தமிழ்நாடு

பாலியல் புகாரில் சிக்கிய அதிமுகவின் மணிகண்டன்; பெங்களூருவில் கைது; சிக்கியது எப்படி?

தலைமறைவாக இருந்த அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் பெங்களூருவில் கைதானார்.

பாலியல் புகாரில் சிக்கிய அதிமுகவின் மணிகண்டன்; பெங்களூருவில் கைது; சிக்கியது எப்படி?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

நடிகை சாந்தினி அளித்த புகாரில் பாலியல் வன்புணர்வு, கட்டாய கருசிதைவு உள்ளிட்ட 6 சட்டப்பிரிவுகளின் கீழ் முன்னாள் அ.தி.மு.க அமைச்சர் மணிகண்டன் மீது அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலைய போலிஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

நாடோடிகள் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் சாந்தினி. மலேசிய நாட்டின் தமிழக அம்பாசிடராகவும் பணியாற்றியுள்ளார். இவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் கடந்த மே 28ம் தேதி, முன்னாள் அ.தி.மு.க அமைச்சர் மணிகண்டன் மீது புகார் அளித்துள்ளார்.

2017ம் ஆண்டு பரணி என்ற துணை நடிகர் மூலம் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சராக இருந்த மணிகண்டனுடன் பழக்கம் ஏற்பட்டதாகத் தெரிவித்துள்ளார். அதன் பின் ஐந்து வருடம் அவருடன் சேர்ந்து வாழ்ந்ததாகவும், தன்னை மூன்று முறை கட்டாய கருச்சிதைவு செய்யச் சொன்னதாகவும் புகாரில் குற்றம் சாட்டியுள்ளார்.

இந்நிலையில், திருமணம் செய்துகொள்வதாக தொடர்ந்து ஆசை வார்த்தை காட்டி மோசடி செய்ததாகவும் தெரிவித்த சாந்தினி, தன்னை அந்தரங்கமாக புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து அதை வைத்து மிரட்டியதாகவும் புகார் அளித்துள்ளார். இதுதொடர்பான வாட்ஸப் சாட் ஆதாரங்கள் மற்றும் வீடியோ ஆடியோ ஆதாரங்களை சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் சமர்ப்பித்துள்ளார்.

முன்னாள் அமைச்சர் மணிகண்டனால் தனக்கும் தன் குடும்பத்திற்கும் ஆபத்து ஏற்படும் எனவும் தன் குடும்பத்திற்கு பாதுகாப்பு வேண்டுமெனவும் மனுவில் குறிப்பிட்டுள்ளார். அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார்.

பாலியல் புகாரில் சிக்கிய அதிமுகவின் மணிகண்டன்; பெங்களூருவில் கைது; சிக்கியது எப்படி?

இந்த புகார் ஆனது பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் பிரிவிற்கு மாற்றப்பட்டது. அந்த அடிப்படையில், நடிகை சாந்தினி பெசன்ட் நகரில் வசித்து வருவதால், அடையாறு காவல் மாவட்டத்தில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

புகாரை விசாரித்த போலிஸார், முன்னாள் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் மணிகண்டன் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். குறிப்பாக 313- பெண்ணின் அனுமதி இல்லாமல் கட்டாயப்படுத்தி கருவை கலைத்தல், 323 - அடித்து காயம் ஏற்படுத்துதல், 417 - நம்பிக்கை மோசடி, 376 - பாலியல் வன்கொடுமை, 506 (1) - கொலை மிரட்டல், 67(a) - தகவல் தொழில் நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல் ஆகிய சட்டப் பிரிவுகளின் கீழ் போலிஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

அடுத்த கட்டமாக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது கைது நடவடிக்கை பாய உள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ராமநாதபுரத்தில் உள்ள அவரது வசிப்பிடம் பூட்டப்பட்டு இருப்பதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே கைது நடவடிக்கைக்கு பயந்து முன்னால் அமைச்சர் மணிகண்டன் தலைமறைவாக இருக்கிறாரா என்ற கேள்வி எழுந்தது. அதனையடுத்து 2 தனிப்படை அமைக்கப்பட்டு மணிகண்டனை தேடும் பணி விரைவுபடுத்தப்பட்டது.

இந்நிலையில், பெங்களூருவுக்கு அருகே உள்ள தம்மநாயக்கனஹள்ளி பகுதியில் தலைமறைவாக இருந்த அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டனை சுற்றி வளைத்து காவல் துறையினர் கைது செய்துள்ளனர். இதனையடுத்து பெங்களூருவில் உள்ள ஆனேக்கல் காவல்நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளார் மணிகண்டர். இதன் பிறகு சென்னை அழைத்து வரப்பட்டு தீவிர விசாரணை நடத்தப்படும் என தெரிகிறது.

banner

Related Stories

Related Stories