தமிழ்நாடு

“உங்கள் தொகுதியில் முதலமைச்சர்'' : மனு அளித்தவருக்கு நேரில் சென்று உதவித்தொகை அளித்த மாவட்ட ஆட்சியர்!

‘உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’ திட்டத்தின் கீழ் மாணவர் ஒருவர் அளித்த கோரிக்கை மனுவின் மீது நடவடிக்கை எடுத்த புதுக்கோட்டை ஆட்சியர், அந்த மாணவரின் வீடு தேடிச் சென்று கல்வி உதவித்தொகையை வழங்கினார்.

“உங்கள் தொகுதியில் முதலமைச்சர்'' : மனு அளித்தவருக்கு நேரில் சென்று உதவித்தொகை அளித்த மாவட்ட ஆட்சியர்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

தேர்தல் பரப்புரையின்போது "உங்கள் தொகுதியில் ஸ்டாலின்'' என்ற நிகழ்வின் மூலம் பெறப்பட்ட மனுக்கள் 100 நாட்களுக்குள் தீர்வு காணும் பொருட்டு “உங்கள் தொகுதியில் முதலமைச்சர்'' என்ற புதிய துறை உருவாக்கப்பட்டு, சிறப்பு அலுவலர் நியமிக்கப்பட்டு, அனைத்து மனுக்களும் ஒப்படைக்கப்பட்டன.

ஒவ்வொரு மனுவும் வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டவுடன் தனித்தன்மையுடன் கூடிய அடையாள எண் வழங்கப்பட்டு, அடையாள எண்ணுடன் கூடிய குறுஞ்செய்தி மனுதாரருக்கு அனுப்பப்படுகிறது. மனுக்களில் கொடுக்கப்பட்டுள்ள விவரங்கள் மற்றும் அதன் உண்மை தன்மைக்கேற்றவாறு தகுதியான ஒவ்வொரு மனுவும் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டு உடனடி தீர்வு காணப்பட்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக‘உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’ என்ற திட்டத்தின் கீழ் மாணவர் ஒருவர் அளித்த கோரிக்கை மனுவின் மீது நடவடிக்கை எடுத்த புதுக்கோட்டை ஆட்சியர், அந்த மாணவரின் வீடு தேடிச் சென்று கல்வி உதவித் தொகையை வழங்கினார்.

புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் வட்டம் லெட்சுமணப்பட்டியைச் சேர்ந்த அண்ணாதுரை மகன் குறளரசன் (18) என்பவர் கல்வி உதவித் தொகை கோரி அளித்த மனுவை விசாரித்து, அவருக்கு உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் உதவித் தொகை வழங்குவதற்கான உத்தரவை ஆட்சியர் பி.உமா மகேஸ்வரி நேற்று மாணவரின் வீட்டுக்கே சென்று வழங்கினார்.

இதுகுறித்து மாணவர் குறளரசனின் தந்தை அண்ணாதுரை கூறுகையில், “தனியார் கல்லூரி ஒன்றில் கேட்டரிங் இறுதி ஆண்டு படித்து வரும் எனது மகன் படிப்பு தொடர்பாக கோவையில் பயிற்சிக்கு சென்றிருந்தபோது, அங்கு தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினிடம், 3 ஆண்டுகளுக்குமான கல்விக் கட்டணம் செலுத்துவதற்கு உதவி கோரி குறளரசன் மனு அளித்திருந்தார்.

அந்த மனு மீது விசாரிக்கப்பட்டு, தற்போது உழவர் பாதுகாப்பு திட்டத்தின் மூலம் கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டுள்ளது. மேலும், கல்விக் கட்டணத்தை செலுத்துவதற்கு வங்கி மூலம் கடனுதவி வழங்க ஏற்பாடு செய்வதாக ஆட்சியர் உறுதி அளித்துள்ளார். மனுவுக்கு உடனடியாக தீர்வு கண்டு, வீடு தேடி வந்து உத்தரவு வழங்கியது மகிழ்ச்சியளிக்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.

ஆட்சிக்கு வந்து 100 நாட்களில், பொதுமக்களின் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்திருந்த நிலையில், தினமும் பயனாளிகளின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டு வருவது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories