தமிழ்நாடு

“தாழ்த்தப்பட்டோர் - பழங்குடியினர் முன்னேற்றத்திற்கு பாடுபட்ட கலைஞர் அரசு” : மகுடம் சூடிய தி.மு.க-16

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு தக்க பயிற்சியும், வேலைவாய்ப்பும், சிறுதொழில் துவங்க நிதி உதவியும் வழங்கப்பட்டன. இத்திட்டத்திற்காக அரசால் ரூபாய் 25 கோடி செலவிடப்பட்டது.

“தாழ்த்தப்பட்டோர் - பழங்குடியினர் முன்னேற்றத்திற்கு பாடுபட்ட கலைஞர் அரசு” : மகுடம் சூடிய தி.மு.க-16
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

வேதங்களும், மனு சாஸ்திரமும், வர்ணாஸ்ரமும் இந்திய சமுதாயத்தை சத்திரியர்கள், பிராமணர்கள், வைசியர்கள், சூத்திரர்கள் என்று நான்கு பிரிவுகளாக பிரித்து, ஏற்றத்தாழ்வுகளை நிலைப்படுத்தி, தீண்டாமையை விதைத்து சமுதாயத்தை அவலங்களில் ஆழ்த்தின. அந்த சீரழிவிலிருந்து சமுதாயத்தை மீட்டெடுத்து உயர்வுகளை உருவாக்கிட பல காலகட்டங்களில் பல தலைவர்கள் பாடுபட்டனர். பல இயக்கங்கள் பாடுபட்டன. அந்த லட்சியத்திற்காக நாதுராம் ஜோதிபா புலே, மகாத்மா காந்தி, அண்ணல் அம்பேத்கார், போன்ற பல தேசிய தலைவர்களும் நீதி கட்சி தலைவர்களும் பெரும் பாடுபட்டனர். அதே லட்சியத்திற்காக திராவிடர் கழகத் தலைவர்களும், தி.மு.க தலைவர்களும் ஆற்றி வரும் பணிகள் மகத்தானவை.

நீதிக்கட்சி அரசும் தி.மு.க அரசும் பெண்ணடிமையைப் போக்குவதற்கும், கல்வி உரிமையை வழங்கி சமூக சமத்துவத்தை உருவாக்குவதற்கும் தாழ்த்தப்பட்ட பழங்குடியினர் பிற்ப்படுத்தப் பட்டோர் முன்னேற்றத்திற்கும் பல திட்டங்களைத் தீட்டி பல சட்டங்களை இயற்றி பாடுபட்டன. தாழ்த்தப்பட்டவர்களில் ஒரு பிரிவினரான பழங்குடி மக்கள் பஞ்சமர்கள் என்று அழைக்கப்பட்ட நிலையை மாற்றி அவர்கள் ஆதி திராவிடர்கள் என்று மதிப்புடன் அழைக்கப்பட வேண்டும் என்று 25-3-1922 அன்று அரசாணை பிறப்பித்து பெருமை சேர்த்தது நீதிக் கட்சி அரசு. ஆதிதிராவிடர், பழங்குடி மக்கள் பொது தெருக்களில் நடக்கக் கூடாது என்று இருந்த தடையை நீக்கி அவர்கள் கம்பீரமாக நடந்து போகலாம் என்று நீதிக்கட்சி அரசு சட்டபூர்வமாக உரிமை வழங்கியது. தாழ்த்தப்பட்ட பழங்குடியின மக்கள் பேருந்துகளில் பயணம் செய்திடும் உரிமை உறுதிசெய்யப்பட்டது. ஆதிதிராவிடர்களுக்கு கல்விக் கற்கும் வாய்ப்பு வேலைவாய்ப்பு வீட்டுமனைகள் என பல உரிமைகள் வழங்கப்பட்டன.

1967 முதல் 1969 வரை தமிழக முதலமைச்சராக இருந்த பேரறிஞர் அண்ணா அவர்கள் ஆதிதிராவிடர்-பழங்குடியினர் முன்னேற்றத்திற்கான திட்டங்களை நிறைவேற்றுவதில் மிகுந்த அக்கறை காட்டினார். அனைத்து ஆதிதிராவிடர் குடியிருப்புகளில் இருந்த இடுகாடுகளுக்கும் சாலை வசதிகள் செய்து தரப்பட்டன. 1969ஆம் ஆண்டு வரை ஆதிதிராவிடர் நலத்துறை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையில் இருந்தது. 1969-1971 தி.மு.க ஆட்சியில் தாழ்த்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு 16% லிருந்து 18% ஆக உயர்த்தப்பட்டது.

2-5-1969 அன்று ஆதிதிராவிடர் நலத்துறை தனியாக உருவாக்கப்பட்டது. தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி வளர்ச்சிக் கழகம் 1-3-1974 அன்று தி.மு.க அரசால் உருவாக்கப்பட்டது. இந்த அமைப்பின் மூலம் ஆதிதிராவிடர்களுக்கு 10 லட்சம் இலவச வீடுகள் கட்டித் தரப்பட்டன.

1972 ஆம் ஆண்டு தி.மு.க ஆட்சியில் அரிசன வளர்ச்சிக் கழகம் ஏற்படுத்தப்பட்டது. 1970 முதல் ஆதிதிராவிட மாணவர்களுக்கு புகுமுக வகுப்பு வரை இலவசக் கல்வி வழங்கப்பட்டது. ஆதிதிராவிடர் நலத் துறையின் சார்பாக மாணவர்களுக்கு கல்விக் கடன் வழங்கும் திட்டம் 1971-72 முதல் நடைமுறைப்படுத்தப்பட்டது. ஆதிதிராவிட மாணவர்களுக்கு பள்ளிகளில் மதிய உணவு வழங்கும் திட்டம் ஆதிதிராவிடர் நலத்துறையின் மூலமாக நடைமுறைப்படுத்தப்பட்டது.

“தாழ்த்தப்பட்டோர் - பழங்குடியினர் முன்னேற்றத்திற்கு பாடுபட்ட கலைஞர் அரசு” : மகுடம் சூடிய தி.மு.க-16

தமிழ்நாடு ஆதிதிராவிடர் நலத்துறையின் மூலம் 734 ஆரம்பப் பள்ளிகள், 10 உயர்நிலைப் பள்ளிகள்,17 இரவு பள்ளிகள் நடத்தப்பட்டன. 1-3-1974ல் ஆதிதிராவிடர்கள் வீடு கட்டும் வாரியம் அமைக்கப்பட்டு ஒரே ஆண்டில் 30,000 வீடுகள் கட்டித் தரப்பட்டன. 1989-1991ல் 89,000 இலவச காங்கிரிட் வீடுகள் கட்டித்தரப்பட்டன.

ஆதிதிராவிடர் பழங்குடியினர் மாணவர்களுக்கு பட்டப்படிப்பு வரை கல்வி இலவசமாக வழங்கப்பட்டது. விடுதிகளில் தங்கி படிக்கும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு உணவுக்கான அரசு நிதி ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டது. இலவச பேருந்து பயண அடையாள அட்டை வழங்கப்பட்டது. ஆதிதிராவிடர் தொழில் முனைவோர்களுக்கு தொழில் துவங்க வழங்கப்பட்ட மானிய தொகை ரூ.10,000 லிருந்து ரூ.15,000 ஆக உயர்த்தப்பட்டது. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு தக்க பயிற்சியும், வேலைவாய்ப்பும், சிறுதொழில் துவங்க நிதி உதவியும் வழங்கப்பட்டன. இத்திட்டத்திற்காக அரசால் ரூபாய் 25 கோடி செலவிடப்பட்டது. பழங்குடியினர் 9,000 பேருக்கு பழங்குடியினர் மேம்பாட்டுத் துணை திட்டத்தின் கீழ் நிதி உதவி வழங்கப்பட்டது.

ஆதிதிராவிட சமுகத்தைச் சேர்ந்த சுமார் 10,00,000 மாணவர்களுக்கு இலவச நோட்டு, புத்தகங்கள் வழங்கப்பட்டன. சிறுதொழில் செய்வோருக்கு கடன் உதவி வழங்கப்பட்டது. ஆதிதிராவிடர்களுக்கு 40,000 வீட்டுமனை பட்டாக்கள் வழங்கப்பட்டன. 3000 குடியிருப்புகளுக்கு குடிநீர் வசதி செய்து தரப்பட்டது. ஆதிதிராவிடர்களுக்கு மின்சாரம், தெருவிளக்கு போன்ற வசதிகள் செய்து தரப்பட்டன.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் 1989ம் ஆண்டு இயற்றப்பட்டது. 1990ஆம் ஆண்டு பழங்குடியினருக்கு தனியாக ஒரு சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது. 1989ஆம் ஆண்டு ஆதிதிராவிடர்களில் 4,86,948 பேருக்கு நிலம் வழங்கப்பட்டு அந்த நிலத்துக்கான பட்டாவும் வழங்கப்பட்டது. 1989 சீர் மரபினர் நல வாரியம் அமைக்கப்பட்டது. 1989-90 கல்வியாண்டில் 11ஆம் வகுப்பு 12ஆம் வகுப்பு அரசு தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற ஆதிதிராவிட மாணவர்களுக்கு காந்தி நினைவு நிதி உதவி வழங்கப்பட்டது. இந்து தாழ்த்தப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் அனைத்து சலுகைகளும் மதம் மாறிய கிறிஸ்தவ தாழ்த்தப்பட்டவர்களுக்கும் தி.மு.க அரசால் வழங்கப்பட்டது. ஆதிதிராவிடர் குடியிருப்புகள் ஒவ்வொன்றிற்க்கும் 1989-1990 பொது வானொலிப்பெட்டி வழங்கப்பட்டது. 2220 ஆதிதிராவிடர்களுக்கு விசைத்தறிகள் அமைத்து தரப்பட்டன. 24,200 ஆதிதிராவிடர்களுக்கு கறவை மாடுகள் வாங்க நிதி வழங்கப்பட்டது.

1989-1991 அமைந்த தி.மு.க ஆட்சிக்காலத்தில் ஆதிதிராவிடர்களுக்கு கான்கிரீட் வீடுகள் கடும் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மேம்பாட்டு கழகம் உருவாக்கிய சிறப்பு திட்டம் 1989-1990 ஆம் ஆண்டு செயல்படுத்தப்பட்டது.

1991 முதல் 96 வரையிலான அ.தி.மு.க ஆட்சியில் ஆதிதிராவிடர் நலனுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட மொத்த தொகை 696 கோடியே 16 லட்சம் மட்டுமே. ஆனால், 1996-2001 தி.மு.க ஆட்சி காலத்தில் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகை ரூ.2,170 கோடியே 39 லட்சம் ஆகும்.

“தாழ்த்தப்பட்டோர் - பழங்குடியினர் முன்னேற்றத்திற்கு பாடுபட்ட கலைஞர் அரசு” : மகுடம் சூடிய தி.மு.க-16

பெரியார் நினைவு சமத்துவபுரங்கள் : அனைத்து சமுதாய மக்களும் நல்லிணக்கமாக ஒன்றுகூடி சமத்துவ உணர்வுடன் வாழ்கின்ற சூழலை உருவாக்கும் வகையில் 1997 ஆம் ஆண்டு தி.மு.க அரசு பெரியார் நினைவு சமத்துவபுரம் என்னும் புரட்சிகரமான திட்டத்தை நடைமுறைப் படுத்தியது. அத்திட்டத்தின்படி ஒவ்வொரு சமத்துவபுரத்திலும் கட்டப்பட்ட 100 வீடுகள், அனைத்து சமுதாய மக்களுக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டன. அவற்றில் ஒவ்வொரு குடியிருப்பிலும் 40 வீடுகள் ஆதிதிராவிடர்களுக்கு ஒதுக்கப்பட்டன. ஒவ்வொரு ஆதிதிராவிடர் வீட்டின் இரு மருங்கிலும் பிற சமுதாயத்தினர் வீடுகள் அமையுமாறு திட்டத்தில் வீடுகள் ஒதுக்கீடு செய்யப்படுகின்றன

1996-2001 தி.மு.க ஆட்சி காலத்தில் ஆதிதிராவிடர்களுக்கு 8,89,512 வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. அதேபோல் 1996-2001 தி.மு.க ஆட்சி காலத்தில் இலவச கான்கிரீட் வீடு திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது.

துணைப்பிரதமர் ஜெகஜீவன்ராம் பாராட்டு: மத்திய அரசில் உணவு அமைச்சராக இருந்த பாபு ஜெகஜீவன்ராம் அவர்கள் 1975 ஆம் ஆண்டு சென்னைக்கு அருகே காட்டுப்பாக்கத்தில் அரிஜன வீட்டு வசதி கழகம் சார்பில் கட்டப்பட்டிருந்த குடியிருப்புகளை திறந்து வைத்து. உரையாற்றும் போது இலவசமாக அரசு வீடுகளை அரிஜன சகோதரர்களுக்கு வழங்குவது என்று முதலமைச்சர் கலைஞர் முடிவு செய்திருப்பது அவருடைய சீரிய மனப்பான்மைக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும். தமிழ்நாடு காட்டியுள்ள இந்த சிறந்த முன்னுதாரணத்தை மற்ற மாநிலங்களும் பின்பற்ற வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என்று தி.மு.க அரசையும் முதலமச்சர் கலைஞரையும் பாராட்டி பேசினார்.

