தமிழ்நாடு

“தமிழர்களின் அடையாளங்களை மீட்டு தமிழ் மொழிக்கு கலைஞர் அரசு ஆற்றிய தொண்டுகள்” : மகுடம் சூடிய தி.மு.க-6

முதலமைச்சர் கலைஞர் அவர்களின் தொடர் முயற்சிகளால் மத்திய அரசு தமிழ் மொழியை செம்மொழி என அறிவித்தது செம்மொழி நிறுவனத்தில் உயர் நிலைக் குழுக்களாக எண்பேராயமும் ஐம்பெருங் குழுவும் அமைக்கப்பட்டன.

“தமிழர்களின் அடையாளங்களை மீட்டு தமிழ் மொழிக்கு கலைஞர் அரசு ஆற்றிய தொண்டுகள்” : மகுடம் சூடிய தி.மு.க-6
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

தென்னிந்திய வரலாற்றில் மிகப் பெரும் புரட்சியாக 1968 ஆம் ஆண்டு பேரறிஞர் அண்ணா அவர்களின் தலைமையில் திராவிட முன்னேற்ற கழகத்தின் ஆட்சி தமிழ்நாட்டில் ஏற்பட்டது. அந்த ஆட்சியில் எதிர்கால முன்னேற்றத்திற்கு வேண்டிய அனைத்து அடிப்படை அடித்தளங்களும் அமைத்துக் கொடுக்கப்பட்டன. தமிழ் மொழி வளர்ச்சிக்கு தி.மு.க பெருந்தொண்டாற்றி வருகிறது.

முதல் அமைச்சர் அண்ணா அவர்களால் 1968 ஆம் ஆண்டு ஜனவரி 23ஆம் நாள் தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிக் கொள்கை தமிழ் நாடு அரசின் ஆட்சி மொழிகொள்ளையாக அறிவிக்கப்பட்டது. பேரறிஞர் அண்ணா அவர்கள் அறிமுகப்படுத்திய இரு மொழிக் கொள்கைதான் தமிழ்நாடு அரசின் மொழி கொள்கையாக இன்றும் என்றும் விளங்குகிறது.

பள்ளிகளில் தமிழுக்கு முதலிடம் :

1967ல் தி.மு.க ஆட்சிக்கு வருவதற்கு முன்பு உயர்நிலைப் பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் மாணவர்களுக்கான படித்த முதல் பாடம் ஆங்கிலம் என்றும் இரண்டாம் பாடம் தமிழ் என்றும் மூன்றாம் பாட பிரிவாக பிற பாடங்கள் என்றும் இருந்தன. அறிஞர் அண்ணா அவர்கள் முதலமைச்சரானதும் 1968 ஆம் ஆண்டு மாணவர்களுக்கான முதல் பாடம் தமிழ் என்றும், இரண்டாம் பாடம் ஆங்கிலம் என்றும் மூன்றாம் பாடம் பிற பாடங்கள் என்றும் ஆக்கி அதற்கான அரசு ஆணை பிறப்பிக்கப்பட்டு தமிழ் மொழிக்கு முதலிடமும் மேன்மையும் ஏற்படுத்தப்பட்டது.

சென்னை பல்கலைக் கழகத்தில் தமிழ்துறை தொடக்கம் :

1916 ஆம் ஆண்டு வரை சென்னை பல்கலைக்கழகத்தில் தமிழுக்கு என்று தனியாக ஒரு துறை இல்லை. கீழ்த்திசை மொழிகளில் ஒன்றாகத் தான் தமிழ் இருந்தது. 1923 ஆண்டு, ஆகஸ்ட் 26 ஆம் ஆண்டு முதல் தமிழ் மொழி சென்னை பல்கலைக்கழகத்தில் கட்டாய மொழியாக ஆக்கப்பட்டது. பின்னர் சென்னை பல்கலைக்கழகத்தில் தமிழுக்கென்று தனித் துறை உருவாக்கப்பட்டது.

சமஸ்கிருதம் கட்டாயப் பாடமாக இருந்தது மருத்துவம் படிக்கும் மாணவர்கள் கட்டாயம் சமஸ்கிருதம் படித்திருக்க வேண்டும் என்ற நிலைதான் முன்பு இருந்தது இந்த நிலையை மாற்றி 1923 ஆம் ஆண்டு நீதிக்கட்சி ஆட்சியில் புதிய சட்டம் இயற்றியது.

“தமிழர்களின் அடையாளங்களை மீட்டு தமிழ் மொழிக்கு கலைஞர் அரசு ஆற்றிய தொண்டுகள்” : மகுடம் சூடிய தி.மு.க-6

தமிழுக்கு நன்கொடை :

1969-71 தென்னிந்திய மொழிகளின் புத்தக நிறுவன வளர்ச்சிக்கு ரூபாய் 2 லட்சத்து 45 ஆயிரம் வழங்கப்பட்டது. 1970-71ல் தமிழ் பட்டப்படிப்பு தொடங்குவதற்கு வெங்கடேஸ்வரா பல்கலைக்கழகத்திற்கு தமிழ்நாடு அரசு சார்பாக நிதி வழங்கப்பட்டது. அதன்பின் ஆண்டுதோறும் அப் பல்கலைக் கழகத்திற்கு ரூபாய் பத்தாயிரம் வீதம் தமிழ்நாடு அரசு தொடர்ந்து நிதி வழங்கியது. தமிழ்மொழி வளர்ச்சிக்காக அலகாபாத், கேரளா, கல்கத்தா, ஆந்திரா, உஸ்மானியா பல்கலைக் கழகங்களுக்கு தமிழ்நாடு அரசு நிதி வழங்கியது. புதுடெல்லியில் கட்டப்பட்டு வந்த டெல்லி தமிழ் சங்கக் கட்டிடத்திற்கு இரண்டாம் கட்டமாக தமிழக அரசு ரூ.50,000 நன்கொடையாக வழங்கியது.

இரண்டாம் உலகத் தமிழ் மாநாடு:

இரண்டாம் உலகத் தமிழ் மாநாடு 3-1-1968 அன்று முதலமைச்சர் அண்ணா அவர்கள் தலைமையில் சென்னையில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. இந்திய குடியரசுத் தலைவர் டாக்டர் ஜாகிர் உசேன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

மாநாட்டின் ஒரு பகுதியாக 1-1-1968 அன்று உலகப் புகழ்பெற்ற மேதை டாக்டர் ஏ.ராமசாமி முதலியார் அவர்கள் முதலமைச்சர் அறிஞர் அண்ணா அவர்களின் முழு உருவச் சிலையை சென்னை அண்ணா சாலையில் திறந்து வைத்தார். 2-1-1968 சென்னை மெரினா கடற்கரையில் தமிழர்களின் அடையாளச் சின்னங்களான திருவள்ளுவர், கம்பர், அவ்வையார், வ.உ.சிதம்பரனார், பாரதியார், பாரதிதாசன், ஜி.யு.போப், கால்டுவெல், சிலப்பதிகார நாயகி கண்ணகி ஆகியோரது சிலைகள் திறந்து வைக்கப்பட்டன. சென்னை பல்கலைக்கழகம், அண்ணாமலைப் பல்கலைக்கழகம், மதுரை பல்கலைக்கழகம் ஆகியவற்றில் தலா 3 லட்ச ரூபாய் முதலீட்டில் திருக்குறள் ஆராய்ச்சி மையங்கள் ஏற்படுத்தப்பட்டன. 1968-1969 கல்லூரிகளில் தமிழ் பயிற்று மொழியாக ஆக்கப்பட்டது.

தமிழ் நாடு பெயர் சூட்டல் :

1967 ஆம் ஆண்டு ஜூலை மாதம் சென்னை ராஜ்ஜியம் என்பது தமிழ்நாடு என்று பெயர் மாற்றப்பட வேண்டும் என்று முதலமைச்சர் பேரறிஞர் அண்ணா அவர்களால் முன்மொழியப்பட்ட மசோதா சட்டமன்ற இரு அவைகளிலும் பெரும்பான்மையுடன் நிறைவேற்றபட்டது. பின்னர் மத்திய அரசின் ஒப்புதல் பெற்று 14.1.1969 தமிழ்நாடு என்று பெயர் சூட்டப்பட்டது. உடல்நலம் குன்றியிருந்த நிலையிலும் முதலமைச்சர் அண்ணா அவர்கள் சென்னை கலைவாணர் அரங்கில் அதற்காக நடந்த அரசு விழாவில் கலந்து கொண்டு இம் மாநிலத்திற்கு தமிழ்நாடு என்று பெயர் சூட்டினார்கள்.

“தமிழர்களின் அடையாளங்களை மீட்டு தமிழ் மொழிக்கு கலைஞர் அரசு ஆற்றிய தொண்டுகள்” : மகுடம் சூடிய தி.மு.க-6

பிறமொழி சொற்கள் தமிழ் சொற்களாகின :

தமிழ்நாடு அரசு சின்னத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சத்யமேவ ஜெயதே என்பது வாய்மையே வெல்லும் என்றும், மெட்ராஸ் கவர்மெண்ட் என்பது தமிழ்நாடு அரசு என்றும், புனித ஜார்ஜ் கோட்டையிலுள்ள செக்ரிடரியட் என்பது தலைமைச் செயலகம் என்றும், அசம்பிளி என்பது சட்டமன்றம் என்றும், ஸ்பீக்கர் என்பது பேரவைத் தலைவர் என்றும், மந்திரி என்பது அமைச்சர் என்றும் கனம் என்பது மாண்புமிகு என்றும், கலெக்டர் என்பது மாவட்ட ஆட்சித் தலைவர் என்றும் தமிழ் மொழியின் பெயர் மாற்றம் செய்யப்பட்டன.

ஸ்ரீ என்பது திரு என்றும் ஸ்ரீமதி என்பது திருமதி என்றும் குமாரி என்பது செல்வி என்றும் குமாரன் என்பது செல்வன் என்றும், விவாஹ சுப முகூர்த்த பத்திரிக்கை என்பது திருமண அழைப்பிதழ் என்றும், கும்பாபிஷேகம் என்பது குடமுழுக்கு என்றும், கிரகபிரவேசம் என்பது புது மனை புகுவிழா என்றும் அக்ராசனர் என்பது தலைவர் என்றும், காரியதரிசி என்பது செயலாளர் என்றும் பொக்கிஷதாரர் என்பது பொருளாளர் என்றும் திராவிட இயக்கத் தலைவர்களின் தொடர் முயற்சிகளால் மொழி மாற்றம் செய்யப்பட்டன. இதைப்போல் சமஸ்கிருதத்தில் நடைமுறையில் இருந்த பல சொற்கள் தமிழ் சொற்களாக மாற்றப்பட்டன.

ஆரிய கலாச்சாரத்தின் தாக்கத்திலிருந்து தமிழ் சமுதாயத்தை மீட்டு தமிழ் பண்பாட்டின் மாட்சிச்கு கொண்டு வந்த திராவிட இயக்க தலைவர்கள் சுயமரியாதைத் தமிழ் முறை திருமணங்களை நடத்தி வைப்பதிலும் வெற்றி கண்டுள்ளனர். இது தமிழ்பண்பாட்டின் அடித்தளத்தை பலப்படுத்தி அன்னியமொழி படையெடுப்பில் இருந்து தமிழ் மொழியை பாதுகாப்பதில் பேரரணாகும்.

1967 வரை ஸ்டேட் எக்ஸ்பிரஸ் என்ற ஆங்கிலப் பெயரோடு வலம் வந்து கொண்டிருந்த பேருந்துகள் 1969 ஆண்டு தி.மு.க ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சர் கலைஞர் அவர்களால் தமிழ்நாடு போக்குவரத்துக் கழகம் என தமிழில் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. பேருந்துகளில் திருவள்ளுவர் படம் வைக்கப்பட்டு திருக்குறளும் அதன் விளக்கமும் அருகில் எழுதப்பட்டு மக்களுக்கு நல்ல கருத்துக்கள் மனதில் பதிய ஆவன செய்யப்பட்டது. 1968 ஆம் ஆண்டு டிசம்பர் 12ஆம் நாள் முதல் மாநில போக்குவரத்து மேல்முறையீட்டு தீர்ப்பாய அலுவலகம் தமிழில் செயல்படத் தொடங்கியது.

1968 ஜனவரி முதல் கீழமை நீதி மன்றங்களின் சாட்சிகள் தமிழ் விசாரிக்கப்பட்டன. பின்னர் நீதிவிசாரணை தமிழில் விசாரிக்கப்பட்டு தீர்ப்புகளும் தமிழில் வழங்கப்பட்டன.1-4-1970 முதல் நீதித்துறை, சட்டத்துறை ஆகியவற்றில் தமிழ்திட்டத்தின் முதல்முறை செயல் படுத்தப்பட்டது. முதன்முதலில் சட்ட அகராதி 1968 ஆம் ஆண்டு தமிழில் வெளியிடப்பட்டது. இப்படி எத்தனையோ ஆக்கங்கள் செய்து தமிழ் மொழிக்கும் தமிழர்களுக்கும் ஏற்றம் சேர்த்து வருகிறது திராவிட முன்னேற்றக் கழகம். 1996-2001 தி.மு.க ஆட்சியில் ஊதியம் மற்றும் அரசின் நிதிப் பரிவர்த்தனை கருவூலத்தில் அனைத்து ஆவணங்களும் தமிழில் வெளியிடப் படுவதற்கு அரசாணை வெளியிடப்பட்டது.

“தமிழர்களின் அடையாளங்களை மீட்டு தமிழ் மொழிக்கு கலைஞர் அரசு ஆற்றிய தொண்டுகள்” : மகுடம் சூடிய தி.மு.க-6

உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் :

1970 ஆம் ஆண்டு உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் சென்னையில் ஆரம்பிக்கப்பட்டது. தமிழ்நாடு சங்கீத நாடக சபா என்பது 1969-1971 தி.மு.க ஆட்சியில் இயல், இசை, நாடக மன்றம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. திருவனந்தபுரம் பன்னாட்டுத் திராவிட மொழியியல் பள்ளிக்கு நிதி உதவி வழங்கப்பட்டது,

தமிழ்த்தாய் வாழ்த்து :

1970 ஆம் ஆண்டிற்கு முன்பு கல்வி நிலையங்களில் நடைபெறும் விழாக்களில் தொடக்கத்தில் இறைவணக்கப் பாடல் பாடப்பட்டு வந்தது அதை மாற்றி பேராசிரியர் மனோன்மணியம் சுந்தரனார் எழுதிய நாடகக் காப்பியத்தில் உள்ள நீராருங் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும் என்று தொடங்கும் பாடல் முதலமைச்சர் கலைஞர் அவர்களின் ஆணையின்படி 1970ஆம் ஆண்டு முதல் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலாக தமிழக அரசின் சார்ப்பாக அறிவிக்கப்பட்டது.

மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்கள் இசையமைக்க பின்னணிப் பாடகர்களான டி.எம்.சௌந்தரராஜன் திருமதி.பி சுசீலா ஆகியோர் பாடிய அந்த தமிழ் தாய் வாழ்த்து இசைத் தட்டுகளாக தமிழக அரசால் வெளியிடப்பட்டது.

திருவள்ளுவர் ஆண்டு :

பெரும் புலவர் மறைமலை அடிகள் தலைமையில் தமிழறிஞர்கள் 1921ஆம் ஆண்டு சென்னை பச்சையப்பன் கல்லூரியில் ஒரு கூட்டம் நடத்தி கலந்து பேசி தமிழர்களுக்கென்று ஒரு தனி ஆண்டு தேவை என்றும் அந்த ஆண்டு திருவள்ளுவரின் பெயரில் திருவள்ளுவர் ஆண்டு என அறிவிக்கப்பட வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றினார்கள்.

அதன்படி 1971ஆம் ஆண்டு முதல் தமிழர்களின் ஆண்டு திருவள்ளுவர் ஆண்டு என்று தமிழ்நாடு அரசு அறிவித்து அதனை 1971 ஆம் ஆண்டு முதல் அரசு நாட்குறிப்பிலும் 1972 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு வெளியிட்டது.

பின்னர் 2006ஆம் ஆண்டு தமிழர் ஆண்டு சித்திரை 1ம் தேதி துடங்கும் என்றிருந்த நடைமுறையை மாற்றி தமிழர்கள் ஆண்டு தை 1ம் தேதி முதல் தொடங்கும் என்று முதலமைச்சர் கலைஞர் அவர்கள் அறிவித்து நடைமுறைப்படுத்தினார். ஆனால் அடுத்து வந்த அ.தி.மு.க அரசு அதனை ரத்து செய்துவிட்டது.

தமிழ் சொல் அகராதி :

அரசு அலுவலர்களுக்கு பயனளிக்கும் வகையில் ஆட்சி சொல் அகராதியின் மூன்றாம் பதிப்பு தமிழ் வளர்ச்சி இயக்குனர் மேற்பார்வையில் உருவாக்கப்பட்டது. 27-9-1969 முதல் துறை தலைமை அலுவலகங்கள் தமக்கான கடிதப் போக்குவரத்துகள் அனைத்தையும் தமிழ் மொழியிலேயே நடத்த வேண்டும் என்று தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பித்தது. தலைமைச் செயலகத்தின் அனைத்து துறைகளிலும் (சட்டம், நீதி, சட்டமன்றம் தவிர) இத்திட்டம் 29-12-1969 முதல் நடைமுறைக்கு வந்தது. பொது மக்களிடமிருந்து அரசுக்கு தமிழில் வரும் கடிதங்களுக்கு தமிழில் பதில் எழுதும் முறை 1-4-1970 முதல் நடைமுறைப்படுத்தப்பட்டது.

“தமிழர்களின் அடையாளங்களை மீட்டு தமிழ் மொழிக்கு கலைஞர் அரசு ஆற்றிய தொண்டுகள்” : மகுடம் சூடிய தி.மு.க-6
உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம்

வள்ளுவர் கோட்டம் :

1974ஆம் ஆண்டு சென்னையில் வள்ளுவர் கோட்டம் கட்டும் பணிகள் திமுக அரசால் தொடங்கப்பட்டது. பணிகள் முடிவதற்குள் திமுக ஆட்சி கலைக்கப் பட்டுவிட்டது. எஞ்சிய பணிகள் முடிக்கப்பட்டு 1976 ஆண்டு வள்ளுவர் கோட்டம் அடுத்து வந்த அரசால் திறந்து வைக்கப்பட்டது. எனினும் வள்ளுவர் கோட்டத்தை சிந்தித்து, திட்டமிட்டு திருக்குறளின் அடிப்படையில் உருவாக்கி நிலைப்படுத்திய பெருமை முத்தமிழறிஞர் முதலமைச்சர் கலைஞர் அவர்களையே சாரும் என்பது தமிழ் கூறும் நல்லுலகம் அறிந்த உண்மை ஆகும்.

தமிழர் அடையாளங்கள் :

பூம்புகாரில் சிலப்பதிகார சிற்பக் கலைக் கூடம் அமைக்கப்பட்டது. தஞ்சையில் மாமன்னர் ராஜராஜ சோழனுக்கு சிலை அமைக்கப்பட்டது. தர்மபுரியில் அவ்வையாருக்கு நெல்லிக்கனி தந்த மன்னர் அதியமானுக்கு சிலைகளுடன் கோட்டமும் கட்டப்பட்டது. சென்னை கடற்கரையில் விவேகானந்தர் கலாச்சார கண்காட்சியுடன் விவேகானந்தர் இல்லம் திமுக ஆட்சியில் அமைக்கப் பட்டது.

பாவேந்தர் பாரதிதாசன் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது. பல்கலைக்கழக வளாகத்தில் பாரதிதாசன் சிலை அமைக்கப்பட்டது. சென்னை எழும்பூரில் தமிழ் வளர்ச்சி வளாகம் கட்டப்பட்டது. ஆந்திரா மாநிலம் குப்பம் நகரில் திராவிடப் பல்கலைக்கழகம் அமைக்க தமிழக அரசு நிதி உதவி வழங்கியது. தமிழ் இணைய பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டது.

அகர முதலி திட்டம் :

1974ஆம் ஆண்டு திமுக அரசால் செந்தமிழ் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககம் நிறுவப்பட்டு அதன் முதல் இயக்குநராக தேவநேயப் பாவாணர் நியமிக்கப்பட்டார். அவர் அகரமுதலி தொகுதியை உருவாக்கி விட்டு 1981 ஆம் ஆண்டு மரணமடைந்தார். முதல் தொகுதி 1985 இல் வெளியிடப்பட்டது. 1989-90 திமுக ஆட்சி காலத்தில் இப்பணி மீண்டும் தொடங்கப்பட்டது. 1991 இல் திமுக ஆட்சி கலைக்கப்பட்டது எனினும் பணிகள் முடிந்து 1992-ஆம் ஆண்டு இரண்டாம் தொகுதி வெளியிடப்பட்டது.

1996 திமுக ஆட்சிக்கு வந்ததும் அதற்காக நிபுணர்கள் குழு அமைக்கப்பட்டது. நல்ல முறையில் தயாரிக்கப்பட்ட அந்நூலின் நான்கு மற்றும் ஐந்தாம் தொகுதிகள் 1997 ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் வெளியிடப்பட்டன. அகரமுதலி வரிசையில் ஆறு மற்றும் ஏழாம் தொகுதிகள் 16-1-2008 முதல் அமைச்சர் அவர்களால் வெளியிடப்பட்டன.

மெட்ராஸ் -சென்னை ஆனது :

மெட்ராஸ் என்று அழைக்கப்பட்டு வந்த இந்நகரம் 30-9-1996 முதல் சென்னை என்று அழைக்கப்படும் என்று திமுக அரசு ஆணை பிறப்பித்தது.

உலகத் தமிழர்களுக்கு உதவி :தமிழ்நாடு அரசின் தமிழர் குழு சிங்கப்பூர் உள்ளிட்ட பல நாடுகளுக்குப் பயணம் செய்து 36 நாடுகளில் வாழும் 87 லட்சம் தமிழர்களின் நலன் மேம்பாட்டில் அக்கறை செலுத்தியது. 22 நாடுகளில் வாழும் தமிழர்களுக்கு தேவையான நூல்களை தமிழ்நாடு அரசு அனுப்பி உதவியது. 20 மாவட்டங்களில் தமிழ்நாடு அரசின் சார்பில் இசைப் பள்ளிகள் நடத்தப்பட்டன. ஆசிய ஆய்வு மையத்தின் ஆராய்ச்சி மேம்பாட்டிற்காக தமிழ்நாடு அரசு நிதி உதவி வழங்கியது. 1997-98ஆம் ஆண்டு சேலம், தஞ்சாவூர், விருதுநகர், காஞ்சிபுரம் போன்ற மண்டலங்களில் தமிழ் பண்பாட்டு மையங்கள் திமுக அரசால் ஏற்படுத்தி செயல்படுத்தப்பட்டன.

தமிழ்மொழி வளர்ச்சிக்குப் தனி அமைச்சர் பதவி :

1996-2001-ல் திமுக ஆட்சியில் தமிழ் மொழிக்கென்று தனியாக அமைச்சர் பதவி உருவாக்கப்பட்டது. 1-1-2000 அன்று கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை திறக்கப்பட்டது.

தமிழ் அறிஞர் நூல்கள் நாட்டுடமை :

1996-2001 திமுக ஆட்சியில் தேவநேயப் பாவாணர், மறைமலை அடிகள் திரு.வி.க., கல்கி, நாமக்கல் கவிஞர். வ.உ.சிதம்பரனார், கா.மு.ஷெரிப், நாவலர் சோமசுந்தரபாரதியார், பரலி சு.நெல்லையப்பர், வ.வெ.சு.ஐயர், வெ. சாமிநாத சர்மா ஆகிய தமிழ் அறிஞர்களின் நூல்கள் நாட்டுடமை ஆக்கப்பட்டன.

குறள் பீட விருது :

மத்திய அரசு ஞானபீட விருது வழங்குவது போல தமிழ் எழுத்தாளர்களுக்கு தமிழ்நாடு அரசு குறள் பீட விருது வழங்கும் முறையை அறிமுகப்படுத்தியது. தமிழ் அறிஞர்களுக்கு வழங்கப்படும் விருதுகளுக்கான தொகை ரூபாய் பத்தாயிரம் என்பது 1996 ல் ரூ.20,000 ஆகவும் 1999 ல் ரூ.ஒரு லட்சமாக உயர்த்தப்பட்டது.

தமிழறிஞர்களுக்கு ஓய்வூதியம்:

58 வயது நிரம்பிய தமிழறிஞர்களுக்கு மாதாந்திர ஓய்வூதியம் ரூபாய் 400 வழங்கும் திட்டம் 1996-2001-ல் திமுக ஆட்சியில் அறிமுகப்படுத்தப்பட்டது. பின்னர் அத் தொகை ரூபாய் 500 ஆக உயர்த்தப்பட்டது. 467 தமிழறிஞர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்பட்டது. மொழிப்போர் தியாகிகள் 2055 பேருக்கு ரூபாய் 3,000 மாத ஓய்வூதியம் வழங்கப்பட்டது. உயிரிழந்த மொழிப்போர் தியாகிகள் 476 பேர்களின் குடும்பத்தாருக்கு மாதம் ரூபாய் 1500 ஓய்வு ஊதியம் வழங்கப்பட்டது. மொழிப்போர் தியாகிகள் 1515 பேருக்கு இலவச பேருந்து பயண உரிமை அட்டை வழங்கப்பட்டது. 940 தமிழறிஞர்களுக்கும் 411 தமிழ் அறிஞர்களின் மரபுரிமையாளர்களுக்கும் மாதாந்திர ஓய்வூதியம் வழங்கப்பட்டது.

தமிழ் மொழி கட்டாயப் பாடம்:

1996-2000 1-ஆம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை தமிழ் கட்டாயப் பாடம் என திமுக அரசால் அறிவிக்கப்பட்டது. 2006-2011 திமுக ஆட்சியில் ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை தமிழ் மொழி கட்டாயப் பாடம் என்று அறிவிக்கப்பட்டு அதற்கான சட்டம் இயற்றப்பட்டது.

“தமிழர்களின் அடையாளங்களை மீட்டு தமிழ் மொழிக்கு கலைஞர் அரசு ஆற்றிய தொண்டுகள்” : மகுடம் சூடிய தி.மு.க-6

தமிழ் செம்மொழி :

முதலமைச்சர் கலைஞர் அவர்களின் தொடர் முயற்சிகளால் மத்திய அரசு தமிழ் மொழியை செம்மொழி என அறிவித்தது செம்மொழி நிறுவனத்தில் உயர் நிலைக் குழுக்களாக எண்பேராயமும் ஐம்பெருங் குழுவும் அமைக்கப்பட்டன.

முதலமைச்சர் கலைஞர் அவர்கள் தலைமையில் 18-8-2007 அன்று சென்னையில் நடந்த அரசு விழாவில் தமிழ் செம்மொழி ஆய்வுநிறுவனம் மத்திய மனிதவள மேம்மாட்டு துறை அமைச்சர் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டது. இந்நிறுவனத்திற்கு காஞ்சிபுரம் மாவட்டம் பெரும்பாக்கம் கிராமத்தில் 16.59 ஏக்கர் நிலம் தமிழக அரசால் வழங்கப்பட்டது. முதலமைச்சர் அவர்களின் தலைமையில் சென்னையில் மத்திய செம்மொழி ஆய்வு நிறுவனம் செயல்படும் என அறிவிக்கப்பட்டது. அந் நிறுவனத்திற்கு மத்திய அரசு ரூ.76.32 கோடி நிதி வழங்கியது. தமிழ் மொழி செம்மொழியாக அறிவிக்கப்பட வேண்டும் என்று 100 ஆண்டுகளுக்கு முன்பே முதல் குரல் கொடுத்தவரான பரிதிமாற் கலைஞர் அவர்கள் பிறந்த வீடு அரசு நினைவு இல்லமாக மாற்றப்பட்டது.

