தமிழ்நாடு

“இந்த சிறப்பைப் பெற்ற ஒரே மாநிலம் தமிழ்நாடுதான்” : பேரவையில் அமைச்சர் ரகுபதி பெருமிதம்!

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் அரசு சட்டக் கல்லுரி புதிதாகத் தொடங்கப்படும் என அமைச்சர் ரகுபதி பேரவையில் அறிவித்துள்ளார்.

“இந்த சிறப்பைப் பெற்ற ஒரே மாநிலம் தமிழ்நாடுதான்” : பேரவையில் அமைச்சர் ரகுபதி பெருமிதம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழ்நாடு சட்டப்பேரவையில் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது. இன்றைய பேரவை விவாதத்தின்போது சட்டத்துறை அமைச்சர் ரகுபதி புதிய சட்டக்கல்லூரி தொடக்கம் உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளை அறிவித்தார்.

பேரவையில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி வெளியிட்ட அறிவிப்புகள் வருமாறு:

காஞ்சிபுரத்தில் தற்போது இயங்கி வரும் மாவட்ட நீதிமன்றம் எண் II-ஐ முதன்மை மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றமாக மாற்றி அமைக்கப்படும். அருப்புக்கோட்டையில் ஒரு கூடுதல் மாவட்ட நீதிமன்றம் அமைக்கப்படும். மயிலாடுதுறை, திருப்பத்தூரில் இயங்கி வரும் கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தை மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றமாக மாற்றி அமைக்கப்படும்.

அரசு சட்டக் கல்லூரிகளில் அதிவேக இணைய வசதியுடன் கூடிய கம்பியில்லா மின் மண்டலம் நிறுவப்படும். அரசு சட்டக் கல்லூரிகளில் சர்வதேச பயிற்சிப் பட்டறைகள் கருத்தரங்குகள் மற்றும் சட்ட மாநாடுகள் நடத்தப்படும். திருவண்ணாமலை போளூரிலும், புதுக்கோட்டை திருமயத்திலும் தலா ஒரு சார்பு நீதிமன்றம் அமைக்கப்படும்.

தென்காசியில் முதன்மை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் அமைக்கப்படும். சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் புதிய அரசு சட்டக் கல்லூரி தொடங்கப்படும்.ஐந்தாண்டு, மூன்றாண்டு படிப்புகளில் தலா 80 பேருடன் 2022-23ஆம் கல்வியாண்டில் தொடங்கப்படும். கள்ளக்குறிச்சி, தென்காசி, காஞ்சிபுரம் மற்றும் திருப்பத்தூரில் முதன்மை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் அமைக்கப்படும்.

உயர் நீதிமன்ற கிளையில் வழக்கறிஞர்களுக்கான கூடுதல் வளாக கட்டடம் ரூ.4.25 கோடி செலவில் கட்டப்படும். சிறைகளில் கொரோனா தொற்று இல்லை. சிறைவாசிகளுக்கு 100 சதவீத தடுப்பூசி செலுத்திய ஒரே மாநிலம் தமிழ்நாடுதான். கைதிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப புதிய சிறைச்சாலைகள் அமைக்கப்படும்"என அமைச்சர் ரகுபதி தெரிவித்தார்.

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் புதிதாக அரசு சட்டக் கல்லூரி அமைக்கப்படும் என்ற அறிவிப்பை காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் ப.சிதம்பரம் வரவேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

இது குறித்து ப.சிதம்பரம் தனது ட்விட்டர் பதிவில், "புதிய அரசு சட்டக் கல்லூரி கல்வி நகரான காரைக்குடியில் அமைக்கப்படும் என்று அறிவித்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு என்னுடைய உளமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்தச் சிறந்த முடிவை எடுத்து அறிவிப்பை வெளியிடப் பேருதவி செய்த சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, அமைச்சர் பெரியகருப்பன் ஆகியோருக்கு என் அன்பான நன்றி. 2022-23 ஆம் கல்வியாண்டில் கல்லூரி செயல்படத் தொடங்கும் என்ற தித்திப்பான செய்தியை மாணவர்களும் அவர்களின் பெற்றோர்களும் உற்சாகத்துடன் வரவேற்கிறார்கள்" எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories