தமிழ்நாடு

“தமிழகத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகளால் தொற்று பரவல் வேகம் குறைந்துள்ளது” : முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

மருத்துவ நிபுணர்கள் மற்றும் அனைத்து கட்சி எம்.எல்.ஏக்களின் ஆலோசனை அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

“தமிழகத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகளால் தொற்று பரவல் வேகம் குறைந்துள்ளது” : முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (22.5.2021) தலைமைச் செயலகத்தில், கொரோனா தொற்றுப்பரவலை கட்டுப்படுத்துதல் குறித்தும், முழு ஊரடங்கை அமல்படுத்துவது குறித்தும் மருத்துவ வல்லுநர் குழுவினருடன் ஆலோசனை நடந்தினார்.

நடைபெற்ற அந்த கலந்தாலோசனைக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆற்றிய உரை பின்வருமாறு :-

கொரோனா தொற்றின் இரண்டாவது அலையின் தாக்கம் மிக அதிகமாக இருக்கக்கூடிய இக்கட்டான சூழலில் இந்த அரசு பொறுப்பேற்று இத்தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் -மக்களின் உயிர்களைக் காப்பாற்றத் தேவையான அனைத்து முயற்சிகளையும் போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு வருகிறது.

சென்ற கூட்டத்தில் இந்தத் தொற்றின் வேகத்தை கட்டுப்படுத்துவதற்கு ஊரடங்கின் அவசியம் குறித்து நீங்கள் அனைவரும் வலியுறுத்தினீர்கள். அனைவரின் கருத்துகளின் அடிப்படையில் 14-05-2021 முதல் குறிப்பிட்ட சில தளர்வுகளை மட்டும் அனுமதித்து ஊரடங்கு உத்தரவுப் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

“தமிழகத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகளால் தொற்று பரவல் வேகம் குறைந்துள்ளது” : முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

இந்த ஊரடங்கு மட்டுமல்லாது, நாள்தோறும் 1.6 இலட்சம் ஆர்டி-பிசிஆர் பரிசோதனைகள், ஆக்சிஜன் படுக்கைகளின் எண்ணிக்கையை உயர்த்துதல், கூடுதல் மருத்துவர்களையும் செவிலியர்களையும் நியமித்தல் போன்ற பல்வேறு பணிகளைக் கடந்த இரண்டு வாரங்களில் செயல்படுத்தியுள்ளோம்.

மேற்கூறிய நடவடிக்கைகளால் கொரோனா தொற்று பரவும் வேகம் ஓரளவுக் கட்டுப்படுத்தப்பட்டு, தற்போது நாள்தோறும் 35,000 பேர் தொற்றால் பாதிக்கப்படும் நிலை காணப்படுகிறது. தமிழ்நாட்டை விட மக்கள் தொகை குறைவாக உள்ள சில அண்டை மாநிலங்களில் தொற்றின் உச்சத்தில் 50,000-த்திற்கும் மேலானோர் நாள்தோறும் பாதிக்கப்பட்ட நிலையோடு ஒப்பிடும்போது இது குறைவாக இருந்தாலும், தொற்று தொடர்ந்து உயர்ந்துவரும் நிலையே காணப்படுகிறது.

இச்சூழலில், தமிழ்நாட்டில் கொரோனா தொற்று இந்த மாத இறுதியிலோ ஜூன் மாத தொடக்கத்திலோ உச்ச நிலையை எட்டும் எனக் கருத்துகள் தெரிவிக்கப்பட்டுள்ளன. எனவே, இத்தொற்று, மேலும் வேகமாகப் பரவாமல் இருக்கவும், இறப்புகளைக் குறைக்கவும் தேவையான அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து நாம் உடனடியாக முடிவுகளை எடுக்க வேண்டிய அவசியம் எழுந்துள்ளது.

நான் கூறிய கருத்துகளை மனதிற்கொண்டு மருத்துவ நிபுணர்கள் அனைவரும் தமது மேலான கருத்துகளைத் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்கின்றேன். தங்களுடைய கருத்துகளின் அடிப்படையிலும் அனைத்துக் கட்சி சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்ட ஆலோசனைக் குழுவின் கருத்துகளின் அடிப்படையிலும் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து அரசு முடிவு செய்யும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories