தமிழ்நாடு

சிக்கிய ரவுடி.. தேர்தலின்போது அதிமுக முன்னாள் எம்.எல்.ஏவிடம் கொள்ளையடித்த பணத்தில் ரூ.1.65 கோடி பறிமுதல்!

தேர்தல் நேரத்தில் அ.தி.மு.க எம்.எல்.ஏ காரிலிருந்து ரூ. 2 கோடியை கொள்ளையடித்த சாமி ரவியை தனிப்படை போலிஸார் கைது செய்தனர்.

சிக்கிய ரவுடி.. தேர்தலின்போது அதிமுக முன்னாள் எம்.எல்.ஏவிடம் கொள்ளையடித்த பணத்தில் ரூ.1.65 கோடி பறிமுதல்!
Vignesh
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

திருச்சி அருகே அ.தி.மு.கவினரின் காரிலிருந்து ரூ.2 கோடி கொள்ளையடித்த வழக்கில் கைது செய்யப்பட்ட பிரபல ரவுடி சாமி ரவியிடமிருந்து ரூ.1.65 கோடியை போலிஸார் பறிமுதல் செய்துள்ளனர்.

திருச்சி மாவட்டம் பெட்டைவாய்த்தலையில் கடந்த மார்ச் 23-ஆம் தேதி முசிறி தொகுதியின் அப்போதைய எம்.எல்.ஏவும், அ.தி.மு.க வேட்பாளராக போட்டியிட்டவருமான செல்வராசுவின் மகன் ராமமூர்த்திக்கு சொந்தமான காரிலிருந்து ரூ.1 கோடியை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

அந்தக் காரில் இருந்த அ.தி.மு.க நிர்வாகிகள் இந்தப் பணத்துக்கும் தங்களுக்கும் தொடர்பில்லை எனக் கூறியதால், அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

ஆனால், விசாசாரணையில் முசிறி தொகுதி அ.தி.மு.க வேட்பாளர் செல்வராஜ் ஏற்பாட்டின் பேரில் தேர்தல் செலவுக்காக 3 மூட்டைகளில் 10 கோடி ரூபாய் பணம் காரில் கொண்டு செல்லப்பட்டது தெரியவந்தது.

மேலும், அந்தக் காரிலிருந்து பிரபல ரவுடி சாமி ரவி தலைமையிலான கும்பல் ரூ.2 கோடியை கொள்ளையடித்துச் சென்றதும் தெரியவந்தது. இதுதொடர்பாக 7 பேரை போலிஸார் கைது செய்தனர்.

இந்நிலையில் மத்திய மண்டல ஐ.ஜி வே.பாலகிருஷ்ணன் உத்தரவின்பேரில், டி.ஐ.ஜி ராதிகா, எஸ்.பி பா.மூர்த்தி ஆகியோர் மேற்பார்வையில் ஜீயபுரம் டி.எஸ்.பி செந்தில்குமார் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் மாதையன், பன்னீர்செல்வம் உள்ளிட்டோரை கொண்ட 2 தனிப்படையினர் ரவுடி சாமி ரவியை தேடி வந்தனர்.

இந்நிலையில், காரில் சென்று கொண்டிருந்த சாமி ரவியை தனிப்படை போலிஸார் நேற்று முன்தினம் கைது செய்தனர். அவர் அளித்த தகவலின்பேரில், திருச்சியில் உள்ள அவரது நண்பரின் வீட்டிலிருந்து ரூ.1.65 கோடியை பறிமுதல் செய்துள்ளனர்.

banner

Related Stories

Related Stories