தமிழ்நாடு

“24 மணி நேரத்திற்குள் ஆதாரத்தை காட்டுங்க.. இல்லைன்னா மன்னிப்பு கேளுங்க” : அண்ணாமலைக்கு அமைச்சர் கெடு!

“எவ்வித ஆதாரமும் இல்லாமல் அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்தவேண்டும் என்ற காழ்ப்புணர்ச்சியுடன் பா.ஜ.க தலைவர் அண்ணாமலை பேசிவருகிறார்” என மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி பதிலடி கொடுத்துள்ளார்.

“24 மணி நேரத்திற்குள் ஆதாரத்தை காட்டுங்க.. இல்லைன்னா மன்னிப்பு கேளுங்க” : அண்ணாமலைக்கு அமைச்சர் கெடு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

சென்னை அண்ணா சாலையில் உள்ள மின்வாரிய தலைமை அலுவலகத்தில், பருவமழையை எதிர்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து துறை சார்ந்த அதிகாரிகளுடன் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி ஆலோசனை நடத்தினார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செந்தில்பாலாஜி, “எவ்வித ஆதாரமும் இல்லாமல் அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்தவேண்டும் என்ற காழ்ப்புணர்ச்சியுடன் பா.ஜ.க தலைவர் அண்ணாமலை பேசிவருகிறார். ஒரு கட்சியின் தலைமைப் பொறுப்பில் இருப்பவர் சரியாக விசாரிக்காமல் அவதூறு பரப்புவதை தவிர்க்கவேண்டும்.

4,320 மெகாவாட் நிறுவுத்திறன் நம் மாநில மின்வாரியத்துக்கு உள்ளது. அதில் கடந்த ஆட்சியின்போது 1,800 மெகாவாட்தான் உற்பத்தி நடந்திருந்தது. பராமரிப்பு பணிகள் உள்ளிட்ட காரணங்களினால் கடந்த ஆட்சியில் உற்பத்தியானது, அதன் நிறுவுத்திறனை விடவும் குறைக்கப்பட்டிருந்தது. குறைக்கப்பட்ட உற்பத்தி மீண்டும் அதிகரிக்க வேண்டும் என்றும், அதன்மூலம் மாநிலத்தின் தேவையை மாநிலமே நிறைவாக செய்துகொள்ள வேண்டும் என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் எங்களிடம் உத்தரவிட்டு, பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளை வழங்கியிருந்தார்.

முதலமைச்சரின் உத்தரவின்படி, தற்போது 3,500 மெகா வாட் அளவுக்கு உற்பத்தி செய்யப்படுகிறது. 900 மெகா வாட் அளவு மின்சாரம் தனியார் நிறுவனங்கள் மாநில அரசுக்கு தருகின்றன. 4,000 மெகா வாட் தருவதாக தனியார் நிறுவனங்கள் ஒப்பந்தம் போட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. ஆனாலும் அவர்களால் முழுவதுமாக அதைச் செய்ய முடியவில்லை. இந்த இடைவெளியை குறைக்க, இந்திய மின் சந்தை வழியாக தற்போது நடவடிக்கைகள் எடுத்துவருகிறோம்.

தினந்தோறும் ஒவ்வொரு மணி நேரத்துக்கும் இந்திய மின் சந்தையில் ஒவ்வொரு விலை நிர்ணயம் செய்யப்படும். அதன்படி தமிழகத்தின் சராசரி தேவையான 320 மில்லியன் யூனிட் பெறப்படுகிறது. இதில் 24.09.2021 முதல் 19.10.2021 வரையிலான காலகட்டத்தில் இந்திய மின் சந்தையில் நாம் மொத்தமே கொள்முதல் செய்தது, 397 மில்லியன் யூனிட் மட்டுமே. பெறப்பட்ட இந்த 397 மில்லியன் யூனிட்டும் கூட, ரூ.20 க்கு கொள்முதல் செய்யப்பட்டது, 65 மில்லியன் யூனிட் மட்டுமே. அதாவது, கொள்முதல் செய்யப்பட்டவற்றிலேயேவும், வெறும் 1.04% மட்டும்தான் அதிக விலையில் கொள்முதல் செய்யப்பட்டிருக்கிறது.

இதுவே குஜராத், ஆந்திரா ஆகிய மாநிலங்களில் ரூ.20க்கு 131 மில்லியன் யூனிட்; ரூ.20 க்கு 52 மில்லியன் யூனிட் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. இவற்றோடு ஒப்பிடுகையில் தமிழ்நாடு வெறும் 1.04% மட்டுமே கொள்முதல் செய்யப்பட்டுள்ளது என்பது மிக மிக குறைவும்தான். நிலக்கரி தட்டுப்பாட்டால்தான் அங்கு போய் கொள்முதல் செய்யப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. மற்றபடி தமிழ்நாடு மின்துறை மிகச்சிறப்பாகவே செயல்படுகிறது.

இவற்றையெல்லாம் அறியாமல் பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, நம் மாநில அரசு 4 மடங்கு அதிக விலைக்கு மின்சாரம் வாங்க முயற்சிப்பதாக கூறியுள்ளார். ஒரு கட்சியின் தலைவர், நான் மேற்குறிப்பிட்ட தகவல்களையெல்லாம் தெரிந்துவைத்துக்கொண்டு பேச வேண்டும். குறிப்பாக நம் மாநிலத்தில் எங்கிருந்து மின்சாரம் வாங்குகிறோம், எவ்வளவு வாங்கியுள்ளோம், பிற மாநிலங்களில் எவ்வளவு வாங்கியுள்ளார்கள், இங்கு நிலைமை எவ்வளவு கட்டுக்குள் உள்ளது என்பதையெல்லாம் அறிந்துவைத்து பேசவேண்டும்.

தமிழ்நாட்டில் நிலக்கரி தட்டுப்பாட்டால், இதுவரை ஒரே ஒரு மணி நேரம்கூட அனல்மின் நிலையம் எதுவும் தனது செயல்பாட்டை நிறுத்தவில்லை. அந்தளவுக்கு துரிதமாகவும் திட்டமிடுதலுடனும் செயல்படுகிறது தமிழக அரசு. நாங்கள் வாங்கியுள்ள 1.04% கூடுதல் மின்சாரமும்கூட, ஒன்றிய அரசு இந்திய மின் சந்தையில் வாங்கியதுதான். இந்த அளவும், பிற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் மிக மிக குறைவுதான். இந்த விவரம் எதுவுமே தெரியாமல், நடைமுறை தெரியாமல் இந்த ஆட்சி மீது அவப்பெயர் ஏற்படுத்தும் நோக்கத்தில் பா.ஜ.க தலைவர் அண்ணாமலை பேசியுள்ளார்.

கடந்த அ.தி.மு.க ஆட்சியைப் போல இந்த ஆட்சியில் சீர்கேடு நடந்துவிடக்கூடாது என நினைத்து நாங்கள் மிக மிக கவனமாக இருந்து வருகிறோம். அப்படியிருக்கையில் இப்படி அவப்பெயர் ஏற்படுத்தும் நோக்கில் பேசுவதை ஏற்கமுடியாது.

இந்நிலையில் மின்வாரியத்தில் முறைகேடு நடந்துள்ளது குறித்து தன்னிடம் ஆதாரம் உள்ளது என்று கூறும் பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை எப்போது எங்கு வெளியிட்டாலும் அங்கு தான் வர தயார். அதுமட்டுமின்றி தன்னிடம் உள்ள ஆதாரங்களை 24 மணி நேரத்தில் வெளியிட வேண்டும். அப்படி இல்லையென்றால் மன்னிப்பு கேட்கவேண்டும்.” எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories