தமிழ்நாடு

ஒரே இரவில் 25 கடைகளில் கைவரிசை.. கொள்ளையடித்த மளிகை பொருட்களை வீட்டில் நிரப்பிய கொள்ளையன்!

சென்னையில் ஒரே இரவில் 25 கடைகளின் பூட்டை உடைத்து கொள்ளையடித்த மளிகை பொருட்களை வீட்டில் நிரப்பிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஒரே இரவில் 25 கடைகளில் கைவரிசை.. கொள்ளையடித்த மளிகை பொருட்களை வீட்டில் நிரப்பிய கொள்ளையன்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

சென்னை கோடம்பாக்கம் டிரஸ்ட்புரம் பகுதியில் சூப்பர் மார்கெட், மளிகை கடை மற்றும் அரிசி கடை என தொடர்ச்சியாக 8 கடைகளின் பூட்டு உடைக்கபட்டு கடைகளில் இருந்த பல ஆயிரம் மதிப்பிலான பொருட்கள் மற்றும் பணம் கடந்த 24 ஆம் தேதி கோடம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார்கள் வந்தது.

புகாரின் பேரில் போலிஸார் வழக்குபதிவு செய்து அங்குள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் தொப்பி அணிந்த இரு வாலிபர்கள் இருசக்கர வாகனத்தில் வந்து கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது. மேலும் சிசிடிவியில் பதிவான கொள்ளையனின் முகத்தை வைத்து பழைய குற்றவாளிகளுடன் ஒப்பிட்டு பார்த்த போது பூட்டை உடைத்து திருடும் பிரபல கொள்ளையன் இட்டா விஜய் என்பது தெரியவந்தது. இதனையடுத்து இட்டா விஜய் பதுங்கி இருக்கக்கூடிய அத்திப்பட்டு பகுதியில் போலிஸார் தேடிய போது சிக்கவில்லை.

இதையடுத்து கொள்ளையர்களை பிடிக்க கோடம்பாக்கம் போலிஸார் தனிப்படை அமைத்து கொள்ளையர்கள் சென்ற பகுதியிலுள்ள சிசிடிவி கேமராக்களை பின்தொடர்ந்து சென்றனர். அப்போது இதே கொள்ளையர்கள் விரும்பாக்கம் பகுதியிலுள்ள 3 கடைகளில் கைவரிசை காட்டி சென்றது தெரியவந்தது. இதனையடுத்து கொள்ளையர்கள் சென்ற இடம் சிசிடிவி கேமராக்களில் காண்பிக்கவில்லை. இதனால் ஏமாற்றமடைந்த போலிஸார் கொள்ளையர்கள் ஓட்டி சென்ற இருசக்கர வாகனத்தின் பதிவு எண்ணை வைத்து விசாரணை நடத்தியுள்ளனர்.

ஒரே இரவில் 25 கடைகளில் கைவரிசை.. கொள்ளையடித்த மளிகை பொருட்களை வீட்டில் நிரப்பிய கொள்ளையன்!

விசாரணையில் பட்டினபாக்கம் பகுதியில் இருசக்கர வாகனத்தை திருடி கொண்டு கைவரிசையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனால் எந்தவிதமான துப்பும் கிடைக்காமல் கொள்ளையனை நெருங்குவதில் போலிஸாருக்கு சிக்கல் ஏற்பட்டு வந்த நிலையில், கோடம்பாக்கம் வரதராஜபேட்டை ஆற்காடு சாலை சந்திப்பு பகுதியில் நீண்ட நாட்களாக இருசக்கர வாகனம் ஒன்று கிடப்பதாக போலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சென்று பார்த்த போது சிசிடிவியில் பதிவான கொள்ளையர்கள் பயன்படுத்திய வாகனம் என தெரியவந்தது. இதனையடுத்து இருசக்கர வாகனத்தின் அருகே காவலர்களை பாதுகாப்புக்காக பணியில் போட்டுள்ளனர்.

இந்த நிலையில் இன்று விடியற்காலை கோடம்பாக்கத்தில் விட்டு சென்ற இருசக்கர வாகனத்தை இரு வாலிபர்கள் எடுக்க வந்தனர். அப்போது மறைந்திருந்த போலிஸார் இட்டா என அழைத்த போது திரும்பி பார்த்துவிட்டு ஓட்டம் பிடித்த இட்டா விஜய் மற்றும் அவரது கூட்டாளியை போலிஸார் துரத்தி சென்று கைது செய்தனர். இவர்கள் சென்னை பெரம்பூர் பட்டாளத்தை சேர்ந்த விஜி என்கிற இட்டா விஜய் மற்றும் அவரது கூட்டாளியான அத்திப்பட்டை சேர்ந்த பிராவோ( எ) சூரிய பிரகாஷ் என்பது தெரியவந்தது. இவர்களிடம் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியானது.

