தமிழ்நாடு

“எதிர்க்கட்சி தலைவர்களின் பெயர்களையும் குறிப்பிட விரும்பினேன். ஆனால்...” : உதயநிதி ஸ்டாலினின் அறிமுக உரை!

உதயநிதி ஸ்டாலின் தனது முதல் சட்டப்பேரவை உரையில் திராவிடப் பேராசான்கள் தொடங்கி, தொகுதி மக்கள் வரை அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.

“எதிர்க்கட்சி தலைவர்களின் பெயர்களையும் குறிப்பிட விரும்பினேன். ஆனால்...” : உதயநிதி ஸ்டாலினின் அறிமுக உரை!
Admin
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

தமிழ்நாடு சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இன்றைய கூட்டத்தில் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் தனது முதல் உரையை ஆற்றினார்.

உதயநிதி ஸ்டாலின் தனது முதல் சட்டப்பேரவை உரையில் திராவிடப் பேராசான்கள் தொடங்கி, தொகுதி மக்கள் வரை அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.

உதயநிதி ஸ்டாலினின் முதல் சட்டப்பேரவை உரையில், “தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் மூவரையும் வணங்கி என்னுடைய கன்னிப் பேச்சை இந்த அவையில் பதிவு செய்கிறேன்.

மாண்புமிகு பேரவை தலைவர் அவர்களே பாரம்பரியமும், பெருமையும் மிக்க இந்த தமிழ்நாடு சட்டப்பேரவையில் பேசுவதற்கான வாய்ப்பை வழங்கியுள்ள உங்களுக்கும், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கும் என் நன்றியும் வணக்கமும்.

அவை முன்னவர் தொடங்கி மாண்புமிகு அமைச்சர்கள், கழகத்தின் மாண்புமிகு சட்டப்பேரவை உறுப்பினர்கள், தோழமைக்கட்சியின் உறுப்பினர்கள்,

இந்த நேரத்தில் நமது கூட்டணியின் வெற்றிக்காக உழைத்த தோழமை கட்சிகளின் தலைவர்கள், நம்முடைய ஆசிரியர் அய்யா அவர்கள், காங்கிரஸ் பேரியக்கத்தின் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி அவர்கள், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் பொது செயலாளர் அண்ணன் வைகோ அவர்கள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் அண்ணன் இரா.முத்தரசன் அவர்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் அண்ணன் கே.பாலகிருஷ்ணன் அவர்கள்,

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் அண்ணன் தொல்.திருமாவளவன் அவர்கள், இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசிய பொது செயலாளர் பெரியவர் கே.ஏ.எம்.காதர் மொய்தீன் அவர்கள்,

மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் அண்ணன் ஜவாஹிருல்லா அவர்கள், தமிழக வாழ்வுரிமை கட்சித்தலைவர் அண்ணன் வேல்முருகன், கொங்கு நாடு மக்கள் கட்சி அண்ணன் ஈஸ்வரன் அவர்கள் உட்பட கூட்டணி கட்சியைச்சேர்ந்த தலைவர்கள் அனைவருக்கும் இந்த நேரத்தில் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர்களின் பெயர்களையும் குறிப்பிட விருப்பப்பட்டேன். ஆனால் அவர்கள் வெளிநடப்பு செய்துவிட்டனர்.

மாண்புமிகு சட்டப்பேரவை தலைவர் அவர்களே. நீங்கள் இந்த அவையை சிறப்புற வழிநடத்தி வருகிறீர்கள். எங்களுக்கெல்லாம் நீங்கள் ஒரு முன்மாதிரியாக திகழ்கிறீர்கள்.

ஏனென்றால், கடந்த 2016 சட்டப்பேரவை தேர்தலின் போது உங்களது வெற்றி என்பது தடுக்கப்பட்டது. சிலர் அதை திட்டமிட்டு சூழ்ச்சியால் அபகரித்துக்கொண்டனர்.

நீங்கள் நடத்திய சட்டப்போராட்டங்களை நாடே அறியும். உயர் நீதிமன்றம் தொடங்கி உச்ச நீதிமன்றம் வரை நீதி கேட்டு போராடினீர்கள்.

இதனால் உங்களுக்கு ஏற்பட்ட இழப்பு சாதரணமானது அல்ல. உங்களுக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு மருந்தாக நீங்கள் பார்த்தது இயக்கப்பணிகள் தான்.

கழக நிகழ்ச்சியில் கலந்து கொள்வது, கழகத்துக்காக விவாத மேடைகளில் பங்கேற்றது என்று கொஞ்சமும் தொய்வின்றி உங்கள் மக்கள் பணியை தொடர்ந்தீர்கள்.

அதன் பயனாக இன்று உங்களை ராதாபுரம் மக்கள் மிகப்பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெல்ல வைத்துள்ளனர்.

இந்த பெருமைமிகு அவையின் தலைவராக நீங்கள் பாரபட்சமின்றி செயல்படுகிறீர்கள். ஆகவே, தான் நீங்கள் எங்களுக்கெல்லாம் ஒரு முன்மாதிரி என்று சொல்கிறோம்.

இந்த நேரத்தில் எனக்கு பேச வாய்ப்பளித்த உங்களுக்கு என் நன்றி.

அதே போல, சட்டப்பேரவையின் துணைத்தலைவர் அண்ணன் கு.பிச்சாண்டி அவர்களுக்கும், கழகத்தின் சட்டப்பேரவை கொரடா அண்ணன் கோவி.செழியன் அவர்களுக்கும், சட்டப்பேரவை செயலர் உள்ளிட்ட பேரவையின் அனைத்து பணியாளர்களுக்கும் என்னுடைய அன்பும் நன்றியும்.

நம் நீதிக் கட்சி தலைவர்கள், அவர்கள் வழியில் வந்த பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் என நம் முன்னோடிகள் பலர் செயலாற்றிய நூற்றாண்டு கண்ட இந்த பேரவையில் நானும் பங்காற்றவிருக்கிறேன் என்பதை நினைத்து பெருமிதமும், பெருமகிழ்ச்சியும் கொள்கிறேன்.

அரசியலை அருகில் இருந்து கவனித்து சட்டப்பேரவையின் நடைமுறைகளை ஓரளவுக்கு அறிந்து வைத்திருந்தாலும், இதுநாள்வரை ஒரு பார்வையாளனாக மட்டுமே அவையை நான் கவனித்து வந்திருக்கிறேன்.

முதல்முறையாக ஒரு பங்கேற்பாளனாக உள்ளிருந்து ஒவ்வொரு விஷயங்களையும் உற்று நோக்கும் வாய்ப்பை தற்போது பெற்றுள்ளேன்.

பேரவையின் உறுப்பினராக இன்னும் நெருங்கி வந்து பார்க்கும்போதுதான் இதன் ஜனநாயகத் தன்மையும், இதன் நடைமுறையும் என்னை பொறுப்பு மிக்கவனாகவும், மேலும் எளிமையானவனாக உணரச் செய்யும் வகையிலும் இருக்கிறது.

I belong to the Dravidian Stock. நான் திராவிட இனத்தைச் சேர்ந்தவன்.

இந்தக் குரல் எப்போதோ ஒலித்த குரல் அல்ல. எப்போதும் ஒலிக்கின்ற குரல். இப்போது என்னிடமிருந்து ஒலிக்கின்ற உரிமைக் குரல்.

திராவிடன் என்ற உணர்வை எங்களுக்கு ஊட்டிய தந்தை பெரியார்,

அந்த உணர்வை அரசியல் கொள்கையாக்கி, திராவிட முன்னேற்றக் கழகத்தை உருவாக்கி, நாடாளுமன்ற மாநிலங்களவையில் உரக்க முழங்கிய பேரறிஞர் அண்ணா,

திராவிட இனத்தின்-இயக்கத்தின் தனிப் பெரும் தலைவராக விளங்கி, இந்திய அரசியலுக்கே வழிகாட்டிய முத்தமிழறிஞர் கலைஞர்

கலைஞரின் தோழராக, அண்ணனாக இருந்து இன உணர்வும், திராவிட இயக்க சிந்தனைகளும் கடைக்கோடி கழக தொண்டர்களை சென்றடைய செய்த பேராசிரியர் தாத்தா அவர்கள்.

இன்னும் எண்ணற்ற திராவிட இயக்கத் தலைவர்களுக்கும் இந்த இயக்கத்தைக் கட்டிக் காத்த - காக்கின்ற தொண்டர்களுக்கும் என் வணக்கம்.

தலைவருக்குத் தலைவராய்-தொண்டருக்குத் தொண்டராய்-மக்களில் ஒருவராய், தமிழ்நாட்டை நோக்கி ஒட்டுமொத்த இந்திய ஒன்றியத்தையும் திரும்பிப்பார்க்கச் செய்திருக்கும் ‘திராவிட மாடல் ’அரசின் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு வணக்கத்தையும், சட்டமன்ற உறுப்பினராவதற்கு வாய்ப்பளித்து, எனக்காக தொகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு இந்த நேரத்தில் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

ஜெயலலிதா அம்மையார் மறைவுக்கு பிறகு, கழக தலைவர் அவர்கள் நினைத்திருந்தால் என்றோ ஆட்சி அமைத்திருந்திருக்கலாம். ஆனால், ஜனநாயக வழியில் மக்களை சந்தித்து தான் ஆட்சி அமைக்க வேண்டும் என்று தலைவர் அவர்கள் பொறுமை காத்தார்கள்.

முத்தமிழறிஞர் கலைஞர் மறைந்த போது, அண்ணா நினைவிடத்துக்கு அருகாமையில் தன்னுடைய நினைவிடமும் அமைய வேண்டும் என்ற கலைஞரின் கடைசி ஆசையை நிறைவேற்ற விடாமல் கூட கடந்த அதிமுக அரசு முட்டுக்கட்டை போட்டது.

அப்போதிருந்த அந்த அசாதாரண சூழ்நிலையை அருகில் இருந்த பார்த்த லட்சக்கணக்கான தொண்டர்களில் நானும் ஒருவன்.

