தமிழ்நாடு

“கலைஞர் தன் உயிரினும் மேலாக நேசித்த இயக்கத்தை சிறப்பாக கட்டிக்காக்கும் மு.க.ஸ்டாலின்” : கோபண்ணா புகழாரம்!

“தமிழகத்தின் முதலமைச்சராக ஐந்து முறை பொறுப்பு வகித்து, தமிழக முதலமைச்சர்களிலேயே அதிகபட்சமாக, 6,863 நாட்கள் முதலமைச்சராக இருந்து சாதனை படைத்தவர் கலைஞர்.”

“கலைஞர் தன் உயிரினும் மேலாக நேசித்த இயக்கத்தை சிறப்பாக கட்டிக்காக்கும் மு.க.ஸ்டாலின்” : கோபண்ணா புகழாரம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

ஆங்கிலேய ஆட்சியை எதிர்த்து இந்திய விடுதலைப் போராட்டம் நடந்த காலகட்டத்தில் மாண்டேகு-செம்ஸ்போர்டு அறிக்கையின் அடிப்படையில் இந்திய அரசு சட்டம் 1919 இல் நிறைவேற்றப்பட்டு இரட்டை ஆட்சி அமலுக்கு வந்தது. அதன்படி, 1920 இல் நடைபெற்ற முதல் தேர்தலில் சமூக நீதியை நோக்கமாகக் கொண்ட நீதிக்கட்சி ஆட்சிக்கு வந்தது. நீதிக்கட்சியின் சார்பாக 17.12.1920 இல் சென்னை மாகாண பிரீமியராக ஏ.சுப்பராயலு ரெட்டியார் தேர்வு பெற்றார். அதைத்தொடர்ந்து பனகல் அரசர், சுயேச்சையாக பி.சுப்பராயன், பி.முனுசுவாமி நாயுடு, பொப்லி ராஜா, பி.டி.ராஜன், கே.வி.ரெட்டி ஆகியோர் தேர்வு பெற்று 14.7.1937 வரை ஆட்சி செய்தனர்.

1937இல் நடந்த தேர்தலில் நீதிக்கட்சி தோற்கடிக்கப்பட்டு காங்கிரஸ் கட்சி வெற்றிபெற்று ராஜாஜி பிரீமியராக தேர்வு பெற்றார். சுதந்திரத்துக்கு முன்பு அமைந்த முதல் காங்கிரஸ் ஆட்சி இதுவாகும். அதைத்தொடர்ந்து பிரகாசம், ஓமந்தூர் பி.ராமசாமி ரெட்டியார், பி.எஸ்.குமாரசாமி ராஜா, பெருந்தலைவர் காமராஜ், எம்.பக்தவச்சலம், அறிஞர் அண்ணா, கலைஞர் மு.கருணாநிதி, எம்.ஜி.ராமச்சந்திரன் உள்ளிட்ட இன்னும் சிலர் தமிழகத்தின் முதலமைச்சர்களாக பதவி வகித்தனர். தற்போது தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் தமிழகத்தின் முதலமைச்சராக சிறப்பான முறையில் செயல்பட்டு வருகிறார்.

ஜனவரி 1921இல் அமைக்கப்பட்ட சென்னை மாகாண முதல் அமைச்சரவையின் நூற்றாண்டு நிறைவையொட்டி தமிழக சட்டமன்றத்தின் ஒரு சகாப்தமாக விளங்கிய முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் திருவுருவப் படம் திறக்கப்படுவது மிகுந்த வரவேற்பிற்குரியது, பாராட்டுக்குரியது. 1949 இல் தொடங்கப்பட்ட தி.மு.கழகத்தை 1969 வரை தலைமையேற்று வழிநடத்தியவர் பேரறிஞர் அண்ணா! அண்ணாவின் மறைவிற்குப் பிறகு, 1969 முதல் இறுதி வரை (2018) தலைமையேற்று வழிநடத்தியவர் கலைஞர்!. அதைத் தொடர்ந்து திராவிட முன்னேற்றக் கழகத்தைக் கட்டுக்கோப்பாக மிகச்சிறப்பான முறையில் தி.மு.க.வின் தலைமையை ஏற்று தளபதி ஸ்டாலின் அவர்கள் அனைவரும் பாராட்டத்தக்க வகையில் கட்சியை நடத்திவருகிறார்.

