தமிழ்நாடு

“அபிராமி லிங்கனுக்கும், ஆபிரகாம் லிங்கனுக்கும் வித்தியாசம் தெரியாத உங்களுக்கு..”: செந்தில்பாலாஜி விளாசல்!

செல்லூர் ராஜூவை தொடர்ந்து, எடப்பாடி பழனிசாமியை கலாய்த்துள்ளார் மின் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி.

“அபிராமி லிங்கனுக்கும், ஆபிரகாம் லிங்கனுக்கும் வித்தியாசம் தெரியாத உங்களுக்கு..”: செந்தில்பாலாஜி விளாசல்!
Vignesh
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

சமீபத்தில் அரைகுறை புரிதலோடு தன்னை விமர்சித்த முன்னாள் அ.தி.மு.க அமைச்சர் செல்லூர் ராஜூவுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, “2020ஆம் ஆண்டு மதுரை உயர்நீதிமன்றத்தில் அப்போதைய அ.தி.மு.க அரசு ஆலங்குளம் துணை மின் நிலையத்தின் மின் பிரச்னைகளுக்கு அணில்கள் காரணமென விளக்கமளித்துள்ளது. பார்க்க படித்தவர் போலிருக்கும் செல்லூர் ராஜூ, இதைப்பற்றி தங்கமணியிடமோ உயர்நீதிமன்றத்திடமோ கேட்டு புத்தி தெளிய வேண்டுகிறேன்” எனச் சாடியிருந்தார்.

இந்நிலையில், இன்று முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அமைச்சர் செந்தில் பாலாஜி குறித்துப் பேசியிருந்தார். அப்போது அணில் ஏறுவதால் மின்வெட்டு என்பது கேலிக்கூத்தானது எனக் கூறினார்.

எடப்பாடி பழனிசாமிக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ள அமைச்சர் செந்தில்பாலாஜி, “13 அப்பாவித் தமிழர்கள் துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்டதை டி.வி பார்த்து தெரிந்துக்கொண்ட, கம்பராமாயணத்தை சேக்கிழார் எழுதினார் என கண்டுபிடித்த எடப்பாடி பழனிசாமி இப்பொழுது மின்சாரத்தில் இயங்கும் டி.வியை பார்த்து மின் வெட்டு இருப்பதை கண்டறிந்திருக்கிறார்.

முதலில் எடப்பாடி பழனிசாமியின் ஆட்சியில் மின் உற்பத்திக்காக துவங்கப்பட்ட திட்டங்கள் எவை? திட்டங்களின் மதிப்பீடு என்ன? அதற்காக செலவு செய்யப்பட தொகை எவ்வளவு? அந்த திட்டங்களின் இன்றைய நிலை என்ன என்பதை தமிழக மக்களுக்கு தெரிவிக்க வேண்டும்.

மேதகு தமிழ்நாடு ஆளுநர் உரையில் குறிப்பிட்டது போல் கடந்தகால ஆட்சியில் ஏற்பட்ட குளறுபடிகள், தவறுகள், நிதிநெருக்கடிகள் தொடர்பாக மின் துறையிலும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

முறையான பராமரிப்பு இல்லாததால் அணில்கள் உள்ளிட்ட உயிரினங்கள் கம்பிகளில் படுவதாலும் மின் தடை ஏற்பட்டிருக்கின்றனவென உங்கள் ஆட்சியிலேயே உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளீர்கள். அது பொய்யா?

மின் பராமரிப்பு பணிகளுக்காக 19.06.2021 முதல் 28.06.2021 வரை 10 நாட்களாக மின்வாரியம் எடுத்துக்கொண்ட பணிகள் 2,28,000 ஆயினும் முடிக்கப்பட்ட பணிகள் 271000 . ஏறத்தாழ 42,000 கூடுதலாக முடிக்கப்பட்டுள்ளது. இதனை முதலில் அறிந்துகொள்ளுங்கள்.

ஆயினும் அபிராமி லிங்கனுக்கும், ஆபிரகாம் லிங்கனுக்கும் வித்தியாசம் தெரியாத உங்களுக்கு இதெல்லாம் புரிந்தாலே ஆச்சரியம்.” என கிண்டல் செய்துள்ளார்.

banner

Related Stories

Related Stories