தமிழ்நாடு

‘பரிசுப் பொருள்' என்ற பெயரில் விஷ சிலந்திகள், போதைப் பொருட்கள், கஞ்சா கடத்தல்.. அதிகாரிகள் அதிர்ச்சி!

சென்னைக்கு வந்த சரக்கு விமானத்தில் பரிசுப் பொருட்கள் என்ற பெயரில் கொடிய விஷமுடைய 10 சிலந்தி பூச்சிகள், ரூ.10 லட்சம் மதிப்புடைய உயர்ரக போதை மாத்திரைகள் இருந்ததால் சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை.

‘பரிசுப் பொருள்' என்ற பெயரில் விஷ சிலந்திகள், போதைப் பொருட்கள், கஞ்சா கடத்தல்.. அதிகாரிகள் அதிர்ச்சி!
Admin
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

போலந்து, அமெரிக்கா, நெதா்லாந்து ஆகிய நாடுகளிலிருந்து சென்னைக்கு வந்த சரக்கு விமானத்தில் பரிசுப் பொருட்கள், மருத்துவப் பொருட்கள் என்ற பெயரில் கொடிய விஷமுடைய 10 சிலந்தி பூச்சிகள், ரூ.10 லட்சம் மதிப்புடைய உயர்ரக போதை மாத்திரைகள், பதப்படுத்தப்பட்ட கஞ்சா ஆகியவை இருந்ததால் சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை பழைய விமான நிலையத்திற்கு அமெரிக்காவிலிருந்து சரக்கு விமானம் ஒன்று நேற்று அதிகாலை வந்தது. அதில் வந்த பார்சல்களை சென்னை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையிட்டனர்.

அதில் ஒரு பாா்சல் போலந்து நாட்டிலிருந்து சென்னை வழியாக ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினம் முகவரிக்கு வந்திருந்தது. அந்த பாா்சலில் பரிசுப் பொருள் இருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்ததால் சுங்கத்துறைக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து அந்த பாா்சலை பிரித்துப் பாா்த்த அதிகாரிகள் அதிா்ச்சியடைந்தனர். அதனுள் உயிருடன் 10 சிலந்தி பூச்சிகள் தனித்தனி கூம்பு வடிவ பாட்டில்களில் அடைத்து வைக்கப்பட்டிருந்தன.

இதையடுத்து சுங்கத்துறையினா் உடனடியாக சென்னையில் உள்ள மத்திய வன குற்றப்புலனாய்வு துறைக்கு தகவல் கொடுத்தனர். அவா்கள் விரைந்து வந்து பாா்த்துவிட்டு, அவை மிகக்கொடிய விஷமுடைய ஆப்ரிக்கா நாடுகளில் உள்ள சிலந்தி பூச்சிகள். இவற்றை இந்தியாவிற்குள் அனுமதித்தால், வெளிநாட்டு நோய் கிருமிகள் பரவிவிடும்.

எனவே இவைகளை வந்த நாட்டிற்கே திருப்பி அனுப்பிவிட வேண்டும் என்று கூறினர். இதையடுத்து சுங்கத்துறையினா் கொடிய விஷமுடைய 10 வெளிநாட்டு சிலந்தி பூச்சிகளையும், சரக்கு விமானம் மூலம் போலந்து நாட்டிற்கே திருப்பி அனுப்ப முடிவு செய்தனர். அதோடு இந்த சிலந்திப் பூச்சிகளை பரிசுப்பொருள் என்ற பெயரில் இறக்குமதி செய்தவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையே அதே சரக்கு விமானத்தில் அமெரிக்காவிலிருந்து சென்னை முகவரிக்கு மருத்துவப் பொருட்கள் என்ற பெயரில் ஒரு பாா்சல் வந்திருந்தது. அதை திறந்து பாா்த்தனர். அதனுள் 274 கிராம் பதப்படுத்தப்பட்ட உயா் ரக கஞ்சா இருந்ததை கண்டுப்பிடித்தனர்.

அதோடு நெதா்லாந்து நாட்டிலிருந்து வந்திருந்த மேலும் 2 பாா்சல்களையும் சந்தேகத்தில் பிரித்து பாா்த்தனர். அதனுள் உயா் ரக போதை மாத்திரைகள் 92 கிராம் எடையில் இருந்தன. இதைப்போல் மொத்தம் 9 பார்சல்களில் போதை மாத்திரைகள், உயா் ரக கஞ்சா இருந்தன. அவற்றின் சா்வதேச மதிப்பு சுமாா் ரூ.10 லட்சம். இந்த பாா்சல்கள் அனைத்துமே போலி முகவரிகளில் சென்னைக்கு வந்துள்ளன. இதையடுத்து சுங்கத்துறையினா் போதை மாத்திரைகள், உயர் ரக கஞ்சா ஆகியவற்றை பறிமுதல் செய்தனா். அதோடு போதை கடத்தல் சட்டப்படி சுங்கத்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர்.

சென்னை விமான நிலையத்தில் ஒரே நாளில் வெளிநாடுகளிலிருந்து வந்த பாா்சல்களில் கொடிய விஷமுடைய 10 சிலந்தி பூச்சிகள், ரூ.10 லட்சம் மதிப்புடைய உயர்ரக போதை மாத்திரைகள், பதப்படுத்தப்பட்ட கஞ்சா ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories