தமிழ்நாடு

தினமும் கிண்டல் செய்ததால் ஆத்திரம்... பள்ளி மாணவன் சுத்தியலால் அடித்துக்கொலை... தேனி அருகே அதிர்ச்சி!

தேனியில் கிண்டல் செய்த மாணவனை சக மாணவன் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமும் கிண்டல் செய்ததால் ஆத்திரம்... பள்ளி மாணவன் சுத்தியலால் அடித்துக்கொலை... தேனி அருகே அதிர்ச்சி!
Kalaignar TV
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தேனி மாவட்டம், கண்டமனூரைச் சேர்ந்தவர் முருகன். இவரது மகன் தனசேகரன் அதே பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வருகிறார். தனசேகரன் தன்னுடன் படிக்கும் சக மாணவரை அடிக்கடி கிண்டல் செய்துவந்துள்ளார்.

இந்நிலையில், தனசேகரன் நேற்று முன்தினம் பள்ளியின் மதிய உணவு இடைவெளியின்போது, அந்த மாணவனைக் கிண்டல் செய்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் கிண்டலுக்குள்ளான மாணவன், தன் கையில் வைத்திருந்த சுத்தியலால், திடீரென தனசேகரனின் தலையில் அடித்துள்ளார்.

இதில் ரத்த வெள்ளத்தில் தனசேகரன் கீழே விழுந்தார். உடனே ஆசிரியர்கள் சிலர் தனசேகரனை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த தனசேகரன் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார்.

இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, தனசேகரனை சுத்தியலால் அடித்த மாணவனைக் கைது செய்தனர். பின்னர் தனசேகரின் உறவினர்கள் கண்டமனூர் சாலையில் மறியல் போராட்டம் நடத்தினர். அப்போது, உயிரிழந்த தனசேகரின் குடும்பத்திற்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என வலியுறுத்தினர்.

பின்னர், சம்பவ இடத்திற்கு வந்த போலிஸார் அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பிவைத்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

banner

Related Stories

Related Stories