தமிழ்நாடு

“இலங்கைத் தமிழர்களுக்கு முதல் கட்டமாக 1,000 குடியிருப்புகள் கட்ட நடவடிக்கை” - அமைச்சர் மஸ்தான் தகவல்!

அகதிகள் முகாமில் வசிக்கும் இலங்கைத் தமிழர்களுக்கு முதல் கட்டமாக ரூ.20 கோடி மதிப்பீட்டில் 1,000 குடியிருப்புகள் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் செஞ்சி மஸ்தான் தெரிவித்தார்.

“இலங்கைத் தமிழர்களுக்கு முதல் கட்டமாக 1,000 குடியிருப்புகள் கட்ட நடவடிக்கை” - அமைச்சர் மஸ்தான் தகவல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

திண்டுக்கல் மாவட்டத்தில் அகதிகள் முகாமில் வசிக்கும் இலங்கைத் தமிழர்களுக்கு முதல் கட்டமாக ரூ.20 கோடி மதிப்பீட்டில் 1,000 குடியிருப்புகள் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் தெரிவித்தார்.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள இலங்கை அதிகளுக்கு உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி தோட்டனூத்து, அடியனூத்து, கோபால்பட்டி ஆகிய ஊர்களில் உள்ள இலங்கை அகதிகள் முகாம்களில் இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் ச.விசாகன் தலைமை வகித்தார்.

கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் ஆகியோர், இலங்கை அகதிகள் முகாம்களில் தேவையான அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.

இந்நிகழ்வில் சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர்கள் நலத்துறை இயக்குநர் ஜெசிந்தாலா சரத் வரவேற்றார். திண்டுக்கல் எம்.பி., வேலுச்சாமி, பழனி எம்.எல்.ஏ இ.பெ.செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

அகதிகள் முகாமில் தங்கியுள்ளவர்களின் தேவைகளைக் கேட்டறிந்தனர். தொடர்ந்து, முகாமில் வசிப்பவர்களுக்கு கொரோனா நிவாரண உதவிகளாக அரிசி, மளிகைப் பொருட்களை அமைச்சர்கள் வழங்கினர்.

அமைச்சர் ஐ.பெரியசாமி பேசுகையில், “இலங்கை அகதிகள் அனைவருக்கும் இந்தியக் குடியுரிமையைப் பெற்றுத் தருவதற்கான முயற்சியைத் தமிழ்நாடு முதலமைச்சர் மேற்கொண்டுள்ளார். இதுகுறித்து, பிரதமரிடம் வலியுறுத்தியுள்ளார்” எனத் தெரிவித்தார்.

சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் பேசுகையில், “தமிழ்நாட்டில் உள்ள 108 இலங்கைத் தமிழர் அகதிகள் முகாம்களுக்கு நேரடியாகச் சென்று அவர்களின் தேவைகளைக் கேட்டறிந்து வருகிறோம். திண்டுக்கல் மாவட்டத்தில் முகாமில் வசிக்கும் இலங்கைத் தமிழர் அகதிகளுக்கு முதல் கட்டமாக ரூ.20 கோடி மதிப்பீட்டில் 1,000 குடியிருப்புகள் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் இதுவரை வக்பு வாரியத்திற்குச் சொந்தமான 7,000 ஏக்கர் ஆக்கிரமிப்பு நிலங்கள் கண்டறியப்பட்டு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. ஆக்கிரமிப்பு நிலங்கள் விரைவில் கையகப்படுத்தி வக்பு வாரியத்திடம் ஒப்படைக்கப்படும்.

வக்பு வாரியத்தின் சொத்துகள் தொடர்ந்து கண்டறியப்பட்டு உடனுக்குடன் பட்டியல் வெளியிடப்பட்டு வருகிறது. சுமார் 7,000 சொத்துகள் வக்பு வாரியத்திற்குச் சொந்தமானவை எனப் பட்டியலிடப்பட்டுள்ளன.

சொத்துகள் விவரம் குறித்து ஆன்லைனில் தெரிந்துகொள்ளலாம். முழுமையாக வக்பு வாரிய இடங்கள் மீட்கப்பட்டு முழுப் பட்டியல் விரைவில் வெளியிடப்படும்” எனத் தெரிவித்தார்.

banner

Related Stories

Related Stories