நம்முடைய கழக தலைவர் அவர்கள் அப்போது ஒரு சிறு கண்ணசைவை காட்டியிருந்தால் கூட அன்று நிலைமை வேறு மாதிரி அமைந்திருக்கும்.

ஆனால், நம் தலைவர் அவர்கள் பொறுப்புமிக்க அரசியல் தலைவராக சட்டப்போராட்டம் நடத்தி, முத்தமிழறிஞரின் கடைசி விருப்பம், ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களின் விருப்பத்தை நிலைநாட்டினார்கள்.

மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் பொறுமையும் – பொறுப்புணர்ச்சியும் - உழைப்புமே அவரை இந்த இடத்துக்கு அழைத்து வந்திருக்கின்றன.

மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் உழைப்பில், அவரின் பொறுப்பிணர்வில் 1% பெற்றுவிட்டால்கூட போதும், நான் மிகச்சிறந்த சட்டமன்ற உறுப்பினராகிவிடுவேன்.

நம் முதலமைச்சர் அவர்கள் கடைக்கோடியில் இருக்கிற மக்களுக்கு ஒரு பிரச்சினை என்றாலும் சரி, ஒட்டுமொத்த மாநிலத்துக்கே ஒரு பிரச்சினை என்றாலும் சரி, அதற்காக குரல் கொடுத்து அந்த பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டு வருகிறார்கள்.

உதாரணமாக நாமக்கல்லை சேர்ந்த குழந்தை மித்ராவின் அறுவை சிகிச்சைக்கு ரூ.16 கோடி தேவை என்றதும், அதற்காக நம்முடைய முதலமைச்சர் அவர்கள் எல்லோரும் உதவ வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.

மருத்துவ சிகிச்சைக்கான ஜி.எஸ்.டி தொகையை ரத்து செய்ய வேண்டும் என்று ஒன்றிய அரசுக்கு கோரிக்கை வைத்தார்கள்.

அதனடிப்படையில், பலரும் நிதியளித்ததாலும், ஜி.எஸ்.டி ரத்து செய்யப்பட்டதாலும் தற்போது மித்ராவுக்கு சிகிச்சை நடைபெற்று வருகிறது.

முத்தமிழறிஞர் காலத்தில் இருந்து, அன்பில் தர்மலிங்கம் தாத்தா, அன்பில் பொய்யாமொழி மாமா அவருக்கு பிறகு இன்று என்னுடைய நண்பனாக, தேர்தல் பணி, கழக பணிகளில் என்னுடன் தோளோடு தோள் நிற்கும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்களுக்கும் எனது நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

எனக்காக தொகுதியில் பணியாற்றிய தோழமை கட்சியை சேர்ந்தவர்களுக்கும், மாவட்டக் கழக பொறுப்பாளர் சகோதரர் சிற்றரசு, பகுதிக் கழக செயலாளர்களான அண்ணன்கள் காமராஜ், மதன்மோகன், வட்டக்கழக செயலாளர்கள் உள்ளிட்ட கழகத்தினருக்கும் என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

ஏற்கெனவே அந்தத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்து மக்கள் பணியாற்றி என்னுடைய பணியை எளிமையாக்கி வைத்திருந்த முத்தமிழறிஞர் கலைஞர், பெரியவர் ரகுமான்கான் அவர்கள், மதிப்புக்குரிய ஜெ.அன்பழகன் அண்ணன் உள்ளிட்டவர்களையும் இந்தத் தருணத்தில் நினைவில்கொள்கிறேன்.

சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் நான் கிட்டத்தட்ட 4 அல்லது 5 நாட்களே பிரச்சாரம் செய்தேன். அப்படியிருந்தும் என் மீது முழு நம்பிக்கை வைத்து 69,355 வாக்குகள் வித்தியாசத்தில் வெல்ல வைத்த என் தொகுதி மக்களுக்கு நன்றி.

மாண்புமிகு பேரவை தலைவர் அவர்களே, என் தொகுதியில் எனக்கு வாக்களித்தவர்களுக்கு மட்டுமன்றி, வாக்களிக்காதவர்களுக்கும் சேர்த்து உழைக்க வேண்டும் என்று மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அறிவுறுத்தினார்கள்.

தேர்தல் வெற்றிக்கு பிறகு தொகுதி மக்கள் காட்டும் அன்பும், பாசமும் அவர்களில் ஒருவனாகவே என்னை மாற்றிவிட்டது.

அவர்களுடைய வீட்டுக்கு அழைத்து செல்கிறார்கள். அவர்கள் வீட்டு பிள்ளையாகவே என்னிடம் அன்பை வெளிப்படுத்துகிறார்கள். நான் எப்போதும் அவர்களுக்காக உழைப்பேன் என்று இந்த நேரத்தில் நான் உறுதியளிக்கிறேன்.” எனத் தொடர்ந்து பேசினார்.

உதயநிதி ஸ்டாலினின் முழு உரை இங்கே: பேரவையில் உதயநிதி ஸ்டாலினின் முதல் உரை : முழு வடிவம்

banner

Related Stories

Related Stories