தமிழ்நாடு

“எல்.முருகனுக்கு வரலாறு தெரியாது” - ஈ.வெ.ரா பெரியார் சாலை பெயர் மாற்ற சர்ச்சையில் ஆர்.எஸ்.பாரதி சாடல்!

ஈ.வெ.ரா. பெரியார் சாலை, காமராஜர் சாலை, அண்ணா சாலை ஆகிய சாலைகள் பெயர் மாற்றம் குறித்து தி.மு.க சார்பில் புகார் மனு அளித்தனர்.

“எல்.முருகனுக்கு வரலாறு தெரியாது” - ஈ.வெ.ரா பெரியார் சாலை பெயர் மாற்ற சர்ச்சையில் ஆர்.எஸ்.பாரதி சாடல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எம்.பி., மற்றும் சட்ட ஆலோசகர், மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ, எம்.பி., - சட்டதிட்ட திருத்தக்குழு செயலாளர், மூத்த வழக்கறிஞர் பி.வில்சன், எம்.பி., ஆகியோர் தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளரை, தலைமைச் செயலகத்தில் இன்று நேரில் சந்தித்து நெடுஞ்சாலைத் துறையின் சார்பில் ஈ.வெ.ரா. பெரியார் சாலை, காமராஜர் சாலை, அண்ணா சாலை ஆகிய சாலைகள் பெயர் மாற்றம் குறித்து புகார் மனு அளித்தனர்.

அப்புகார் மனுவின் தமிழாக்கம் பின்வருமாறு:

“திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும் - சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி, மிகுந்த வலி மற்றும் வேதனையுடன் இந்தக் கடிதத்தை எழுத வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகி உள்ளோம்.

சென்னையின் சில முக்கியச் சாலைகள் மற்றும் நெடுஞ்சாலைகளுக்குத் தமிழகத்தின் மிகப்பெரிய தலைவர்களின் பெயர்கள் சூட்டப்பட்டிருப்பது பொதுவாக அறியப்பட்டதாகும். இது அப்போதைய காலக்கட்டத்தில் இருந்த அரசு எடுத்த கொள்கை முடிவாகும். தமிழ்நாட்டின், அரசியல் - சமூக - பண்பாட்டு மற்றும் அறிவுசார் ஆளுமைகளின் நினைவாக சாலைகளுக்குப் பெயரிடுவது, மாநிலம் மற்றும் தேசத்திற்கு அவர்கள் ஆற்றிய மகத்தான சேவையை அங்கீகரிப்பதாகும். இத்தகைய பெரிய தலைவர்களையும், அவர்களது பங்களிப்பையும் வருங்காலத் தலைமுறையினர் நினைவு கூர்வதையும் - நினைவில் கொள்வதையும் உறுதி செய்வதற்கான நடவடிக்கை இது.

பூந்தமல்லி நெடுஞ்சாலையின் பெயர் கடந்த 1979ஆம் ஆண்டு, தந்தை பெரியார் என அன்புடன் அழைக்கப்படும் மறைந்த திரு. ஈ.வெ.ராமசாமி அவர்களின் நினைவாக, பெரியார் ஈ.வெ.ரா. நெடுஞ்சாலை என மாற்றப்பட்டது.

திராவிட இயக்கத்தைக் கட்டமைத்த பேராளுமையான தந்தை பெரியார் அவர்கள், சமத்துவம், சுயமரியாதை மற்றும் பகுத்தறிவுப் பாதையை வகுத்ததன் மூலம், தமிழ்நாட்டின் அரசியல், சமூக மாற்றங்களுக்கு அடிப்படையானவர் என்பதை ஒவ்வொரு தமிழரும் அறிவர். மிகப்பெரிய தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான பேரறிஞர் அண்ணா அவர்கள் நினைவாக, மவுண்ட் ரோடுக்கு அண்ணா சாலை என்றும், மற்றொரு பெரிய தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான காமராஜர் அவர்களது நினைவாக, கடற்கரைச் சாலைக்கு காமராஜர் சாலை எனவும் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இதேபோல், தமிழ் மன்னர் குறித்த மக்களின் உணர்வை மதிக்கும் வகையில், அரசிதழ் அறிவிக்கை மூலம் மகாபலிபுரம் சாலையின் பெயர் மாமல்லபுரம் சாலை என மாற்றப்பட்டது.

மாநில அரசின் கொள்கை முடிவுகளை இழிவு படுத்தும் வகையில், இந்த முக்கியச் சாலைகளின் பெயர்கள், கிராண்ட் வெஸ்டர்ன் ட்ரங்க் ரோடு, கிராண்ட் சதர்ன் ட்ரங்க் ரோடு, கிராண்ட் நார்த்தன் ட்ரங்க் ரோடு மற்றும் மகாபலிபுரம் சாலை என மாற்றப்பட்டு, அப்பெயர்கள், அந்தச் சாலைகளில் வைக்கப்பட்டுள்ள பெயர்ப் பலகைகளிலும் காணப்படுகின்றன.

