தமிழ்நாடு

“தந்தையின் அரவணைப்பில் தமிழகம்” - முதல்வராக மு.க.ஸ்டாலினின் செயல்பாட்டுக்கு இயக்குநர் வசந்தபாலன் பாராட்டு

ஒன்றிய அரசின் ஆதரவின்றி தமிழகம் மெல்ல தன்னிலை இழந்து நோய்வாய்ப்பட்ட குழந்தைப்போல ஆகிவிடுமோ என்கிற கவலை கடந்த 7 ஆண்டுகளில் பல முக்கியமாக சம்பவங்களில் ஏற்பட்டது.

“தந்தையின் அரவணைப்பில் தமிழகம்” - முதல்வராக மு.க.ஸ்டாலினின் செயல்பாட்டுக்கு இயக்குநர் வசந்தபாலன் பாராட்டு
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்று பேரிடர் காலத்தில் சிறப்பாக செயலாற்றிக் கொண்டிருக்கும் மு.க.ஸ்டாலினை பாராட்டி தமிழ் திரைப்பட இயக்குநர் வசந்தபாலன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதன் விவரம் பின்வருமாறு:-

“ஓட்டக்களத்தில் துப்பாக்கி ஒலிக்காகக் காத்திருக்கும் தடகளவீரனைப்போல, நூறு நாண்களைக் கொண்ட பிரம்ம தனுஷை கையில் ஏந்தி நிற்கும் பெரும் வில்லாளியைப்போல, கூரான வாளுடன் கைகளை தலைக்கு மேல் தூக்கியபடி போருக்காகக் காத்திருக்கும் சாமுராயைப் போல பதவியேற்ற முதல் கணத்தில் துவங்கி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இடையறாது சுற்றிக் கொண்டிருக்கும் ஒரு ரங்கராட்டினத்தைப்போல சுமன்றபடியிருக்கிறார்.

இருகைகளிலும் வாள்களை ஏந்தி சுழன்று சுழன்று எதிரிகளை வீழ்த்தும் மாவீரனைப்போல தன்னை சுற்றியுள்ள அத்தனை பிரச்சினைகளையும் மிக அழகாக சாமர்த்தியமாக, அறிவுப்பூர்வமாக, தீர்க்கமாக எதிர்கொள்கிறார்.

அவர் பதவியேற்ற இந்த 3 வாரங்களில் தமிழகம் மெல்ல மூச்சு விடுவதைப் பார்க்க முடிகிறது. இத்தனை வருடங்களாக , இந்த நிர்வாகத்தை , மக்கள் சேவையை , மனதிற்குள் இடையறாது எண்ணிக்கொண்டிருக்கும் ஒரு மாபெரும் தலைவனால் மட்டுமே பதவியேற்ற அந்த நொடியிலிருந்து ஆயிரம் திசைக்கும் வேலைகளை செய்ய ஆணையிடமுடியும்.

அதை வெற்றிக்கரமாக செய்தும் காட்டமுடியும். பகலிரவாக சுழன்று கொண்டிருக்கிறார். கேரளாவைப் போல நமக்கு ஒரு முதல்வர் இல்லையே , ஆந்திரா முதல்வர் போல இல்லையே என்று பலநாட்கள் ஏங்கியிருக்கிறேன். தமிழகத்தின் கவலைக்கிடமான நிலமையை எண்ணி வருந்தியிருக்கிறேன்.

ஒருநாள் முதல்வர் என்பது இங்கே சினிமாவில் மட்டும் தான் சாத்தியமோ…. நிஜத்தில் தமிழகத்திற்கு எட்டாக்கனி தான் போல……என்று எண்ணியிருக்கிறேன். ஒன்றிய அரசின் ஆதரவின்றி தமிழகம் மெல்ல தன்னிலை இழந்து நோய்வாய்ப்பட்ட குழந்தைப்போல ஆகிவிடுமோ என்கிற கவலை கடந்த 7 ஆண்டுகளில் பல முக்கியமாக சம்பவங்களில் ஏற்பட்டது.

நீட், ஜல்லிக்கட்டு, ஸ்டெர்லைட் போராட்டம், 8 வழிச்சாலை, ஹைட்ரோ கார்பன், தமிழ் மொழி இருட்டடிப்பு மற்றும் நிர்வாணமாக டெல்லியில் போராடும் விவசாயிகளை கண்டுக்கொள்ளாத நிலை என சொல்லிக்கொண்டே போகலாம்.

தமிழக மக்களின் மனதில் ஆழமாக பதிந்து போன கவலையாக இந்த 7 ஆண்டுகள் இரவு தூக்கத்தை இவை தொலைத்திருக்கின்றன. இவைகளுக்கு விடிவு வருகிறதோ இல்லையோ நம் பக்கம் நின்று நம் பிரச்சினைகளைப்பற்றி பேசுகிற ஒரு அரசு இருக்கவேண்டும் என்கிற பேராசையும் பெரும் கனவும் இருந்தது.

அதற்கெல்லாம் ஒரு விடிவெள்ளியாக பதவியேற்ற முதல் வாரத்தில் தமிழக முதல்வர் ஸ்டெர்லைட் போராட்டத்தில் பலியானவர்களின் குடும்பத்திற்கு நிவாரணம், வாரிசுகளுக்கு அரசு வேலை, போராட்டக்காரர்கள் மீதான வழக்குகள் வாபஸ் என்கிற செய்தி உண்மையில் நீதியின் வாசம் மெல்ல பரவுவதை உணர முடிகிறது.

கொரானாவின் இரண்டாவது அலையை முதல்வர் கையாளுவதைப் பார்க்கும் போது மக்களுக்கு நாளை மீது பெரும் நம்பிக்கை பிறக்கிறது. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினாகிய நான் என்ற சொற்தொடரில் துவங்கிய முதல்வர் ஒரு மகனாக, ஒரு அண்ணனாக, கட்சித் தலைவனாக, பேரன்பு கொண்ட மனிதராக , எதிர்க்கட்சி தலைவர்களின் கருத்துகளையும் கூர்ந்து கேட்கும் முதல்வராக அவரின் ஒவ்வொரு நடவடிக்கைகளும் மிகவும் பாராட்டுக்குரியதாக உள்ளது.

முதல்வருக்கு என் மனமார்ந்த பாராட்டுகள். தமிழகம் இப்படி ஒரு தந்தையின் அரவணைப்பிற்காகத் தான் காத்துக்கொண்டிருந்தது. தொடரட்டும் உங்கள் சேவை”

எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories