தமிழ்நாடு

இது வெறும் ட்ரெய்லர்தான் என ஆளுநர் உரையை பறைசாற்ற காரணம் என்ன? -விளக்குகிறார் திமுக இலக்கிய அணி செயலாளர்!

முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்கிற பெயர் ஒரு தனிமனிதரின் பெயரல்ல. இது ஒரு வரலாற்றின் பெயர் என புலவர் இந்திரகுமாரி தெரிவித்துள்ளார்.

இது வெறும் ட்ரெய்லர்தான் என ஆளுநர் உரையை பறைசாற்ற காரணம் என்ன? -விளக்குகிறார் திமுக இலக்கிய அணி செயலாளர்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழ்நாட்டில் 16வது சட்டமன்றக் கூட்டத்தொடரின் போது ஆளுநர் பன்வாரிலால் ஆற்றிய உரை வெறும் ட்ரெய்லர்தான் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டதற்கான காரணம் குறித்து தி.மு.கவின் இலக்கிய அணிச் செயலாளர் புலவர் இந்திரகுமாரி விளக்கியுள்ளார்.

அதன் விவரம் பின்வருமாறு:-

“ஆளுநர் உரையில் தொடங்கி, அதற்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் வரை நான்கே நாள்தான் நடந்திருக்கிறது சட்டப்பேரவை! ஆனால் ஆளுமைமிக்க ஒரு முதல்வரை அடையாளம் காண இந்த நான்கு நாட்களே போதுமென்றாகிவிட்டது. நத்தை மாதிரி நகர்ந்தே சென்று பதவி நாற்காலியின் கால்களை கட்டிப்பிடித்துக் கொண்டவர்களால் தலைகுனிந்த தமிழ்நாடு.... ஒட்டுமொத்த மாநிலத்தையும் நடந்தே கடந்த ஒரு மனிதனின் அரியணை.... சமூகநீதி- மொழிப்பற்று- சுயமரியாதை- மாநில உரிமை என்கிற வலுவான கால்களால் வடிவமைக்கப்பட்டிருப்பதைப் பார்த்து வியந்து போகிறது. இது பத்தாண்டுகளுக்குப் பிறகு ஒட்டுமொத்த இந்தியாவிற்கும் வழிகாட்ட நாட்டின் தென்முனையில் தென்படுகிற நம்பிக்கை ஒளி.

முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்கிற பெயர் ஒரு தனிமனிதரின் பெயரல்ல. இது ஒரு வரலாற்றின் பெயர். சமூகநீதி ஈடினையற்ற அரசியல் கோட்பாட்டின் நவீன வடிவம். நூறாண்டுகளுக்கு முன்பே ஆதிக்க சாதிகளின் கன்னத்தில் அறைந்த கைவழித் தொடர்ச்சி. அதனால்தான் அண்ணாவின் அரசியல் வாரிசாகவும், கலைஞரின் கொள்கை வாரிசாகவும் தன்னை வரித்துக் கொண்டுவிட முடிகிறது இந்த மனிதரால். 'ஆள்வினை உடைமை' தான் நல்லாட்சியின் அஸ்திவாரம். ஆள்வினை உடைமை என்பது எடுத்துக்கொண்ட செயலை செம்மையாக கையாளுதல். இதற்கு எடுத்துக்கொண்ட வினைக் குறித்த பரிபூரண ஞானம் அவசியம்.

இரண்டாவதாக அதை நிறைவேற்றத் தடைக்கல்லாக இருக்கும் முட்டுக்கட்டைகளை கண்டறிந்து தகர்க்கிற துணிச்சல். மூன்றாவதாக சமரசமின்மை. இந்த மூன்றுமிருந்தால் எந்த எதிர்ப்பையும் தகர்க்க முடியும். எந்த இலக்கையும் எட்ட முடியும். முதல்வர் ஸ்டாலினுக்கு மூன்றுமே முடிந்திருக்கிறது. கடந்த பத்தாண்டுகளாய் ஆட்சியிலிருந்தவர்களின் இருண்ட காலத்தில் நாங்கள் நீதிக்கட்சியின் தொடர்ச்சிதான் என்று இருட்டிலிருந்து கூட பேச முடியவில்லை அவர்களால்! இன்றோ நாங்கள் நீதிக்கட்சி ஆட்சியின் தொடர்ச்சி என்று ஊரறிய பறைசாற்ற முடிந்திருக்கிறது. இந்த பேராண்மைக்குக் காரணம் அரசியல், சமூக, வரலாற்று அறிவு தாய்ப்பாலோடு சேர்த்து புகட்டப்பட்டிருக்கிறது.

இது வெறும் ட்ரெய்லர்தான் என ஆளுநர் உரையை பறைசாற்ற காரணம் என்ன? -விளக்குகிறார் திமுக இலக்கிய அணி செயலாளர்!

அடக்கப்பட்ட யானைக்குத்தான் மணி கட்டிவிடப்படும் என்கிற முதல்வரின் வார்த்தைகளுக்கு இதற்குமுன் ஜார்ஜ் கோட்டையில் கழுத்தில் கட்டப்பட்ட மணிகளுடன் திரிந்தவையெல்லாம் யானைகள் என்று பொருளல்ல. அவையனைத்தும் மணிகட்டிவிடப்பட்ட பூனைகள். இப்படிப்பட்ட வேடம் போட வேண்டிய அவசியம் முத்தமிழறிஞரின் பிள்ளைக்கு இல்லை. அதனால்தான் எந்தப் பீடிகையும் இல்லாமல் திராவிட இயக்கக் கோட்பாடுகளின் நேரடி முழக்கமாக ஒலித்தது ஆளுநரின் உரை. பேரவையில் உரக்க ஒலித்த அந்த திராவிட முழக்கத்தைக் கேட்டு அடியோடு வீழ்ந்திருக்கிறது சனாதனத்தின் செல்லரித்துப்போன வேர்கள். அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள ஒன்றிய அரசு என்கிற பதத்தைதான் பயன்படுத்துவோம் என்று பக்குவமாக ஊசியேற்றுவதிலிருந்து, ரகுராம்ராஜன் உள்ளிட்ட ஐந்து பொருளாதார வல்லுநர்களை ஆர்ப்பாட்டமேயில்லாமல் களமிறக்குவதுவரை கலைஞரின் ஒட்டுமொத்த இராஜதந்திரத் திறனையும் உள்வாங்கிக் கொண்டு உற்சாகத்துடன் பணிபுரிவதில் ஒளிர்கிறது திராவிடத்தின் திருவிளக்கு.

அறிவார்ந்த இளைஞர்களின் துணையுடன் தமிழ்நாட்டின் நீர்வளத்தைக் காப்பது, பணிபுரியும் மகளிருக்கான பிரத்யேக விடுதிகள், தமிழக மக்கள் உள்ளதை உள்ளபடி அறிவதற்காக ஜூலையில் நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கை என்று ஆளுநர் உரையின் மூலம் யாருக்கும் அடங்காத இந்த அரிய யானை எடுத்துவைக்கும் ஒவ்வொரு அடியும் அரசியல் அரங்கில் நெத்தியடி. "இன்பம் விழையான் வினைவிழைவான் தன்கேளிர்துன்பம் துடைத்தூன்றும் தூண்" என்கிற வள்ளுவத்தை சொல்லுக்குச் சொல் விளக்குவதாக இருக்கிறது ஆளுமை முதல்வரின் ஆளுநர் உரை. அதனால் தான் "இது வெறும் டிரெய்லர்தான்" என்று பறைசாற்ற முடிகிறது முதல்வரால்! இப்படி சொல்கிற துணிவு இந்த முதல்வரைப்போல் வேறு எந்த முதல்வருக்கு வரும்.?” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories