தமிழ்நாடு

“கீழடியை தொடர்ந்து தமிழரின் அடையாளங்களை பறைசாற்றும் பொற்பனைக்கோட்டை அகழாய்வு” : அமைச்சர் மெய்யநாதன் !

சங்ககால தொன்மை மிக்க இடமான பொற்பனைக்கோட்டை அகழாய்வு பணி தொடங்கியது.

“கீழடியை தொடர்ந்து தமிழரின்  அடையாளங்களை பறைசாற்றும் பொற்பனைக்கோட்டை அகழாய்வு” : அமைச்சர் மெய்யநாதன் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

“தமிழ்நாட்டில் அதிகமான தொல்லியல் எச்சங்கள் கண்டறியப்பட்டது புதுக்கோட்டை மாவட்டம் தான்” என தொல்லியல் ஆய்வாளர்களும் வரலாற்று பேராசிரியர்களும் தொடர்ந்து கூறிவருகின்றனர். இந்த மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான பகுதிகளில் ஏதாவது ஒரு வரலாற்றுச் சான்று கண்டறியப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், புதுக்கோட்டை அருகே உள்ள சங்க காலத்தைச் சேர்ந்த தமிழர்களின் தொன்மையின் சின்னமாக கருதப்படும் பொற்பனைக்கோட்டையை தொல்லியல் அகழாய்வு செய்ய ஏற்கனவே அனுமதி பெற்றுள்ள நிலையில், பொற்பனைக் கோட்டையில் இன்று தொடங்கும் அகழ்வாய்வு பணியினை சுற்றுச்சூழல் அமைச்சர் மெய்யநாதன் இன்று தொடங்கி வைத்தார்.

புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் அருகே உள்ள பொற்பனைக்கோட்டை சங்ககால தொன்மை மிக்க இடமாக கருதப்படுகிறது. இங்கு கொத்தளங்கள், அகழிகள் உள்ளன. கோட்டை சுவரில் 4 இடங்களில் வாசல்கள், கருப்பு, சிவப்பு பானை ஓடுகள், பல்வேறு இரும்பு உருக்கு ஆலைகள் செயல்பட்டிருப்பது கண்டறியப்பட்டது.

இவ்விடத்தை அரசு அகழாய்வு செய்ய வேண்டும் என தொல்லியல் ஆய்வுக் கழகத்தினர் தொடர்ந்த வழக்கில், ஆய்வு செய்ய அனுமதி அளித்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை சில மாதங்களுக்கு முன்பு உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், இவ்விடத்தை அகழாய்வு செய்வதற்கு அனுமதி கோரி அரசுக்கு தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக் கழகம் கோரிக்கை விடுத்திருந்தது. அதனடிப்படையில் இப்பல்கலைக்கழகத்துககு அனுமதி அளிக்கப்பட்டது.

இதனையடுத்து கடந்த 25ம் தேதி அப்பல்கலைக்கழகத்தின் தொல்லியல் துறை பேராசிரியர் இனியன் முன்னிலையில் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் இருந்து நவீன தொழில்நுட்பக் குழுவினர் பொற்பனைக்கோட்டையில் பல்வேறு இடங்களில் ஜிபிஆர் எனும் கருவி மூலம் மின்காந்த அலையை மண்ணுக்குள் செலுத்தி சோதனை செய்தனர். அதன் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்ட இடத்தில், அகழ்வாய்வு பணியினை சுற்றுச்சூழல் அமைச்சர் மெய்யநாதன் இன்று தொடங்கி வைத்தார்.

இந்த பணிகளை சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் தொடங்கி வைத்து எவ்வாறு அகல்வாய் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது என்பது குறித்து அகழாய்வு குழுவினரிடம் கேட்டறிந்தார்.

“கீழடியை தொடர்ந்து தமிழரின்  அடையாளங்களை பறைசாற்றும் பொற்பனைக்கோட்டை அகழாய்வு” : அமைச்சர் மெய்யநாதன் !

அப்போது செய்தியாளர்களை சந்தித்த சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் கூறுகையில், “எனது தொகுதிக்குட்பட்ட பொற்பனைக் கோட்டையில் அகழ்வாய்வு செய்வதில் பெருமை அடைகிறேன். இங்கு தமிழர்களின் தொன்மை வாய்ந்த வாழ்வியல் சின்னங்கள் புதைந்து கிடக்கலாம் என்பது தெரியவந்துள்ளது.

கீழடி, பொற்பனைக் கோட்டை என பிரித்து பார்க்காமல் இவை அனைத்தும் தமிழர்களின் ஒட்டுமொத்த வரலாற்று சின்னங்களாக பார்க்கவேண்டும். பொற்பனைக் கோட்டையில் தொல்லியல் ஆய்வு செய்வதற்கு தேவையான உதவிகளை தமிழ்நாடு முதல்வரின் கவனத்துக்கு கொண்டு சென்று செய்யப்படும். தேவைப்பட்டால் நிதி ஒதுக்கீடும் செய்ய முதல்வர் நடவடிக்கை எடுப்பார்” எனத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பொற்பனைக்கோட்டையில் அகழ்வாய்வு மேற்கொண்டுள்ள தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக்கழக தொல்லியல் துறை பேராசிரியர் இனியன் மற்றும் புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக் கழக நிர்வாகிகள் கூறுகையில், “பொற்பனைக்கோட்டை ஏற்கனவே மேற்கொள்ளப்பட்ட மேல் ஆய்வில் சங்க காலத்தை சேர்ந்த பாசிமணி, கருப்பு சிவப்பு பானை ஓடுகள், இரும்புத் துகள்கள், வளையல்கள் உள்ளிட்ட பல்வேறு தொன்மை வாய்ந்த பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளது.

“கீழடியை தொடர்ந்து தமிழரின்  அடையாளங்களை பறைசாற்றும் பொற்பனைக்கோட்டை அகழாய்வு” : அமைச்சர் மெய்யநாதன் !

இன்று அகழ்வாயுப் பணிகள் தொடங்கியுள்ள நிலையில், இன்னும் ஒரு சில மாதங்களில் முதற்கட்ட பணிகள் முடிவடையும். அவ்வாறு பணிகள் நிறைவடையும் பட்சத்தில், இங்கு பல்வேறு தொன்மை வாய்ந்த பொருட்கள் கிடைக்க வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

ஏற்கனவே சி.பி.ஆர் கருவி மூலம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தொன்மை வாய்ந்த பொருட்கள் புதைந்து கிடைக்கும் இடங்கள் கண்டறியப்பட்டு அதன் அடிப்படையில்தான் இன்று அந்த இடங்களில் மட்டும் அகழ்வாய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது முழுமையாக முடிவடையும் பட்சத்தில் தமிழர்களின் பழங்கால பல்வேறு வாழ்வில் சின்னங்கள் அடையாளம் காணப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories