செய்து வருகிறார்! ‘அனைவருக்கும் அடிப்படைக் கல்வி’ என்பதை அடிப்படை இலக்காகவும் - ‘அனைவருக்கும் உயர்கல்வி‘ என்பதை உன்னத இலக்காகவும் கொண்டு தமிழ்நாடு அரசு திட்டங்களை வகுத்துவருவதாக முதலமைச்சர் சொல்லி வருகிறார்.

கடந்த மாதம் உயர்கல்வித் துறையின் சார்பில் நடந்த விழாவில் பேசும்போது, “பெருந்தலைவர் காமராசர் காலம் என்பது பள்ளிக் கல்வித் துறையின் பொற்காலமாகச் சொல்லப்படுகிறது. நம்முடைய தலைவர் கலைஞர் அவர்களது ஆட்சிக் காலம் கல்லூரிக் கல்வியின் பொற்காலமாகப் போற்றப்படுகிறது. இந்த ஆட்சிக் காலம் உயர்கல்வி, தொழிற் கல்வி, ஆராய்ச்சிக் கல்வியின் பொற்காலமாக மாற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்” என்று முதலமைச்சர் அவர்கள் கூறினார். அந்தளவுக்கு உயர் கல்விக்கு உன்னதமான இலக்கை முதலமைச்சர் எடுத்துக் காட்டி உள்ளார்.

இந்த நிலையில் பள்ளிக் கல்வித் துறைக்கு ஒரு இலக்கைக் காட்டி இருக்கிறார் முதலமைச்சர். அதுதான் அனைவருக்கும் கல்வி; அடிப்படையான கல்வி; முழுமையான கல்வி; கற்றல் குறைபாடு இல்லாத கல்வி! இதற்கு அவர் சூட்டிய பெயர்தான் ‘இல்லம் தேடிக் கல்வி' என்பதாகும்!

மாணவக் கண்மணிகள் கடந்த இரண்டு ஆண்டுக் காலத்தில் மிகப்பெரிய நெருக்கடியைச் சந்தித்தார்கள். துள்ளித் திரிந்த பள்ளிப் பருவத்தை கொரோனா காலம் கிள்ளி எறிந்து விட்டது. அதனை மீண்டும் துளிர்க்க வைக்கவே ‘இல்லம் தேடிக் கல்வி' என்ற திட்டத்தை முதலமைச்சர் தொடங்கி வைத்திருக்கிறார். பூட்டியே கிடந்தன பள்ளிகள். பல மாணவக் கண்மணிகளின் மனங்களும் தான்!

இதனைச் சரி செய்தாக வேண்டும். பள்ளிக்குச் செல்லாமல் வீட்டிலேயே இருக்கப் பழகி விட்டால் என்ன ஆகும்? ஆசிரியர்களைத் தடுப்புச் சுவர்களாகக் கருதும் மாணவர்கள் பெருகிவிட்டால் என்ன ஆகும்? அதனால் தான் இத்தகைய ஒரு திட்டம் தேவைப்படுகிறது.

படிப்பின் அவசியத்தை மாணவர்களுக்கு உணர்த்த வேண்டும். அத்தகைய படிப்பை முழுமையானதாக்க வேண்டும். கல்வியின் மீது ஆர்வத்தை உருவாக்க வேண்டும். அவர்களை மீண்டும் பள்ளிகளை நோக்கி அழைத்து வர வேண்டும். அதற்காகத்தான் இந்தத் திட்டம் தேவைப்படுகிறது.

“பள்ளிகள் பல மாதங்களாக மூடப்பட்டிருந்த நிலையில் ஏற்பட்டுள்ள கற்றல் பாதிப்பினைக் குறைக்கவும், சரிசெய்யவும், வேறு எந்த மாநிலமும், எந்தவொரு திட்டத்தினையும் செயல்படுத்தாத நிலையில், ஒரு முன்னோடித் திட்டமாக மாணவச் செல்வங்களும், அவர் தம் பெற்றோர்களும் எளிதில் அணுகிப் பெறும் வகையில் இத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.” என்று முதலமைச்சர் அவர்கள் கூறி இருக்கிறார்.

ஏற்கனவே இருக்கும் ஆசிரியர்களைத் தாண்டி தன்னார்வலர்கள் இந்தத் திட்டத்தில் ஒருங்கிணைக்கப்படுவார்கள். இதுவரை 67 ஆயிரத்து 961 பெண்களும், 18 ஆயிரத்து 557 ஆண்களும், 32 திருநங்கையரும் என மொத்தம் 86 ஆயிரத்து 550 நபர்கள் இத்திட்டத்தில் சேவையாற்ற பதிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இப்படிப் பதிவு செய்பவர்களை முன்வைத்து சில சந்தேகங்கள் சமூக வலைத்தளங்களில் முன்வைக்கப்படுகிறது. ‘ஆர்.எஸ்.எஸ் அமைப்பைச் சேர்ந்த மதவாதிகள் தன்னார்வலர்கள் என்ற போர்வைக்குள் நுழைந்து விடுவார்கள்’ என்ற சந்தேகத்தை சமூக ஊடகங்கள் கிளப்பி உள்ளன. அதற்கும் முதலமைச்சர் அவர்கள் தெளிவான பதிலைக் கொடுத்து விட்டார்.

“இவ்வாறு பதிவு செய்தவர்களின் கல்வித் தகுதி, இருப்பிடம், முன்னனுபவம் போன்ற பல்வேறு அளவீடுகளின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட பள்ளி மேலாண்மைக் குழுக்கள் மூலம் அவர்கள் நேரடியாகத் தேர்வு செய்யப்படுவர். இந்தப் பள்ளி மேலாண்மைக் குழுவில் பள்ளித் தலைமையாசிரியர், ஆசிரியர்கள், பெற்றோர், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் இடம் பெறுவர். தேர்ந்தெடுக்கப்படும் தன்னார்வலர்களுக்கு சிறப்புப் பயிற்சி அளிக்கப்படவுள்ளது” என்று முதல்வர் அவர்கள் கூறி இருக்கிறார்.

ஏதோ பள்ளிக் கல்வித்துறைக்கும் இதற்கும் எந்த சம்பந்தமுமில்லாமல் போகப்போகிறது என்றோ, தன்னார்வலர்கள் வசம் மாணவக்கண்மணிகள் போய்விடுவார்கள் என்றோ யாரும் அய்யம் கொள்ளத் தேவையில்லை!

ஆசிரியர்களுக்கு உறுதுணையாக இருக்கவே தன்னார்வலர்கள் இருக்கப் போகிறார்கள். தன்னார்வலர்களைத் தேர்வு செய்யும் முறை, அவர்களுடைய பங்களிப்பு, அவர்களால் கற்பிக்கப்படும் மாணவ மாணவியரின் கற்றல் மேம்பாடு ஆகியவை; தொடர்ந்து கல்வியாளர்கள் கொண்ட குழுவால் கண்காணிக்கப்படும். எனவே அனைத்தும் அரசின் கட்டுப்பாட்டில் தான் இருக்கப் போகிறது. தன்னார்வலர்கள் குறித்த சந்தேகங்களை திராவிடர் விடுதலைக் கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் அவர்கள் தனது அறிக்கையில் தெளிவுபடுத்தி இருக்கிறார்.

“புதிய கல்விக் கொள்கையின் கீழ் தன்னார்வலர்கள் என்பவர்கள், பள்ளி நிர்வாகத்தில் நேரடியாகத் தலையிடுவதற்கு உரிமை வழங்கப்பட்டு இருந்தது. அதுமட்டுமின்றி பள்ளிகளுக்கு வெளியே முறைசாராக் கல்வியைக் கற்பிக்கிற உரிமையும் அவர்களுக்கு வழங்கப்பட்டு இருந்தது. இதைப் பயன்படுத்தி ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் தன்னார்வலர்கள் என்ற பெயரில் ஊடுருவி, கல்வியை தங்கள் வசப்படுத்திக் கொள்கிற வாய்ப்பு இருக்கிற காரணத்தினால், கல்வியாளர்கள் பலரும் எதிர்த்தார்கள், நாமும் எதிர்த்தோம். ஆனால் தமிழ்நாடு அரசின் இந்தத் திட்டத்தின்கீழ் தன்னார்வலர்கள் எந்த நோக்கத்தின்கீழ் பயன்படுத்தப்படுகிறார்கள் என்பதை நாம் கவனிக்க வேண்டும்.

‘தமிழ்நாடு மாநில கல்விக் கொள்கை குழு உருவாக்கப்படும். அந்தக் கொள்கையின் அடிப்படையிலேயே தன்னார்வலர்கள் செயல்படுவார்கள்' என்றும் முதலமைச்சர் அறிக்கையில் தெளிவுபடுத்தியிருக்கிறார். குழந்தைகளுக்கு பள்ளிக்கு வெளியே எதைக் கற்பிக்க வேண்டும் என்பதற்கான பாடத்திட்டத்தையும் தமிழ்நாடு அரசு வகுத்துத் தந்திருக்கிறது” என்பதை அவர் சுட்டிக் காட்டி இருக்கிறார்.

‘இல்லம் தேடிக் கல்வி’ திட்டத்தின் மிக முக்கியமான இலக்காக, பள்ளி செல்லும் வயதுள்ள அனைவரையும் பள்ளிக்கு அழைத்து வருவது ஆகும். இந்த தன்னார்வலர்கள் வீடு வீடாகச் சென்று பிள்ளைகளை பள்ளிகளுக்கு அழைத்து வருவார்கள். வருகிற கல்வியாண்டில் குறைந்தபட்சம் ஒரு இலட்சம் மாணவர்கள் அரசுப் பள்ளிகளில் கூடுதலாகச் சேர்க்கப்பட வேண்டும் என்றும் முதல்வர் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.

‘புதிய கல்விக் கொள்கை’ பல்வேறு தடுப்புச் சுவர்களைக் கொண்டது. ‘இல்லம் தேடிக் கல்வி’ என்பது அனைத்து தடுப்புச் சுவர்களையும் உடைப்பது.

‘புதிய கல்விக் கொள்கை’ என்பது தகுதி திறமையை அளவு கோலாகக் கொண்டது. ‘இல்லம் தேடிக் கல்வி’ என்பது அனைத்துப் பிள்ளைகளையும் அரவணைக்கிறது.

அனைவரையும் பள்ளியில் சேர்ப்போம்! அனைவர்க்கும் கல்வியைக் கொடுப்போம்! சமநிலைச் சமுதாயம் அமைப்போம்!

banner

Related Stories

Related Stories