தமிழ்நாடு

சிறை தண்டனை பெற்றவருக்கு வரி விலக்கா? சசிகலாவுக்கு ’செக்’ வைத்த வருமான வரித்துறை!

சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா தண்டிக்கப்பட்டுள்ளதால், 48 லட்ச ரூபாய் வருமான வரியை செலுத்தும் உத்தரவை கைவிட முடியாது என சென்னை உயர் நீதிமன்றத்தில் வருமான வரித்துறை தெரிவித்துள்ளது

சிறை தண்டனை பெற்றவருக்கு வரி விலக்கா? சசிகலாவுக்கு ’செக்’ வைத்த வருமான வரித்துறை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

வருமானத்துக்கு அதிகமாக சசிகலா சொத்து சேர்த்தது தொடர்பாக, லஞ்ச ஒழிப்புத்துறை, 2008ஆம் ஆண்டு வருமான வரித்துறைக்கு பட்டியல் அனுப்பி வைத்தது. அதன் அடிப்படையில் 1994 - 1995ம் நிதியாண்டில் 20க்கும் மேற்பட்ட சொத்துகள் தொடர்பான வருமானத்திற்கான வரியாக 48 லட்சம் ரூபாயை செலுத்த சசிகலாவுக்கு வருமான வரித்துறை உத்தரவிட்டது.

இதை எதிர்த்து சசிகலா தாக்கல் செய்த வழக்கை விசாரித்த, வருமான வரி மேல் முறையீட்டு தீர்ப்பாயம், அந்த தொகையை செலுத்தும்படி சசிகலாவுக்கு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டது. இதை எதிர்த்து வருமான வரித்துறை தரப்பில் உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

கடந்த 2008ம் ஆண்டு முதல் நிலுவையில் இருந்த இந்த வழக்கில், கடந்த ஆண்டு சசிகலா தரப்பில் புதிய மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில், ஒன்றிய அரசின் நேரடி வரிகள் வாரியம் பிறப்பித்த சுற்றறிக்கையில், ஒரு கோடி ரூபாய் அல்லது அதற்கு கீழ் உள்ள வருமான வரி பாக்கி அல்லது அபராதம் தொடர்பான வழக்குகளை திரும்பப்பெற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளதால், தனக்கு எதிரான வழக்கையும் திரும்பப் பெற வருமான வரித்துறைக்கு உத்தரவிட வேண்டும் என கோரப்பட்டது.

இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி டி.எஸ்.சிவஞானம், சத்திக்குமார் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தபோது வருமான வரித்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர், குற்ற வழக்கில் சசிகலா தண்டிக்கப்பட்டுள்ளனர் எனவே அவருக்கு அபராதத்தை கைவிடும் சுற்றறிக்கை, இவருக்கு பொருந்தாது என்றும் தெரிவித்தார்.

இதற்கு சசிகலா தரப்பில் சுற்றறிக்கை பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டது. சசிகலா தரப்பு விளக்கத்தை மனுவாக தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை செப்டம்பர் 8ஆம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளனர்.

இதேபோல நடிகர் ரஜினிகாந்த், 2002 முதல் 2005 வரையிலான ஆண்டுகளில் வருமான வரியை முறையாக செலுத்தவில்லை என கூறி, 66 லட்சத்து 22 ஆயிரத்து 436 ரூபாய் வரியை செலுத்தும்படி பிறப்பித்த நோட்டீஸை, நேரடி வரி விதிப்பு வாரிய சுற்றறிக்கை படி 2020ஆம் அண்டு ஆகஸ்ட் மாதம் வருமான வரித்துறை திரும்பப்பெற்றது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories