தமிழ்நாடு

“உள்ளாட்சித் தேர்தல் எப்போது?” : அமைச்சர்கள், அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை!

தமிழ்நாட்டில் விடுபட்ட 9 மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடத்துவது பற்றி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவசர ஆலோசனை மேற்கொண்டார்.

“உள்ளாட்சித் தேர்தல் எப்போது?” : அமைச்சர்கள், அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

உச்சநீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, தமிழ்நாட்டில் விடுபட்ட பகுதிகளில் உள்ளாட்சித் தேர்தல் நடத்துவது குறித்து அமைச்சர்கள், அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார்.

தமிழ்நாட்டில் உள்ள நகர்ப்புற, கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக் காலம் கடந்த 2016-ஆம் ஆண்டே முடிவடைந்த நிலையில், உள்ளாட்சித் தேர்தல் நடத்துவது தள்ளிப்போனது. இறுதியாக, உச்சநீதிமன்ற உத்தரவுப்படி, முதல்கட்டமாக 27 மாவட்டங்களில் உள்ள கிராமப்புற உள்ளாட்சிகளுக்கு மட்டும் தேர்தல் நடத்தப்பட்டது.

பிரிக்கப்பட்ட மற்றும் புதிதாக உருவாக்கப்பட்ட மாவட்டங்களில் உள்ள கிராமப்புற உள்ளாட்சிகளுக்கான தேர்தல், சென்னை உட்பட அனைத்து மாவட்டங்களிலும் உள்ள நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கான தேர்தல் ஆகியவை நடத்தப்படவில்லை.

இந்நிலையில், உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான வழக்கில், வரும் செப்டம்பர் 15-ம் தேதிக்குள் தேர்தலை நடத்தி முடிக்குமாறு தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள தி.மு.க அரசு உள்ளாட்சித் தேர்தலை நடத்தி முடிக் கமுனைப்புடன் செயல்பட்டு வருகிறது. உள்ளாட்சி அமைப்புகளுக்கு விரைவில் தேர்தல் நடத்தப்படும் என்று ஆளுநர் உரையிலும் தெரிவிக்கப்பட்டது.

உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான பணிகள் நடந்து வருவதாகவும், விரைவில் அறிவிக்கப்படும் என்றும் சமீபத்தில் அமைச்சர்கள் கே.என்.நேரு மற்றும் கே.ஆர்.பெரியகருப்பன் ஆகியோர் தெரிவித்தனனர்.

முதல் கட்டமாக செப்டம்பர் மாதத்தில் ஊரக உள்ளாட்சிகளுக்கான தேர்தலையும், இந்த ஆண்டு இறுதிக்குள் அனைத்து நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கான தேர்தலையும் நடத்தி முடிக்க அரசு முடிவெடுத்துள்ளதாகவும் தகவல் வெளியானது.

இந்நிலையில், உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நேற்று மாலை துறை அமைச்சர்கள் கே.என்.நேரு, கே.ஆர்பெரியகருப்பன் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

அப்போது, வார்டு வரையறை பணிகள் குறித்து அமைச்சர்கள், அதிகாரிடம் கேட்டறிந்த முதலமைச்சர், அதுதொடர்பான பணிகளை விரைந்து முடிக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

“உள்ளாட்சித் தேர்தல் எப்போது?” : அமைச்சர்கள், அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை!

மேலும், தமிழ்நாடு சட்டப்பேரவை நூற்றாண்டு விழா வரும் ஆகஸ்ட் 2ஆம் தேதி மாலை 5 மணிக்கு சென்னை தலைமைச் செயலக பழைய கட்டிடத்தில் உள்ள சட்டப்பேரவை அரங்கில் நடக்க உள்ளது. இதில் சிறப்பு விருந்தினராக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பங்கேற்கிறார். ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தலைமையில் நடக்கும் இவ்விழாவில், முத்தமிழறிஞர் கலைஞரின் உருவப் படத்தை குடியரசுத் தலைவர் திறந்து வைக்கிறார்.

இந்த விழாவுக்கான ஏற்பாடுகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் பேரவைத் தலைவர் அப்பாவு அறையில் நேற்று மாலை ஆலோசனை நடந்தது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர்கள், பேரவை துணைத் தலைவர் பிச்சாண்டி, தலைமைச் செயலர் இறையன்பு உள்ளிட்டோர் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் விழாவுக்காக யார் யாருக்கு அழைப்பு விடுப்பது, இருக்கை ஏற்பாடு, கொரோனா தடுப்பு வழிமுறைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

banner

Related Stories

Related Stories