தமிழ்நாடு

“ஒரு கண்ணுக்கு வெண்ணெய்; இன்னொரு கண்ணுக்கு சுண்ணாம்பு” : மோடி அரசை வெளுத்து வாங்கும் ‘தினகரன்’ நாளேடு !

இந்தியாவின் ஏழை, எளிய குடிமக்களின் அத்தியாவசியமாக இருக்கிற சமையல் எரிவாயுவுக்கு மானியம் கொடுக்க ஒன்றிய அரசு மறுப்பது ஏனோ என ‘தினகரன்’ நாளேடு கேள்வி எழுப்பியுள்ளது.

“ஒரு கண்ணுக்கு வெண்ணெய்; இன்னொரு கண்ணுக்கு சுண்ணாம்பு” : மோடி அரசை வெளுத்து வாங்கும் ‘தினகரன்’ நாளேடு !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

‘தினகரன்’ நாளேட்டில் வெளியாகியுள்ள தலையங்கம் பின்வருமாறு:-

நாடு முழுவதும் வீடுகளுக்கு பயன்படுத்தப்படும் சமையல் காஸ் சிலிண்டர் விலையை, ஒன்றிய அரசு மீண்டும் ரூ.25 உயர்த்தியுள்ளது. பெட்ரோல், டீசல் விலைகளை எண்ணெய் நிறுவனங்கள் தினசரி மாற்றி அமைத்து வருகின்றன. ஆனால், சமையல் காஸ் சிலிண்டரின் விலை மாதத்திற்கு இருமுறை மாற்றி அமைக்கப்படுகிறது. சில நேரங்களில் 3 முறைகூட மாற்றி அமைக்கப்படுகிறது. கடந்த பிப்ரவரி மாதம் 700 ரூபாயாக இருந்த சமையல் காஸ் சிலிண்டரின் விலை, ஆகஸ்ட் இறுதியில் 875 ரூபாய் 50 காசாக அதிகரித்தது. தற்போது மீண்டும் 25 ரூபாய் உயர்த்தப்பட்டு, 900 ரூபாயாக அதிகரித்துள்ளது.

நடப்பு ஆண்டில் மட்டும் சமையல் காஸ் சிலிண்டர் விலை 285 ரூபாய் அதிகரித்துள்ளது. சென்னையில் சமையல் காஸ் சிலிண்டர் 900 ரூபாய் 50 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. சமையல் காஸ் சிலிண்டருக்கான மானியம், அவரவர் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் என வங்கி கணக்கு விவரங்களை சேகரித்த ஒன்றிய அரசு, ஓரிரு மாதங்கள் மட்டும் மானியம் செலுத்திவிட்டு, தற்போது அதையும் நிறுத்திவிட்டது. இந்த நடவடிக்கை, இல்லத்தரசிகள் மற்றும் பெண்கள் இடையே மிகுந்த அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்தியாவில் சுமார் 28.90 கோடி குடும்பங்கள் சமையல் காஸ் சிலிண்டர் பயன்படுத்துகின்றன. இயற்கையாக கிடைக்கும் விறகையும், வரட்டியையும் அடுப்பு எரிக்க பயன்படுத்தி வந்த ஏழை, எளிய மக்களையும், ‘ஆரோக்கியக்கேடு’ என்று சொல்லி சமையல் எரிவாயு பயனாளராக மாற்றியது ஒன்றிய அரசு. இப்போது விலை உயர்வு என்ற பெயரில் அத்தனை குடும்பங்களையும் தவிக்கவைப்பதும் இதே ஒன்றிய அரசுதான். கடந்த காங்கிரஸ் ஆட்சி காலத்தில் வழங்கப்பட்டு வந்த மானியத்தை, சப்தமே இல்லாமல் படிப்படியாக குறைத்து, மானியமே இல்லாத நிலையை உருவாக்கிவிட்டது தற்போதைய பாஜ அரசு. கச்சா எண்ணெய் என்பது முடிவுறு கனிமம்.

சில நாடுகள் அதன் மொத்த வணிகத்தையும் கையில் வைத்துக்கொண்டு, உலகத்தை ஆள்கின்றன. இந்தியாவை பொறுத்தவரை பெட்ரோலிய பொருட்களின் தேவையில் 80 சதவீதம் இறக்குமதி செய்யப்படுகிறது. முற்றிலும் இறக்குமதி சார்ந்தே இந்த வர்த்தகம் நடப்பதால், சர்வதேச சந்தையின் ஏற்ற, இறக்கங்கள் மற்றும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றை சார்ந்தே விலை தீர்மானிக்கப்படுகிறது. அதன் எதிரொலியே, இந்த விலை உயர்வு. கடந்த ஆண்டு, பெரிய நிறுவனங்களுக்கான வரியை 36 சதவீதத்தில் இருந்து 25 சதவீதமாக குறைத்தது ஒன்றிய அரசு.

இதன்மூலம், 1.54 லட்சம் கோடி வருவாய் குறையும் என்றும் அறிவித்தது. இப்படி பெரும் முதலாளிகளை பற்றி கவலைப்படும் ஒன்றிய அரசு, எழை மக்களைப்பற்றி துளியும் கவலைப்படாதது வேதனையிலும் வேதனை. வாங்குகிற மெழுகுவர்த்திக்கும், தீப்பெட்டிக்கும்கூட வரி கட்டும் இந்தியாவின் ஏழை, எளிய குடிமக்களின் அத்தியாவசியமாக இருக்கிற சமையல் எரிவாயுவுக்கு மானியம் கொடுக்க ஒன்றிய அரசு மறுப்பது ஏனோ? ஒரு கண்ணுக்கு வெண்ணெய், இன்னொரு கண்ணுக்கு சுண்ணாம்பு என்கிற மனப்பான்மை எப்போது மாறும்?

banner

Related Stories

Related Stories