இட்டா விஜய் மற்றும் அவரது கூட்டாளியான சூரிய பிரகாஷ் வலி நிவாரண போதை மாத்திரைகளை உட்கொண்டுவிட்டு கடந்த 24 ஆம் தேதி இரவு 7.30 மணியளவில் பட்டினப்பாக்கத்தில் சாலையோரம் நிறுத்தி வைத்திருந்த இருசக்கர வாகனத்தை திருடி உள்ளனர். பின்னர் அந்த இருசக்கர வாகனத்தை எடுத்து கொண்டு கோடம்பாக்கத்தில் 8 கடைகள், விருகம்பாக்கம் 3 கடைகள், வளசரவாக்கம், புளியந்தோப்பு, என ஒரே இரவில் 25 கடைகளில் கம்பியால் பூட்டை உடைத்து கடைகளில் இருந்த பருப்பு வகைகள், சாக்லேட்டுகள் என கைக்கு கிடைத்த அனைத்தையும் திருடி உள்ளனர்.

ஒரே இரவில் 25 கடைகளில் கைவரிசை.. கொள்ளையடித்த மளிகை பொருட்களை வீட்டில் நிரப்பிய கொள்ளையன்!

கொள்ளையடித்த பின்பு திருடிய இருசக்கர வாகனத்தை கொண்டு சென்றால் வாகன சோதனையில் போலிஸாரிடம் சிக்கவாய்ப்பு என எண்ணி கடைகளுக்கு அருகே இருசக்கர வாகனத்தை விட்டு சென்றதாக தெரிவித்துள்ளனர். பின்பு சிறிது நாட்கள் கழித்து இருசக்கர வாகனத்தை எடுப்பதை வாடிக்கையாக வைத்துள்ளனர். மேலும் இரவு 1.30 மணிக்கு மேல் போலிஸார் வாகன சோதனையில் ஈடுபட மாட்டார்கள் என்பதால் காலை 3 மணி போல் வந்து வாகனத்தை எடுப்பது வழக்கம் எனவும் அதேபோல் எடுக்கும் போது தான் போலிஸாரிடம் சிக்கியதாக தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து திருடிய பொருட்களை வைப்பதற்காகவே போரூரில் வாடகைக்கு வீடு எடுத்திருப்பதாகவும், திருடிய பொருட்களை அங்கு எடுத்து சென்று மறைத்து வைத்தது தெரியவந்தது. கொள்ளையடித்த மளிகை பொருட்களை பயன்படுத்திவிட்டு நண்பர்களுக்கும் கொடுத்து வந்துள்ளார். இதனையடுத்து மறைத்து வைக்கப்பட்ட பொருட்களான எல்.இ.டி டிவி, லேப்டாப்,10 செல்போன்கள், சாக்லேட், எண்ணெய், வெள்ளி பொருட்கள் என சுமார் 5 லட்சம் மதிப்புள்ள பொருட்களை போலிஸார் பறிமுதல் செய்தனர்.

இதேபோல் இட்டா விஜய் நெடுஞ்சாலைகளில் செல்போன் பறிப்பது போன்ற செயலில் ஈடுபட்டு வந்ததும், இவர் மீது வளசரவாக்கம், புளியந்தோப்பு, அத்திபட்டு, கோட்டூர்புரம் என பல காவல் நிலையங்களில் கொள்ளை, திருட்டு, பறிப்பு வழக்கு நிலுவையில் இருப்பது தெரியவந்தது. மேலும் இட்டாவிஜய் முன் விரோதம் காரணமாக ஒரு நபரை கொலை செய்வதற்காக பணம் இல்லாததால் பணத்தை ஈட்ட கொள்ளையில் ஈடுபட்டு வருவதாக போலிஸார் சந்தேகிக்கின்றனர். இதனையடுத்து கோடம்பாக்கம் போலிஸார் கைது செய்த இட்டா விஜய் மற்றும் சூரியபிரகாஷ் ஆகியோரை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

banner

Related Stories

Related Stories