தமிழ்நாடு

"தமிழ்நாட்டில் முதன்முறையாக சென்னையில் வைரஸ் பகுப்பாய்வு மையம்" : அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி!

தமிழ்நாட்டில் கொரோனா டெல்டா பிளஸ் வைரஸ் மூன்று பேருக்கு கண்டறியப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

"தமிழ்நாட்டில் முதன்முறையாக சென்னையில் வைரஸ் பகுப்பாய்வு மையம்" : அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

உலக வெண்புள்ளி தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு வீடியோவை சென்னை தலைமைச் செயலகத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்டார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், "தமிழ்நாட்டில் முதன்முறையாக வைரஸ் பகுப்பாய்வு மையம் தொடங்கவிருக்கிறோம். பெங்களூருவுக்கு மாதிரிகளை அனுப்பி பரிசோதனை முடிவுகள் வருவதற்கு தாமதமாவதால், ஒன்றிய அரசு மட்டும் செய்துகொண்டிருக்கும் வைரஸ் பகுப்பாய்வு ஆய்வை, ஐ.சி.எம்.ஆர் வழிகாட்டுதலின்படி செய்துகொண்டிருக்கும் 14 நிறுவனங்களைத் தாண்டி, மாநில அரசு சார்பாக இதை செய்யவிருக்கிறோம்.

எதிர்காலத்தில், வைரஸால் பாதிப்பு அதிகமாகக்கூடாது என்பதற்காக, அதனை கட்டுக்குள் வைத்திருக்க சென்னையில் புதிய பகுப்பாய்வு மையத்தை நிறுவ முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதற்கான பணிகளை தொடங்கியிருக்கிறோம்.

தமிழ்நாட்டில் மூன்று பேருக்கு டெல்டா பிளஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னை செவிலியருக்கு டெல்டா பிளஸ் தொற்று கண்டறியப்பட்ட நிலையில், புதிதாக மதுரை, காஞ்சிபுரம் மாவட்டங்களை சேர்ந்த தலா ஒருவருக்கு டெல்டா பிளஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. மேலும் ஏற்கனவே டெல்டா பிளஸ் வந்து சென்றுள்ளதா என்று ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

அதேபோல், கொரோனா பாதித்தவர்களுக்கு என்ன சிகிச்சை அளிக்கப்பட்டதோ அதே சிகிச்சைதான் டெல்டா பிளஸ் தொற்று பாதித்தவர்களுக்கும் அளிக்கப்பட்டு வருகிறது.

தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதையடுத்து கூடுதல் தளர்வுகளை வழங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. மேலும் தமிழ்நாட்டில் 2,822 பேர் கருப்பு பூஞ்சை நோயால் பாதித்துள்ளனர். கருப்பு பூஞ்சைக்குச் சிகிச்சை அளிக்க தமிழ்நாடு முழுவதும் ஏழாயிரம் படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அதேபோல் மற்ற மாநிலங்களைக் காட்டிலும் தமிழ்நாட்டில் கருப்பு பூஞ்சை பாதிப்பு குறைவாகவே உள்ளது" என்றார்.

banner

Related Stories

Related Stories