தமிழ்நாடு

"கர்நாடக அரசு மேகதாது அணை கட்ட முயல்வதை நிறுத்தவேண்டும்” - காவிரி ஆணைய கூட்டத்தில் தமிழ்நாடு அரசு வாதம்!

தமிழ்நாட்டிற்கு வழங்கவேண்டிய 33.19 டி.எம்.சி தண்ணீரை வழங்க கர்நாடக அரசுக்கு காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டது.

"கர்நாடக அரசு மேகதாது அணை கட்ட முயல்வதை நிறுத்தவேண்டும்” - காவிரி ஆணைய கூட்டத்தில் தமிழ்நாடு அரசு வாதம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

தமிழ்நாட்டிற்கு உச்சநீதிமன்ற ஆணைப்படி வழங்கவேண்டிய தண்ணீர் ஜூன் மாதத்திற்கு 9.19 டி.எம்.சியும், ஜூலை மாதத்திற்கு 24 டி.எம்.சியும் வழங்க கர்நாடக அரசுக்கு காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டது.

காவிரி நதிநீர் ஆணையத்தின் 12-வது கூட்டம் இன்று காணொலிக் காட்சி மூலம் நடைபெற்றது. ஆணையத்தின் தலைவர் எஸ்.கே.ஹெல்டார் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் பொதுப்பணித்துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் சந்தீப் சக்சேனா, காவிரி தொழில்நுட்பக் குழுத் தலைவர் ஆர்.சுப்ரமணியன், பொதுப்பணித்துறை, அரசு சிறப்புச் செயலாளர் கே. அசோகன் (நீர்வளத்துறை), முதன்மை தலைமைப் பொறியாளர் கே.ராமமூர்த்தி ஆகியோரும், ஒன்றிய அரசின் சார்பிலும், கர்நாடகா, புதுச்சேரி மாநில அரசுகளின் சார்பிலும் உயரதிகாரிகளும் ஆணையத்தின் உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில், கர்நாடக அரசு உரிய முறையில் காவிரி நீரை வழங்கவில்லை என தமிழ்நாடு அரசு சார்பில் குற்றம்சாட்டப்பட்டது. மேலும், இந்தக் கூட்டத்தில் மேகதாது அணை குறித்து விவாதிக்க வேண்டும் என கர்நாடகா தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது. இதற்கு தமிழ்நாடு அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்தது.

“கர்நாடக மாநிலம் மேகதாதுவில் அணை கட்ட முயல்வதை நிறுத்த வேண்டும். அணை கட்டுவதற்கு எந்தவித ஆரம்பக்கட்டப் பணிகளும் செய்ய ஆணையம் அனுமதிக்கக் கூடாது. மேலும், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளதால் இக்கூட்டத்தில் மேகதாது அணை பற்றி விவாதிப்பதைத் தவிர்க்க வேண்டும்” எனத் தமிழ்நாடு சார்பில் சந்தீப் சக்சேனா கடும் ஆட்சேபனை தெரிவித்தார்.

இதனால் இது தொடர்பான விவாதம் எடுத்துக்கொள்ளப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது. மேலும், சேலம் சரபங்கா நீரேற்றும் திட்டம், காவிரி குண்டாறு நதிகள் இணைப்பு திட்டம் ஆகியவை குறித்து பின்பு விவாதிக்கலாம் என முடிவு எடுக்கப்பட்டது.

மேலும், தமிழ்நாட்டிற்கு உச்சநீதிமன்ற ஆணைப்படி வழங்கவேண்டிய தண்ணீர் ஜூன் மாதத்திற்கு 9.19 டி.எம்.சியும், ஜூலை மாதத்திற்கு 24 டி.எம்.சியும் வழங்க கர்நாடக அரசுக்கு காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டது.

banner

Related Stories

Related Stories