கணினித் தமிழ் :

கணினியில் தமிழில் பயன்பாட்டை வளர்திடும் வகையில் மின் அகராதி கிளவியாக்கம் மொழித்திறன் எனும் மென்பொருள் உருவாக்கப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

செம்மொழி விருதுகள் :

செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் விருதுகள் 28-3-2010 அன்று முதலமைச்சர் அவர்களால் வழங்கப்பட்டன. முத்தமிழறிஞர் முதலமைச்சர் கலைஞர் அவர்கள் செம்மொழி தமிழாய்வு நிறுவனத்திற்கு தம்முடைய சொந்த நிதியிலிருந்து ரூபாய் ஒரு கோடி வழங்கி தமது பெயரில் கலைஞர் மு.கருணாநிதி செம்மொழித் அறக்கட்டளை எனும் பெயரில் அறக்கட்டளை ஒன்றை நிறுவி, அதன் சார்பில் பண்டைய தமிழ் பண்பாடு நாகரிகம் பற்றி ஆய்வு செய்து செம்மொழித் தமிழ் ஆய்வுக்கு சீரிய முறையில் பங்காற்றி வரும் தமிழ் அறிஞர் அல்லது நிறுவனத்திற்கு கலைஞர் மு.கருணாநிதி செம்மொழித் தமிழ் விருது ஆண்டுதோறும் வழங்க ஏற்பாடு செய்தார். அதன்படி அவரது பெயரில் அந் நிறுவனத்திற்கு விருதுகள் வழங்கப்படுகின்றன.

தமிழறிஞர்களின் நூல்கள் நாட்டுடைமை :

140 தமிழறிஞர்களின் நூல்கள் நாட்டுடைமை ஆக்கப்பட்டன. அவர்களின் சான்றாவணம் அளித்த 81 தமிழறிஞர்களின் மரபுரிமையாளர்களுக்கு பரிவுத் தொகையாக மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் 5 கோடியே 43 லட்சம் வழங்கப்பட்டது. சிறந்த நூல்களுக்கு பரிசு வழங்கும் திட்டத்தின் கீழ் நூலாசிரியர்களுக்கு என்று வழங்கப்படும் பரிசுத் தொகை ரூ,10,000 என்பது ரூ.20,000 ஆகவும் பதிப்பகத்தாருக்கு வழங்கப்படும் பரிசுத் தொகை ரூ.2,000/- இருந்து ரூ.5,000/- ஆகவும் உயர்த்தி வழங்கப்பட்டது.

உயர்நீதிமன்றத்தில் தமிழ் வழக்கு மொழியாக பயன்படுத்தப்பட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. 2006 டிசம்பர் 6ஆம் தேதி தமிழ்நாடு சட்டமன்றத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டது. தமிழ் மொழி வளர்ச்சிக்கு திமுக அரசு தமிழக்கும் தமிழர்களுக்கும் ஆற்றிய தொண்டு வரலாற்று சிறப்பு மிக்கது. திமுக தொடர்ந்து பணியாற்றி தமிழுக்கும் தமிழர்களுக்கும் ஏற்றம் சேர்த்து வருகிறது.

உலக தமிழர்களின் நலனுக்கும் தமிழ் மொழி சிறப்பிற்கும் திமுக தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆற்றிவரும் தமிழ் தொண்டும் போற்றத் தக்கதாகும், தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்கும், தமிழர்களின் முன்னேற்றத்திற்கும் அவர் ஆற்றிவரும் சேவை மகத்தானது ஆகும்.

- பேராசிரியர் டாக்டர் சு.கிருஷ்ணசாமி, ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்டம் & உலகச் சுற்றுச்சூழல் பேரமைப்பின் முன்னாள் உறுப்பினர்.

Related Stories

Related Stories