தமிழகத்தில் நடைபெற்ற 14 சட்டமன்றப் பொதுத்தேர்தல்களில் 13 இல் போட்டியிட்டு வெற்றிபெற்று 50 ஆண்டுகளுக்கும் மேலாகச் சட்டமன்ற உறுப்பினராக இருந்து ‘சட்டமன்றப் பொன்விழா' கண்டவர் கலைஞர்! அரசியலில் ஏற்ற இறக்கங்களைப் பார்த்தாரே தவிர, தேர்தலில் தோல்வியைக் கண்டவர் அல்லர்!

தமிழகத்தின் முதலமைச்சராக ஐந்து முறை பொறுப்பு வகித்து, தமிழக முதலமைச்சர்களிலேயே அதிகபட்சமாக, 6,863 நாட்கள் முதலமைச்சராக இருந்து சாதனை படைத்தவர் கலைஞர். இதன்மூலம் தமிழ்ச் சமுதாயத்தின் வாழ்க்கை முறையை மாற்றிய பெருமை இவருக்கு உண்டு! கலைஞரின் நடவடிக்கைகள் அனைத்தும் சமூகப் பார்வை கொண்டதாகவே இருந்தது. இவர் ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களின் பாதுகாவலராக விளங்கியவர். மிகமிகச் சாதாரணக் குடும்பத்தில் பிறந்த இவர் விளிம்புநிலை மக்களின் உரிமைகளுக்காகக் குரல் கொடுத்துப் போராடி சமூக நீதி காத்தவர்.

“கலைஞர் தன் உயிரினும் மேலாக நேசித்த இயக்கத்தை சிறப்பாக கட்டிக்காக்கும் மு.க.ஸ்டாலின்” : கோபண்ணா புகழாரம்!

தமிழகத்தின் முதலமைச்சராகப் பதவி வகித்தபோது, சாமானிய, ஏழை எளிய மக்களின் நலனில் அக்கறை கொண்டு பல்வேறு திட்டங்களைத் தீட்டிச் செயல்படுத்தியவர் கலைஞர்! முதன் முறையாக முதலமைச்சராகப் பொறுப்பேற்றவுடன் பிச்சைக்காரர் மறுவாழ்வுத் திட்டம், இலவசக் கண்ணொளி வழங்கும் திட்டம், கை ரிக்சாக்களை ஒழித்து சைக்கிள் ரிக்சாக்கள் வழங்கும் திட்டம், ஊனமுற்றோர் நலவாழ்வுத் திட்டம், ஆதிதிராவிடர் இலவச கான்கிரீட் வீட்டு வசதித் திட்டம், பிற்படுத்தப்பட்டோர் நலனுக்குத் தனித்துறை போன்ற பல்வேறு திட்டங்களை நிறைவேற்றியவர். இப்படிக் கலைஞரின் சாதனைகளைப் பட்டியலிட்டால், அதற்கு முடிவே இருக்காது!

தமிழக அரசில் குடிசை மாற்று வாரியம், குடிநீர் -வடிகால் வாரியம், சுற்றுலா வாரியம் எனப் புதிய துறைகளைத் தொடங்கி வைத்தவர் கலைஞர்! சமூகத்தில் பெண்களுக்குச் சொத்துரிமை இல்லாத கொடுமையைப் போக்குவதற்காகத் தனிச்சட்டம் இயற்றிய பெருமை இவருக்கு உண்டு. அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற சட்டத்தை இயற்றி கோயிலில் ஜாதி ஒழிப்பை தொடங்கியவர் கலைஞர். முதலமைச்சராகப் பதவி வகித்தால் தலைமைச் செயலகத்திற்குச் செல்வார்! எதிர்க்கட்சித் தலைவராக இருந்தால் முரசொலி அலுவலகத்திற்குச் செல்வார்! ஆளுங்கட்சியாக இருந்தாலும், எதிர்க் கட்சியாக இருந்தாலும் இரண்டையும் ஒன்றாகக் கருதி மக்கள் பணி செய்வதே தமதுகடமை என்று ஓய்வறியாமல் உழைத்த உழைப்பாளி கலைஞர் என்று வரலாறு சொல்லும்!

திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலையாயக் கொள்கை-சமூக நீதியை அடிப்படையாகக் கொண்ட இட ஒதுக்கீடு. அதை நிறைவேற்றுவதற்காக வன்னியர், சீர்மரபினர் உள்ளிட்ட பிற்படுத்தப்பட்டோருக்கு வேலைவாய்ப்புகளில் 20 சதவிகித தனி இட ஒதுக்கீடு திட்டத்தை அறிமுகப்படுத்தியவர் கலைஞர்! விவசாயிகள் மின்சாரத்தைப் பயன்படுத்தி நீர்ப்பாசனம் செய்துவந்த காலகட்டத்தில் -அதற்குரிய கட்டணத்தைக் கட்டுவதற்கு அவர்கள் படும் வேதனையை உணர்ந்த கலைஞர், இலவச மின்சாரத் திட்டத்தை அறிமுகப்படுத்தி விவசாயிகள் வயிற்றில் பால் வார்த்தார்!

கலைஞர் அவர்களிடம் 45 ஆண்டுகளுக்கு மேலாக அரசியல் பயிற்சி பெற்றவர் தளபதி. தி.மு.கழகத்தின் முதலமைச்சராக இருந்த கலைஞர், தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களை துணை முதலமைச்சராக 2009 இல் நியமித்தார். இந்த பொறுப்பில் வருவதற்காக தளபதி உழைத்த உழைப்பு சாதாரணமானதல்ல. இதற்காக 1970 முதல் இளைஞரணியில் ஈடுபட்டது முதற்கொண்டு கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக திராவிட முன்னேற்றக் கழகத்தின் வளர்ச்சிக்காகக் கடுமையாக உழைத்திருக்கிறார். பல்வேறு அடக்குமுறைகளைச் சந்தித்திருக்கிறார்.

திராவிட முன்னேற்றக் கழகத்தில் தமது கடுமையான உழைப்பின் மூலம் படிப்படியாக பல்வேறு பதவிகளைப் பெற்று இறுதியாக கலைஞர் நலிவுற்ற காலத்தில் ஜனவரி 2017இல் தி.மு.க.வின் செயல் தலைவராகப் பொறுப்பேற்றார். ஆகஸ்ட் 7, 2018 இல் முத்தமிழறிஞர் கலைஞர் மறைவிற்கு பிறகு தி.மு. கழகத்தின் தலைவராக ஏகமானதாகத் தேர்வு செய்யப்பட்டார்.

தி.மு.கழகத்தின் தலைவராக இருந்து கலைஞர் அவர்கள் எப்படி கட்சியை இயக்கினாரோ, அதேபோலவே தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையேற்று மிகச் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறார். இத்தகைய ஆற்றலும், திறமையும் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் பெற்றிருப்பதற்கு, கலைஞர் அவர்களால் அணு, அணுவாகச் செதுக்கி வளர்க்கப்பட்டவர் என்பதே காரணம். அதனால்தான் இன்றைக்கும் திராவிட முன்னேற்றக் கழகம் கலைஞர் மறைவிற்குப் பிறகும் சிறு சேதாரம் கூட இல்லாமல் கட்டுக்கோப்பாகக் கம்பீரமாக பீடு நடை போட்டு வருகிறது. எந்த இயக்கத்தை மறைந்த கலைஞர் அவர்கள் தனது உயிரினும் மேலாக நேசித்து, தனது வாழ்நாளை அர்ப்பணித்தாரோ, அந்த தி.மு.கழகத்தைக் கட்டிக் காப்பாற்றுகிற ஆற்றல்மிக்க பணியை சிறப்பாகச் செய்வதே மறைந்த கலைஞருக்கு தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் செலுத்தும் நினைவு அஞ்சலியாக இருக்க முடியும்.

தமிழக சட்டமன்றத்தில் முதலமைச்சராகவும், எதிர்க்கட்சித் தலைவராகவும் 50 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி சட்டமன்றத்தில் ஜனநாயக உணர்வோடு கருத்து மோதல்களை நடத்தி ஆரோக்கியமான அரசியல் விவாதத்திற்கு அடித்தளமிட்டவர் கலைஞர். கலைஞர் சட்டமன்ற விவாதத்தில் பங்கேற்கிறார் என்றால் சட்டமன்ற விவாதங்கள் சூடுபிடித்து அனைவரையும் ஈர்க்கக்கூடிய வகையில் அமையும். தமிழக சட்டமன்ற விவாதங்களைச் செழுமைப்படுத்தி அதற்குப் புத்துணர்ச்சி கொடுத்த முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் திருவுருவப் படத்தை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்கள் இன்று மாலை திறப்பது தமிழக வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய நிகழ்வாகும். இத்தகைய சீர்மிகு விழாவை ஏற்பாடு செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை தமிழ்கூறும் நல்லுலகமே பாராட்டுகிறது, போற்றுகிறது.

- ஆ.கோபண்ணா, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி துணைத் தலைவர்.

banner

Related Stories

Related Stories