சுயநிதிக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேரும் ஆதிதிராவிடர், பழங்குடியினர், கிறிஸ்தவ ஆதிதிராவிட இனத்தைச் சேர்ந்த மாணவ, மாணவியர்களுக்கு கல்வி கட்டணச் சலுகைகள் வழங்கப்பட்டன. அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் பயின்ற மாணவர்களின் தேர்வு கட்டணங்கள் ரத்து செய்யப்பட்டன. அத்துடன் கல்லூரிகளில் பயிலும் ஆதிதிராவிடர், பழங்குடியினர் சமூகத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு கல்விக் கடன் ரூ.2,000 என்பது ரூ7,000 ஆக 19-2-1997 அன்று முதல் உயர்த்தி வழங்கப்பட்டது.

பழங்குடியினர் மாணவர்களுக்கு உண்டு உறைவிடப் பள்ளிகள் துவக்கப்பட்டன. அச்சமூகத்தைச் சார்ந்த பள்ளி ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் கணினி பயிற்சிகள் வழங்கப்பட்டன. மேல்நிலைக் கல்வியில் முதலிடம் பெறும் மாணவர்களுக்கு ரூபாய் 25,000 பரிசு வழங்கும் திட்டம் அறிவிக்கப்பட்டது. பத்தாம் வகுப்பில் முதலிடம் பெரும் மாணவர்களுக்கு ரூபாய் பத்தாயிரம் பரிசு தொகை வழங்கும் திட்டம் அறிவிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டது. 10 மற்றும் 12-ம் வகுப்பு தேர்வுகளில் மாநில அளவில் முதலிடம் பெறும் ஆதிதிராவிட சமுக மாணவ, மாணவியர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்பட்டது.

மதுரையில் தியாகி கக்கன் அவர்களுக்கு 1997 ஆம் ஆண்டு சிலை அமைக்கப்பட்டது. ஆதிதிராவிடர்களுக்கு சுய தொழில் பயிற்சி திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. கோயில்களில் ஏழை ஆதிதிராடவிடர் மற்றும்பழங்குடியினர் தம்பதியர்களுக்கு இலவச திருமணம் நடத்தி வைக்கும் திட்டம் 1997 ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்பட்டது. இரட்டை குவளை முறை ஒழிக்கப்பட்டது. 1999 ஆம் ஆண்டு தீண்டாமை ஒழிப்பு, மத நல்லிணக்கம், சமூக ஒற்றுமை ஆண்டாக கடைபிடிக்கப்பட்டது.

வன்கொடுமை தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டன. அனைத்துப் பிரிவு பணியாளர்களுக்கும் மறுவாழ்வு திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டன. அதன்படி மனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றும் நிலை மாற்றப்பட்டு அதற்காக தனி சட்டம் இயற்றப்பட்டது.

“தாழ்த்தப்பட்டோர் - பழங்குடியினர் முன்னேற்றத்திற்கு பாடுபட்ட கலைஞர் அரசு” : மகுடம் சூடிய தி.மு.க-16

அதன்படி துப்புரவுப் பணியாளர்களில் மாற்று வேலை வாய்ப்பு, சுயதொழில் துவங்க விரும்புபவர்களுக்கு மாற்று வாழ்வு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. அதன் மூலம் 19,505 துப்புரவு பணியாளர்கள் மறுவாழ்வு பெற்றனர். இவர்களுக்கு 20 கோடியை அரசு ஒதுக்கியது. தொண்டு நிறுவனங்கள் மூலமாகவும் அரசு மூலமாகவும் கண்டறியப்பட்ட கொத்தடிமைகள் மீட்கப்பட்டன. கொத்தடிமை ஒழிப்பு சட்டம் தீவிரமாக நடைமுறைப்படுத்தப்பட்டது.

அம்பேத்கரை போற்றிய கழக அரசு : 1972ம் ஆண்டில் சென்னை வியாசர்பாடியில் அம்பேத்கர் பெயரில் புதிய கலை கல்லூரி துவங்கப்பட்டது. அதே ஆண்டு சென்னை மயிலாப்பூர் ஹேமில்டன் பாலத்திற்கு அம்பேத்கர் பாலம் என்று பெயர் சூட்டப்பட்டது. சென்னை சட்டக்கல்லூரிக்கு டாக்டர் அம்பேத்கர் பெயர் 2-9-1997 அன்று சூட்டப்பட்டு அக் கல்லூரி டாக்டர் அம்பேத்கர் சட்டக் கல்லூரி என்று அழைக்கப்படுகிறது..

இந்தியாவிலேயே முதன்முதலாக 1997 ஆம் ஆண்டு சென்னையில் ஆரம்பிக்கப்பட்ட சட்டப் பல்கலைக்கழகத்தற்கு அப் பல்கலைக்கழகமும் அண்ணல் அம்பேத்கர் பெயர் சூட்டப்பட்டது. . தாழ்த்தப்பட்ட சமுதாயத்தின் முன்னேற்றத்திற்கு பாடுபடுமவர்களுக்கு ஆண்டுதோறும் அம்பேத்கர் பெயரில் விருதும் ரூபாய் ஒரு லட்சம் பொற்கிழியும் வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. அதற்கு அம்பேத்கர் விருது என்றும் பெயரிடப்பட்டது.

1996-2001 தி.மு.க ஆட்சி காலத்தில் ஆதிதிராவிட மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் வழங்கப்பட்ட சலுகைகள் 2006-2011 தி.மு.க ஆட்சி காலத்தில் உயர்த்தி வழங்கப்பட்டன. தமிழ்நாடு பழங்குடியினர் நல வாரியம் 20-4-2007 அன்று அமைக்கப்பட்டு அதன் மூலம் 21,359 குடும்பங்களுக்கு ரூபாய் 100 கோடி மதிப்பீட்டிலான நிதி உதவிகள் வழங்கப்பட்டன. ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகத்தின் மூலம் 5,872 ஆதிதிராவிட மகளிருக்கு நிலம் வழங்கப்பட்டது.

ஆதிதிராவிடர் சுய உதவி குழுக்கள் அமைக்கப்பட்டன. 1,08,045 பயனாளிகளுக்கு சுய உதவி குழுக்கள் மூலம் சுழல் நிதி மானியம் வழங்கப்பட்டது. ஆதிதிராவிடர் பழங்குடியினர் சுய வேலை வாய்ப்பு திட்டத்தின் மூலம் 4,351 பேர் பயன்பெற்றனர். சுய தொழில் துவங்க அவர்களில் சிலருக்கு மானியம் வழங்கப்பட்டது. 52,173 சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு சுய தொழில் பயிற்சியும், மகளிருக்கு நிதியுதவியும் வழங்கப்பட்டது. 79,667 இளைஞர்களுக்கு தொழில் பயிற்சியும், மானியக் கடனும் வழங்கப்பட்டது. 3,939 ஆதிதிராவிட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கப்பட்டது.

துப்புரவுப் பணியாளர் புனரமைப்பு மற்றும் மறுவாழ்வு திட்டம் மூலம் சுமார் 4,000 பேருக்கு நிதி உதவியும், சுய வேலை வாய்ப்பும் வழங்கப்பட்டது. தமிழ்நாடு தூய்மைப் பணியாளர் நல வாரியம் மூலம் 23,510 பேருக்கு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன. 2-5-2008 அன்று தமிழ்நாடு நரிக்குறவர் நல வாரியம் அமைக்கப்பட்டது. ஆதிதிராவிடர் விவசாயிகளுக்கு மிகக்குறைந்த மானியத்தில் விவசாய கருவிகள் வழங்கப்பட்டன 6,000 ஆதிதிராவிட விவசாயிகளுக்கு நிலம் வழங்கப்பட்டது. பால் உற்பத்தியாளர் சங்கத்தில் உறுப்பினர்களாக உள்ள ஆதிதிராவிடர்களுக்கு வங்கிகள் மூலம் ஆதிதிராவிடர் நல நிதியில் இருந்து கடன் வழங்கப்பட்டது. இந்திய குடியுரிமை பணி தேர்வில் ஆதிதிராவிடர்களுக்கு சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டன. 24-4-2007 அன்று சீர்மரபினர் நல வாரியம் அமைக்கப்பட்டது.

2000வது ஆண்டு பழங்குடியினர் நலத்துறை தனியாக உருவாக்கப்பட்டது. தமிழ்நாடு பழங்குடியினர் நல வாரியம் 20-4-2007 அன்று அமைக்கப்பட்டது. தி.மு.க அரசு தாழ்த்தபட்ட பழங்குடியினர் மக்கள் முன்னேற்றதிற்கு பெரும் தொண்டாற்றியது.

- பேராசிரியர் டாக்டர் சு.கிருஷ்ணசாமி, ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்டம் & உலகச் சுற்றுச்சூழல் பேரமைப்பின் முன்னாள் உறுப்பினர்.

Related Stories

Related Stories