தமிழ்நாடு

“என்னைப் போல இன்னொரு குழந்தை தந்தையை இழக்கக்கூடாது” - நிவாரண நிதி அளித்த சிறுமி : கனிமொழி MP நெகிழ்ச்சி!

தந்தையை இழந்த துயர தருணத்திலும் சேமித்து வைத்திருந்த ரூ.1970ஐ முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்காக வழங்கியுள்ளார் கோவில்பட்டி சிறுமி ரிதானா.

“என்னைப் போல இன்னொரு குழந்தை தந்தையை இழக்கக்கூடாது” - நிவாரண நிதி அளித்த சிறுமி : கனிமொழி MP நெகிழ்ச்சி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனாவைக் கட்டுப்படுத்த தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி, அனைத்துத் துறை அதிகாரிகளும் கொரோனா தடுப்பு பணியில் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், கொரோனா நோய்த் தடுப்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்காக, தமிழ்நாடு முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு நிதி வழங்குமாறு என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

மேலும், கொரோனா நிவாரண பணிக்காக, தொழிலதிபர்கள் நிதி வழங்க வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்த நிலையில், கூலித் தொழிலாளர்கள், குழந்தைகள் எனப் பலரும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தங்களால் முடிந்த பணத்தை வழங்கி வருகின்றனர்.

அந்தவகையில், தந்தையை இழந்த துயரமான தருணத்திலும், தான் சேமித்து வைத்திருந்த ரூ.1970ஐ முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்காக வழங்கியுள்ளார் கோவில்பட்டி சிறுமி ரிதானா.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சண்முக சிகாமணி நகரில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கோவில்பட்டி ராஜீவ் நகர் 2-வது தெருவைச் சேர்ந்த சிறுமி ரிதானா, ரூ.1970ஐ முதல்வர் நிவாரண நிதிக்கு கனிமொழி எம்.பியிடம் வழங்கினார்.

அப்போது உதவித்தொகையுடன் ஒரு கடிதத்தையும் அந்த மாணவி இணைத்திருந்தார். அதில், கோவில்பட்டி சண்முக சிகாமணி நகரில் தாங்கள் வசித்து வருவதாகவும், தனது தந்தையார் நாகராஜன் கடந்த ஆண்டு உடல்நிலை பாதிக்கப்பட்டு இறந்து விட்டார்.

தந்தையார் இறப்பதற்கு முன்பாக தனக்கு கைச்செலவுக்காக அளித்த பணத்தை சேர்த்து வைத்திருந்தேன். அந்த பணத்தில் தந்தையின் மருத்துவ செலவிற்கு அவ்வப்போது எடுத்து செலவு செய்து வந்த நிலையில், தற்போது தந்தையே மாரடைப்பு ஏற்பட்டு இறந்து விட்டார்.

அதனால் தான் சேர்த்து வைத்த 1970 ரூபாயை கொரோனா தடுப்பு பணிக்காக வழங்கி உள்ளதாகவும், தன்னைப்போல் வேறு யாரும் தங்களின் தந்தை இறக்க கூடாது என இந்த நிதி உதவியை அளித்துள்ளதாகவும் அவர் அதில் தெரிவித்துள்ளார்

“என்னைப் போல இன்னொரு குழந்தை தந்தையை இழக்கக்கூடாது” - நிவாரண நிதி அளித்த சிறுமி : கனிமொழி MP நெகிழ்ச்சி!

இதுதொடர்பாக தி.மு.க மகளிரணி செயலாளர் கனிமொழி எம்.பி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “கோவில்பட்டி சிறுமி ரிதானா தன் தந்தையின் மருத்துவ செலவிற்காக தான் சேமித்து வைத்திருந்த ரூ.1970ஐ முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்காக என்னிடம் வழங்கினார்.

தந்தையை இழந்த இத்துயர தருணத்திலும் ரிதானாவின் இச்செயல் இப்பேரிடரை நாம் அனைவரும் ஒன்றிணைந்து வெல்வோம் என்ற நம்பிக்கையை வலுப்படுத்தியது. மனிதநேயம் மட்டுமே மானிடத்தை காக்கும்.” எனத் தெரிவித்திருந்தார். மேலும் சிறுமி ரிதானா அளித்த கடித்ததையும் ட்விட்டரில் பகிர்ந்திருந்தார்.

banner

Related Stories

Related Stories