மாநில மற்றும் தேசிய நெடுஞ்சாலைத்துறையின் இத்தகைய ஒருபக்கச்சார்புள்ள நடவடிக்கை, உயர்ந்த தலைவர்களின் நினைவையும், தமிழக மக்களின் விருப்பங்கள் மற்றும் உணர்வுகளையும் அவமதிப்பதாகும். சாலைகளின் பெயர்களை மாற்றும் இந்த நடவடிக்கை, பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த தமிழ் ஆளுமைகளை அவமதிப்பதுடன், மாநிலத்தில் நெருடலான மற்றும் அமைதியற்ற சூழலை உருவாக்கும். மேலும் போராட்டங்களுக்கும், அமைதியின்மைக்கும் வழிவகுக்கக் கூடும்.

இந்த பெயர் மாற்ற நடவடிக்கை, திராவிட இயக்கத்தையும், அதன் ஆளுமையான தந்தை பெரியாரையும், விரும்பாத அ.தி.மு.க வின் வடநாட்டு எஜமானர்களின் கருத்தியலை மகிழ்விக்கும் செயலாகும் என்பது அனைவரும் நன்றாக அறிந்த ஒன்று. எல்லாவற்றையும் சமஸ்கிருத மயமாக்குவதும், காவி மயமாக்குவதுமே அவர்களது குறிக்கோள். எல்லாவற்றுக்கும் மேலாக, சிறந்த தமிழ்ப் புலவர் திருவள்ளுவருக்கு அவர்கள் மதச்சாயம் பூச முயன்ற பரிதாபகரமான முயற்சியை அனைவரும் பார்த்தனர். நமது அடையாளங்களை, பெருமைகளைப் பாதுகாப்பதும், நமது பண்பாட்டைப் பாதுகாப்பதும், நமது தலைவர்களையும், ஆளுமைகளையும் நினைவு கூர்ந்து கொண்டாடுவதும் தமிழ் மக்களிடம்தான் உள்ளது. இது நமது போராட்டத்தின் ஒரு பகுதியாகும்.

எனவே, இந்த விவகாரத்தில் உடனடியாகத் தாங்கள் தலையிட்டு, தேவைப்பட்டால் மத்திய அரசு உட்பட, உரிய அதிகாரிகளின் கவனத்திற்குக் கொண்டு சென்று, அந்தந்த சாலைகளுக்குப் பழைய பெயர்களையே மாற்றம் செய்து, தமிழக மக்களின் உரிமைகளை நிலைநாட்ட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.”

மனு அளித்ததைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, “அண்ணா சாலை, பெரியார் சாலை மற்றும் காமராஜர் சாலை ஆகியவற்றிற்கு எப்படி பெயர் வைக்கப்பட்டது என்பது வரலாறு தெரிந்தவர்களுக்கு தெரியும். 1979ல் பூந்தமல்லி சாலைக்கு பெரியார் சாலை என எம்.ஜி.ஆர் பெயர் வைத்தார்.

ஆனால் திடீரென தலைவர்களின் பெயரில் இருந்த சாலைகளின் பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன. மாற்றபட்ட பெயர்களை மீண்டும் வைக்ககோரி தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினின் அறிவுறுத்தல் படி தலைமை செயலாளரிடம் மனு அளித்துள்ளோம்.

யாரை திருப்திப்படுத்த பெயர்களை மாற்ற தமிழக அரசு முடிவு செய்தது எனத் தெரியவில்லை. சமீபத்தில் தான் சென்னை விமான நிலையத்தின் பெயர் மாற்றப்பட்டது. அண்ணா , காமராஜர் மற்றும் பெரியாரின் பெயர்களை மறைக்க யாரோ உத்தரவின்படி திட்டமிட்டு சதி செய்கின்றனர்.

பா.ஜ.க தலைவர் எல்.முருகன் நெடுஞ்சாலைத்துறை ஆவணத்தில் பெயர் மாற்றாமல் இருப்பதாகச் சொல்வது பொருத்தமற்றது. அவர் அந்தக்காலத்தில் பிறந்திருக்கவே மாட்டார். 52 ஆண்டுகாலம் அண்ணா சாலை என்று அழைக்கப்பட்டு வருகிறது, 46 ஆண்டுகாலமாக காமராஜர் சாலையும், பெரியார் ஈவெரா சாலை 43 ஆண்டு காலமாகவும் அவ்வாறாக அழைக்கப்பட்டு வருகிறது.

இதெல்லாம் எல்.முருகனுக்கு தெரியாதா? வேண்டுமானால் கண்ணாடி ஒன்று வாங்கித்தருகிறேன் போய் போர்டுகளை பார்த்துவிட்டு வரச்சொல்லுங்கள். ஆவணத்தில் இருப்பது என்பதை தலைமைச் செயலரே ஒப்புக்கொண்டார் அப்புறம் இவர் என்ன சொல்வது” எனத் தெரிவித்தார்.

banner

Related Stories

Related Stories