தமிழ்நாடு

“தமிழ்நாட்டில் ரூ.11,500 கோடி விவசாயக் கடன் வழங்க இலக்கு” - கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தகவல்!

விவசாயிகள் அல்லாதோருக்கு கடன் வழங்கப்பட்டதாக வந்துள்ள புகார்கள் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுப்பார்கள் என கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.

“தமிழ்நாட்டில் ரூ.11,500 கோடி விவசாயக் கடன் வழங்க இலக்கு” - கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தகவல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

தமிழ்நாட்டில் ரூ.11,500 கோடி விவசாயக் கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.

கூட்டுறவுத்துறை சார்பில் திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் உள்ள கூட்டுறவு சங்கங்களின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக்கூட்டம் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ. பெரியசாமி தலைமையில் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் அமைச்சர்கள் கீதா ஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன், மனோ தங்கராஜ் மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர்கள், 4 மாவட்டங்களின் கூட்டுறவுத்துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.

இந்த ஆய்வுக் கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, “தமிழ்நாட்டில் பொற்கால ஆட்சியை அமைக்கும் வகையில் அனைத்து துறைகளிலும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலும் விவசாயிகள் சாகுபடி பணிகளை தொடங்கியிருக்கிறார்கள். அவர்களுக்கு பயிர்க் கடன்களை வழங்க தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த சங்கங்களில் புதிய உறுப்பினர்களை சேர்த்து, அவர்களுக்கும் கடன் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

குழு கடன்கள் மட்டுமல்லாமல் தனி விவசாயிகளுக்கும் கடன்கள் வழங்க கூட்டுறவு கடன் சங்கங்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளன. தமிழ்நாடு முழுவதும் ரூ.11,500 கோடி விவசாய கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.

தமிழகத்தில் தேவையான இடங்களில் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். சீனி பெறும் குடும்ப அட்டைகளை அரிசி அட்டைகளாக மாற்றவும், புதிதாக ரேஷன் அட்டைகளை வழங்கவும் உணவுத்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வெற்றிலை விவசாயிகளுக்கு பயிர்க்கடன் வழங்க ஆய்வு செய்து நடவடிக்கைகள் எடுக்கப்படும். விவசாயிகள் அல்லாதோருக்கு கடன் வழங்கப்பட்டதாக எழுப்பப்பட்டுள்ள புகார்கள் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுப்பார்கள்.

ரேஷன் கடைகள் மூலம் தமிழ்நாடு முழுவதும் கொரோனா நிவாரணத் தொகை ரூ.2 ஆயிரம் முதல் தவணையாக 99 சதவிகிதம் பேருக்கு கொடுக்கப்பட்டுவிட்டது. தற்போது இரண்டாம் தவணையாக ரூ.2 ஆயிரம் ரொக்கம் மற்றும் 14 வகையான மளிகைப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

ரேஷன் கடைகளில் தரமான அரிசி வழங்கவேண்டும் என்றும், கருப்பு, பழுப்புநிற மற்றும் சேதமடைந்த அரிசியை ரேஷன் கடைகளில் வழங்கக்கூடாது என்றும் முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.” எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories