தமிழ்நாடு

கவரிங் நகைகளுக்கு கடன் பெற்று ‘பகீர்’ மோசடி... அதிரடி நடவடிக்கையில் சிக்கும் அ.தி.மு.கவினர்!

நகைக்கடன் விவகாரத்தில் தமிழ்நாடு அரசின் அதிரடி நடவடிக்கைகள், அ.தி.மு.க தரப்பில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

கவரிங் நகைகளுக்கு கடன் பெற்று ‘பகீர்’ மோசடி... அதிரடி நடவடிக்கையில் சிக்கும் அ.தி.மு.கவினர்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

தேர்தலுக்கு முன்பு வாக்குறுதி அளித்தபடி, தமிழக கூட்டுறவு வங்கிகளில் அடகு வைக்கப்பட்ட ஏழை, எளிய மக்களின் 5 சவரன்களுக்கு குறைவான நகைக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என முதலமைச்சர் மு.கஸ்டாலின் அறிவித்தார்.

அதன்படி, ஏழை, எளிய மக்களின் 5 சவரன் வரை நகைக் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட உள்ளது. இதையடுத்து கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் பெற்றவர்கள் குறித்து ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரை அடுத்த குரும்பூர் தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கியில் திருச்செந்தூர் கூட்டுறவு சங்க அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, வங்கியில் நகையே வைக்காமல் போலியான பையை வைத்து, அதில் நகை இருப்பதுபோல கூறி, கடன் வாங்கப்பட்டிருப்பது வெளிச்சத்துக்கு வந்தது.

தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் வங்கியில் நகைக் கடனாக பெறப்பட்ட 548 நகை பொட்டலங்களில் 261 பொட்டலங்கள் மாயமாகி இருப்பதும் தெரியவந்தது. இதன் மதிப்பு சுமார் ரூ.2 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.

இதேபோல் வங்கியில் டெபாசிட் செய்த பணம் இருக்கிறதா என்று வாடிக்கையாளர்கள் பார்த்தபோது, டெபாசிட் பணத்தை வாடிக்கையாளர்கள் கணக்கில் வரவு வைக்காமல் அவர்களுக்கு போலியான பாண்ட் போட்டுக்கொடுத்து அந்த பணத்தையும் மோசடி செய்துள்ளது தெரியவந்தது.

இது தொடர்பாக வங்கியின் தலைவர் முருகேசபாண்டியன் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். மேலும் கூட்டுறவு சார்பதிவாளர் ஆழ்வார் குமார், செயலாளர் தேவராஜ், துணை செயலாளர் ஜான்சி ஆகியோர் சஸ்பெண்டு செய்யப்பட்டனர்.

நகையே இல்லாமல் நகைக்கடன் பெற்று மோசடி செய்த சம்பவம் தமிழகம் முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுபோன்று தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் அ.தி.மு.க ஆட்சியில் நகையே வைக்காமலும், கவரிங் நகைகளை வைத்தும் நகைக் கடன் மோசடி நடைபெற்றுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

இதுதொடர்பாக, கடந்த 21ஆம் தேதி கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சண்முகசுந்தரம் ஐ.ஏ.எஸ், தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கியின் மேலாண் இயக்குநர் உள்பட அனைத்து மண்டல இணைப் பதிவாளர்களுக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார்.

அதில், கூட்டுறவு நிறுவனங்களில் 5 சவரனுக்கு மேற்பட்டு கடன் வழங்கப்பட்டு 31.3.2021 முதல் 31.7.2021 தேதி வரையில் நிலுவை விவரங்களை அளிக்க வேண்டும். 40 கிராமுக்கு மேற்பட்டு நகைக்கடன்களை பெற்ற கடன்தாரர்களின் நகைக்கடன்களை வசூல் செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதனால் தமிழ்நாடு முழுவதும் நகைக்கடன் பெற்றவர்கள் தொடர்பாக ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. இதனால், மோசடியில் ஈடுபட்டவர்கள் அச்சத்தில் உள்ளனர். நகைக்கடன் விவகாரத்தில் தமிழ்நாடு அரசின் அதிரடி நடவடிக்கைகள், அ.தி.மு.க தரப்பில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories