தமிழ்நாடு

“ஒன்றியம் என்றதும் சங்கிகளுக்கு எரிவது ஏன்?” : பேராசிரியர் ஹாஜாகனி விளாசல்!

ஒற்றைத் தேசம், ஒரே மதம், ஒற்றைப் பண்பாடு என்போருக்கு இந்திய ஒன்றியம் என்ற சொல் எரிகிறது.

“ஒன்றியம் என்றதும் சங்கிகளுக்கு எரிவது ஏன்?” : பேராசிரியர் ஹாஜாகனி விளாசல்!
Vignesh
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

தமிழ்நாடு, இந்திய ஒன்றியம் ஆகிய சொற்கள், முத்துவேலர் கருணாநிதி ஸ்டாலின் அரசு பயன்பாட்டிற்குக் கொண்டுவந்ததும் பா.ஜ.கவினர் பொங்கி எழுகின்றனர். மூத்த பத்திரிகையாளர் என்ற முகமூடியில் ஒளிந்திருந்த பலரையும் இந்தச் சொற்கள் அவசர அவசரமாக அம்பலப்பட வைத்துவிட்டன.

ஏன் திடீரென தமிழ்நாடு என அழைக்க வேண்டும், தமிழகம் என்று அழைப்பதுதானே சரியானது என்றார் ஒரு மூத்த பத்திரிகையாளர். ஆரிய மாய்மால அறிவுரைகள் எல்லாம் தமிழ்நாட்டில் எப்போதும் எதிர்விளைவுகளையே ஏற்படுத்தும் என்பதற்கு அடையாளமாக, தப்பித்தவறி தமிழகம் என்று சொல்லிவந்த உணர்வாளர்கள் கூட, கவனமாக தமிழ்நாடு என்று உச்சரிக்கத் தொடங்கிவிட்டனர்.

தமிழ்நாடு தமிழர்களுக்கான நாடு!

தமிழ்நாடு என்ற சொல் தமிழர்களுக்கென்று தனியாக ஒரு நாடு இருப்பதுபோன்ற தோற்றத்தைத் தருகிறதாம். நாடில்லா ஆரிய இனத்திற்கு “தமிழினம் நாடு பெற்ற இனமாக இருந்தால் பொறுக்குமா உடனே தமிழ்நாடு என்று சொல்லாதீர்கள் என தேசிய உபதேசத்தைத் தெய்வீக தொனியில் உபன்யாசம் செய்ய, பெரியாரின் பேராண்டிகளோ அவர்களைப் பிய்த்து மேய்ந்து விட்டார்கள்.

23-6-2021 அன்று ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் சட்டமன்றக் கூட்டத்தொடரில் பா.ஜ.க.வின் உறுப்பினர் நயினார் நாகேந்திரன், “ஒன்றிய அரசை ஏன் ஒன்றிய அரசு என்று கூறுகிறீர்கள்? அதன் நோக்கம் என்ன?” என்று தொடுத்த வினாவிற்கு விடையளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “ஒன்றிய அரசு என்று குறிப்பிடுவது ஒன்றும் சமூகக் குற்றமல்ல, இந்திய அரசியல் சாசனத்தில் ஒன்றிய அரசு என்றுதான் குறிப்பிடப்பட்டுள்ளது” என்று ஆதாரங்களோடு மூத்த தலைவர்களின் உரைக் குறிப்புகளை மேற்கோள் காட்டியும் நெற்றியடி பதிலைக் கொடுத்துள்ளார்.

அதற்கு மேல் எதிர்பார்ப்பது நியாயமல்ல!

முன்னாள் முதலமைச்சர் பழனிசாமியிடம் இதுகுறித்து செய்தியாளர்கள் முன்பு கேட்டபோது, “மத்திய அரசு என்று குறிப்பிடுவதே சரி” என்று கூறியுள்ளார். “கம்பராமாயணத்தை எழுதியவர் சேக்கிழார்” என்று தைரியமாகப் பேசிய அவரிடம், அதற்குமேல் எதிர்பார்ப்பது அநியாயமானது.

2000-ன் துவக்ககாலத்தில் ஊடகவியலாளர் கஜேந்திரனும், நாமும், மத்திய அரசு என ஏன் தவறாகக் குறிப்பிடுகின்றனர், ஒன்றிய அரசு என்று கூறுவதுதானே சரியானது என விவாதிப்போம். Central என்பது ஒற்றைத் தன்மையையும் Union என்பது கூட்டாட்சித் தன்மையையும் குறிப்பிட்டு உரையாடுவோம். இப்போது அது அதிகாரப்பூர்வ நடை முறைக்கு வந்தது மிகவும் சிறப்பு.

ஆரிய மாயைகளில் இருந்து தமிழ்நாடு மீண்டு வந்துள்ளது!

அமெரிக்க ஐக்கிய நாடுகள் (United States of America) என்றிருப்பது போல, இந்திய ஒன்றிய நாடுகள் United States of India என்றிருக்க வேண்டும் என வைகோ உள்ளிட்ட வரலாற்றுத் தடம் அறிந்த பல தலைவர்கள் பேசியுள்ளனர்.

சங்பரிவாரத்தின் கொள்கை, மாநிலங்கள் இல்லாத இந்தியா! இந்து, இந்தி, இந்தியா என்ற அவர்களின் லட்சியத்தில் மாநிலங்களோ, ஒவ்வொரு மாநிலத்திற்குமான தனித்த அடையாளங்களோ, பண்பாடுகளோ, மொழியுணர்வுகளோ இருக்கக்கூடாது.

ஒரே மதம், ஓரே மொழி, ஒரே நாடு என்ற வடிகட்டிய முட்டாள்தனத்திற்கு, திராவிட இயக்கம் தெளிவான பதில்களைத் தந்துள்ளதோடு, ஆரிய மாயைகளிலிருந்து தமிழர்களை மீட்டும் வந்துள்ளது.

ஒற்றைத் தேசம், ஒற்றைப் பண்பாடு என்ற மதவாத லட்சியத்தை மண்ணில் புதைக்கும் முழக்கமாகவே மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி ஒலித்தது.

பழைய அரிவாள்! புதிய வெட்டு!

மத்திய என்ற சொல்லின் மூலம் மாநில உரிமைகளை நசுக்குகிற நச்சுச் சிந்தனை நாட்டை ஆண்டுவரும் சூழலில், ஒன்றிய என்ற சொல்லை தமிழ்நாட்டு தி.மு.க அரசாங்கம் சுண்டிவிட்டுள்ளது.

இது பழைய அரிவாளால் போடப்பட்ட புதிய வெட்டு என்றும் சொல்லலாம். பாட்டன்மார்கள் வைத்துவிட்டுப் போன அறிவாயுதங்களை எடுத்துப் பயன்படுத்தும் திறம்படைத்த பேரப் பிள்ளைகள் வீரப்பிள்ளைகளாய் இருப்பதை உணர்த்தும் வழி என்றும் கொள்ளலாம்.

புதுவையிலும் புதுமை!

தமிழ்நாடு, இந்திய ஒன்றியம் என்று அழைக்கத் தொடங்கியதும் அதன் எதிரொலி புதுவையிலும் கேட்கிறது. பா.ஐ.க-வால் நியமிக்கப்பட்ட ஆளுநர் தமிழிசையும் தமிழ்நாட்டின் தன்மான இசைக்கு சுதி சேர்க்கும் வகையில் இந்திய ஓன்றிய ஆட்சிப் பரப்பு என புதுச்சேரியைக் குறிப்பிடுகிறார்.

ஒன்றியம் என்பது கெட்ட வார்த்தை அல்ல என்பதை பா.ஜ.க.வினர் இப்போதாவது உணரட்டும். ஒற்றைத் தேசம், ஒரே மதம், ஒற்றைப் பண்பாடு என்போருக்கு இந்திய ஒன்றியம் என்ற சொல் எரிகிறது. தமிழர்களின் மண்ணையும் மனத்தையும் தன்மானமல்லவா ஆட்சி புரிகிறது!

- பேராசிரியர் முனைவர்.ஜெ.ஹாஜாகனி

நன்றி: நக்கீரன்

banner

Related Stories

Related Stories