தமிழ்நாடு

தேர்தல் வாக்குறுதி என்னாச்சு.. கொஞ்சம் கூட இரக்கம் இல்லையா?: மோடி அரசை வெளுத்து வாங்கிய ‘தினகரன்’ நாளேடு!

மெத்த படித்த பொருளாதார மேதைகளை விட மிஞ்சிய வாக்குறுதி அளித்து விட்டு ஆட்சிக்கு வந்த ஒன்றிய அரசால், 7 ஆண்டுகளில் எந்த சாதனையும் நிகழ்த்த முடியவில்லை என ‘தினகரன்’ நாளேடு தலையங்கத்தில் தெரிவித்துள்ளது.

தேர்தல் வாக்குறுதி என்னாச்சு.. கொஞ்சம் கூட இரக்கம் இல்லையா?: மோடி அரசை வெளுத்து வாங்கிய ‘தினகரன்’ நாளேடு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

‘தினகரன்’ நாளேட்டில் வெளியாகியுள்ள தலையங்கம் பின்வருமாறு:-

பெட்ரோல், டீசல் விலை ஒருபுறம், சமையல் காஸ் விலை மறுபுறம் என அப்பாவி மக்களை நசுக்கி வதைக்கிறது. நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்கும் வரை தினம், தினம் உயர்த்தப்பட்டு வந்த பெட்ரோல், டீசல் விலை உயர்வு தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஆனால் திடீரென மாதத்தின் இடையில் சமையல் காஸ் விலையை ரூ.25 உயர்த்தி அதிர்ச்சி வைத்தியம் அளித்திருக்கிறது ஒன்றிய அரசு. ‘எல்லாவற்றிக்கும் காரணம் காங்கிரஸ் அரசு. அவர்கள் வாங்கிய எண்ணெய் பத்திரம் தான் விலையை குறைக்க முடியாமல் செய்து இருக்கிறது’ என்று தொடர்ந்து 7 ஆண்டுகளாக மத்தியில் ஆட்சியில் இருக்கும் பா.ஜ அரசின் நிதியமைச்சர் கூறுகிறார்.

கச்சா எண்ணெய் விலை அதிரடியாக சரிந்தும் அதன்பயன் மக்களுக்கு கிடைக்க விடாமல் வருவாய் பார்த்துக்கொண்ட பா.ஜ.க அரசால் பெட்ரோலிய பொருட்கள் விற்பனை மூலம் பல லட்சம் கோடி வருவாய் குவிந்துள்ளது. 2018-19ம் நிதியாண்டில் மட்டும் ரூ.2.13 லட்சம் கோடி, 2019-20ம் நிதியாண்டில் ரூ.1.78 லட்சம் கோடி, 2020-21ம் நிதியாண்டில் கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் ஜனவரி வரை வெறும் 10 மாதத்தில் மட்டும் ரூ.2.94 லட்சம் கோடி வரிவருவாயை பெட்ரோலிய பொருட்கள் விற்பனை மூலம் ஒன்றிய அரசு குவித்துள்ளது.

2019-20ம் நிதியாண்டில் எண்ணெய் சிறப்பு பத்திரங்களுக்கு ரூ.9989.96 கோடி கட்டியிருக்கிறது ஒன்றிய அரசு. இந்த ஆண்டு 10.10.2021ல் இன்னும் ரூ.5 ஆயிரம் கோடி, 28.11.2021ல் இன்னும் ஒரு ரூ.5 ஆயிரம் கோடி கட்டினால் முதிர்ச்சி அடைந்து விடும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. ஏன் நிதியமைச்சர் கருத்துப்படி பார்த்தால் கூட ரூ.1.30 லட்சம் கோடி நிலுவைத்தொகைதான். அதை எண்ணெய் நிறுவன வரிவருவாயில் இருந்தே எடுத்துக்கொடுத்துவிட முடியும். அப்படி இருக்கும் போது இன்னும் எத்தனை நாட்களுக்கு காங்கிரஸ் அரசு மேல் குறைகூறிக்கொண்டு இருக்கப்போகிறீர்கள்?

பெட்ரோல், டீசல் விலையை ரூ.50க்கும் கீழ் கொண்டு வருவோம். டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பை உயர்த்துவோம் என்றெல்லாம் மெத்த படித்த பொருளாதார மேதைகளை விட மிஞ்சிய வாக்குறுதி அளித்து விட்டு ஆட்சிக்கு வந்த ஒன்றிய அரசால் இந்த 7 ஆண்டுகளில் எந்த சாதனையும் நிகழ்த்த முடியவில்லை. ஆனால் 100 நாட்கள் தான் ஆட்சி செய்து முடித்துள்ள தமிழக அரசைப்பார்த்து கொடுத்த வாக்குறுதிகள் அத்தனையும் இன்றே ஏன் நிறைவேற்றவில்லை என்று கேட்பது எந்தவிதத்தில் நியாயம்?. அதுவும் பெட்ரோல் விலை ரூ.3 குறைத்தபிறகும், டீசல் விலையை ஏன் குறைக்கவில்லை என்று கதறல் வேறு.

அத்தனையும் குறைக்கும் அதிகாரம் உங்கள் கையில் இருக்கும் போது மக்கள் சுமையை தமிழக அரசைப்போல் மனிதாபிமான உணர்வுடன் நடந்து குறைப்பதை விடுத்து எரிகிற தீயில் கூடுதலாக எண்ணெய் ஊற்றுவது போல் ரூ.850.50ஆக இருந்த ஒரு சமையல் காஸ் சிலிண்டர் விலையை ரூ.25 அதிகரித்து ரூ.875.50ஆக உயர்த்தியது சரிதானா? இதற்கு உங்கள் பதில் என்ன? ஏழை, எளிய, அப்பாவி நடுத்தர மக்கள் மீது கொஞ்சம் கூட இரக்கம் இல்லையா? அப்படி இருந்தால் ஏன் ஒரே ஆண்டில் இத்தனை முறை பெட்ரோலிய பொருட்கள் மற்றும் சமையல் காஸ் விலையை உயர்த்தி இருக்கப்போகிறீர்கள்?

banner

Related Stories

Related Stories