தமிழ்நாடு

மின் மாஃபியா... மின் வாரியத்தைச் சீர்குலைத்த கும்பல் - அதிரடி நடவடிக்கை பாயுமா? - ஆவலில் மக்கள்!

குளிரூட்டப்பட்ட அறையில் உட்கார்ந்துகொண்டு மின் மாஃபியாக்களாக செயல்படுவோர்களால் சுருட்டப்பட்ட, மக்களின் வரிப்பணம் சொல்லி மாளாது.

மின் மாஃபியா... மின் வாரியத்தைச் சீர்குலைத்த கும்பல் - அதிரடி நடவடிக்கை பாயுமா? - ஆவலில் மக்கள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

சட்டப்பேரவையில், இந்தியத் தலைமைக் கணக்காயரின் தணிக்கை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் 2013-ஆம் ஆண்டு முதல் 2018 ஆம் ஆண்டுவரை அதிக விலைக்கு மின்சாரம் கொள்முதல் செய்யப்பட்டதால் தமிழ்நாடு மின்வாரியத்திற்கு ரூ.14 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக இந்தியத் தலைமைக் கணக்காயர் தணிக்கை (சி.ஏ.ஜி) அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அறிக்கையில் கூறப்பட்டுள்ள முக்கிய சாராம்சங்கள் பின்வருமாறு:

அ.தி.மு.க ஆட்சியில் 2013ஆம் ஆண்டு முதல் 2018 ஆம் ஆண்டு வரை கூடுதல் விலைக்கு மின்சாரம் கொள்முதல் செய்ததில் ரூ.14 ஆயிரம் கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது. தகுதி அடிப்படையில் கடைநிலையில் இருந்த மின் உற்பத்தி நிறுவனத்திடம் இருந்து மின்சாரம் கொள்முதல் செய்ததில் ரூ. 493.74 கோடி கூடுதல் செலவு ஏற்பட்டுள்ளது.

குறைந்த விலையில் பெறவேண்டிய மின்சாரத்தை பெறாமல் கூடுதல் விலைக்கு மின்சாரம் கொள்முதல் செய்ததில் மின் உற்பத்தி கழகத்துக்கு (TANGEDCO) ரூ.349.67கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. ஒப்பந்தப்படி செயல்படாத நிறுவனங்களிடம் இருந்து அதிக விலைக்கு மின்சாரம் வாங்கியதில் ரூ.712 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. தமிழ்நாடு மின்சார வாரியத்துக்கு வந்து சேராத மின்சாரத்திற்கு பணம் கொடுத்த வகையில் ரூ.242.9 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.

வெளிமாநிலங்களில் இருந்து கிடைக்கவேண்டிய மின்சாரத்தைப் பெறாமல் உள்ளூரில் மின்சாரம் கொள்முதல் செய்ததால் ரூ.1,055.8 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது. ஒப்பந்தப்படி செயல்படாத நிறுவனங்களிடம் இருந்து அதிக விலைக்கு மின்சாரம் வாங்கியதில் ரூ.712 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. சூரிய ஒளி மின்திட்டங்களைத் தொடங்காத நிறுவனங்களுடன் செய்த ஒப்பந்தத்தால் தமிழ்நாடு மின் உற்பத்தி கழகத்துக்கு ரூ.605.48 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. நீண்ட கால ஒப்பந்தத்தை ரத்து செய்துவிட்டு குறுகிய கால ஒப்பந்தம் செய்ததால் ரூ. 93.4 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.

2015- 2018 ஆம் ஆண்டு காலக்கட்டத்தில் அதிக விலையில் மின்சாரம் வாங்கியதால் மின் உற்பத்திக் கழகத்துக்கு ஏற்பட்டுள்ள இழப்பு ரூ.544.44 கோடியாகும். சந்தை விலையில், யூனிட் ஒன்றுக்கு ரூ.5.42, ரூ.3.39 க்கு வாங்கவேண்டிய மின்சாரத்தை ரூ.12க்கு அதிக விலை கொடுத்து வாங்கியுள்ளது. 3 ரூபாய் மின்சாரத்தை ரூ.5.50க்கு முறைகேடாக வாங்கியதில் ரூ.1687 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.

அ.தி.மு.க. ஆட்சியில் மின்சாரம் கொள்முதல் செய்யப்பட்டதில் ஊழல் நிகழ்ந்துள்ளது சி.ஏ.ஜி. அறிக்கை மூலம் அம்பலமாகியுள்ளது. மின் உற்பத்திக் கழகம் மற்றும் மின்பகிர்மானக் கழகம் (TANTRASSCO) ஆகியவற்றின் முறையற்ற நிர்வாகத்தின் காரணமாகவும், தமிழ்நாடு மின்சார வாரியத்தின் மாஃபியாக்கள் பிடியில் சிக்குண்டு கிடப்பதாலும் தமிழ்நாடு மின்சார வாரியம் மட்டுமே, தமிழ்நாடு அரசின் கடன்தொகைக்குப் போட்டிபோடும் வகையில், ஒரு இலட்சத்து 57 ஆயிரம் கோடி ரூபாய் கடனில் மூழ்கி, டைட்டானிக் கப்பல் போன்று மூழ்கிக் கொண்டிருக்கிறது.

1991 - 1996 கால அ.தி.மு.க.வின் மேனாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஆட்சியில், நிலக்கரி கொள்முதலில் தொடங்கிய ஊழல்களைத் தொடர்ந்து, மின் உற்பத்தி திட்டங்களில் சுணக்கம் ஏற்படுத்துதல், மின்பகிர்மானப் பணிகளை செயல்படுத்துவதில் முட்டுக்கட்டை போட்டு, புதிய ஒப்பந்தங்கள் போடுவதன் மூலம் செயற்கையாக 30ரூ கூடுதல் செலவினம் ஏற்படுத்துவதால் ஏற்பட்டுள்ள இழப்பு தனிக்கதை.

ஹரிபாஸ்கர் என்ற அதிகாரிக்கு கரி பாஸ்கர் என்று பட்டம் சூட்டிய பின்னரும் மின் மாஃபியாக்கள் கொட்டம் அடங்கவில்லையாம். ஏற்கனவே, உப்பூர், உடன்குடி, செய்யூர் அனல் மின் திட்டங்கள் மற்றும் கொல்லிமலை புனல் மின் திட்டம் ஆகியவற்றை முடிக்காத நிலையை சுட்டிக்காட்டி இருந்தோம்.

400 கே.வி மின்கம்பி வடத்தடம் வெள்ளாள விடுதியில் அமைப்பதில், ஈ.எம்.சி. என்ற நிறுவனத்துக்கு கடந்த, மே 2018இல் (- 15 ரூ குறைவில்) மே 2018இல் ஒப்பந்தம் தரப்படுகிறது. அந்நிறுவனத்தின் ஊழியர்கள் பிரச்சினை காரணமாக மே2019க்குள் தங்களால் பணியை முடிக்க இயலவில்லையென்றும், எனவே, அசோசியேட் பவர்ருக்ட்டர்ஸ் நிறுவனத்தை தங்களுடன் இணைத்துக்கொண்டு, பழைய ஒப்பந்தபுள்ளியில், ஏழு மாத கால அவகாசத்தில் முடித்துக்கொடுக்க முத்தரப்பு ஒப்பந்தம் செய்திட, மின்சக்தி துறையின் முதன்மைச் செயலாளருக்கு கடந்த 26.07.2019இல் கோரிக்கை வைக்கப்பட்டதாக கூறப்பட்டது.

மின் மாஃபியா... மின் வாரியத்தைச் சீர்குலைத்த கும்பல் - அதிரடி நடவடிக்கை பாயுமா? - ஆவலில் மக்கள்!

இதுதொடர்பாக நிறுவனம் குறித்து ஆய்வு செய்திட ஒரு செயற்பொறியாளர் பணிக்கப்படுகிறார். அவர் நிறுவனத்தின் செயல்பாடுகள் குறித்து திருப்திகரமான அறிக்கை தந்ததும், வாரியத்தின் நிர்வாகக்குழு அந்த அறிக்கையைக் கிடப்பில் போட்டுவிட்டு, வேறு ஒரு செயற்பொறியாளர் மூலம் எதிர்மறையான அறிக்கை தாக்கல் செய்ய வைத்ததாகக் கூறப்படுகிறது. இது ஈ.எம்.சி. கோரிக்கையை நிராகரிக்கும் உத்தி என வாரியத்திலுள்ள சில நேர்மையான அலுவலர்கள் கூறுகின்றனர். இவரின் கோரிக்கையை பரிசீலித்து இருந்தால், இந்தப்பணி மூலம் அரசுக்கு 30ரூ இழப்பு தவிர்க்கப்பட்டிருக்கும். ஆனால், கோரிக்கையை ஏற்க மறுத்து புதிய ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.

புதிய ஆட்சிப் பொறுப்பேற்றபின் புதிய மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, வாரிய இயக்குனரை பொறுப்பிலிருந்து விடுவித்துள்ளார். இது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. கரண்ட் கம்பியில் ஏறி உயிரைப் பணயம் வைத்து உழைப்போர் படும் துயர் சொல்லிமாளாது. கரண்ட் பில் கண்டு ஷாக் ஆகும் பொதுமக்கள் படும் துயர் சொல்லி மாளாது. ஆனால், குளிரூட்டப்பட்ட அறையில் உட்கார்ந்துகொண்டு மின் மாஃபியாக்களாக செயல்படுவோர்களால் சுருட்டப்பட்ட, மக்களின் வரிப்பணம் சொல்லி மாளாது.

எனவே, தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் உடனடியாக தலையிட்டு, மின்வாரியத்தில் நடந்துள்ள ஊழல் விவகாரங்களை விசாரித்து தவறு இழைத்தோர் மீது லஞ்ச ஒழிப்புத் துறையின் நேரடி விசாரணை மூலம், கொள்ளையடிக்கப்பட்ட தொகையை மீட்பதுடன், தவறிழைத்தோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று மிகுந்த ஆவலுடன் மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

- காந்தி. கருணாநிதி

சிறப்புச் செய்தியாளர், வணக்கம் தமிழ்நாடு

நன்றி: முரசொலி

banner

Related Stories

Related Stories