தமிழ்நாடு

“NEP பெயரில் பா.ஜ.க-அ.தி.மு.க கூட்டு சேர்ந்து கல்வியை செல்லாக்காசாக்கிவிட்டன” : கல்வியாளர் கடும் தாக்கு!

மத்திய பா.ஜ.க அரசும் - மாநில அ.தி.மு.க அரசும் சேர்ந்து ‘தேசிய கல்விக் கொள்கை’ என்ற பெயரில் கல்வியை செல்லாக்காசாக்கிவிட்டன என கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு குறிப்பிட்டார்.

“NEP பெயரில் பா.ஜ.க-அ.தி.மு.க கூட்டு சேர்ந்து கல்வியை செல்லாக்காசாக்கிவிட்டன” : கல்வியாளர் கடும் தாக்கு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

திருச்சியில் "விடியலுக்கான முழக்கம்" பொதுக் கூட்டத்தில் ‘கல்வி’ என்ற தலைப்பில் கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு ஆற்றினார்.

அதன் விவரம் வருமாறு:

தமிழ் மண்ணிலே திராவிடம் என்ற தத்துவத்தை இரத்தத்தாலும், வியர்வையாலும் வளர்த்தெடுத்தவர்கள் தமிழர்கள். இந்த திராவிடம் என்ற தத்துவத்திற்கு விடுக்கப்பட்டிருக்கிற சவாலை எதிர்கொள்வதற்கான ஒரு தேர்தலாக இந்த தேர்தலை சந்திப்பதனால்தான் இன்று தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டிருக்கிற பிறகு இத்தகைய ஒரு கருத்தரங்க நிகழ்வை திருச்சியிலே இந்த மாநாட்டில் ஒரு பகுதியாக நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

இன்று இந்தியா முழுக்க இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு முன்னாள் கௌதம புத்தர் ‘எல்லோருக்கும் கல்வி வேண்டும் என்கின்ற வகையிலே மக்களிடம் செல்லுங்கள் மக்களிடம் கற்றுக் கொள்ளுங்கள். மக்களுக்கே கல்வியைக் கொடுங்கள். அவர்களிடமிருந்து கற்றுக் கொண்டதை அவர்களுக்கே கொடுங்கள்’ என்று சொன்னார்.

கல்வியை சீரழிக்கும் மோடி அரசு!

இருபதாம் நூற்றாண்டிலே ஃபாவ்லோ ப்ராயரே அது உரையாடல் கல்வி என்று முன்மொழிந்தார்.

சீர்காழியின் மண்ணினுடைய மைந்தர் பேராசிரியர் ஜவஹர் நேசன் சமூகவாதி கல்வி என்று இன்று அதை பிரச்சாரம் செய்து கொண்டிருக்கிறார். அது இத்தனையும் அடித்து நொறுக்கக் கூடியவகையில் அண்ணல் அம்பேத்கர், தந்தை பெரியார் கண்ட கனவுகளையெல்லாம் சிதைக்கக்கூடிய வகையில் ஒரு தேசிய கல்விக் கொள்கையை இன்று நரேந்திர மோடி அவர்கள் தலைமையில் இருக்கக்கூடிய மத்திய அரசு நடைமுறைப்படுத்தத் துடிக்கின்றது.

பிரின்ஸ் கஜேந்திர பாபு
பிரின்ஸ் கஜேந்திர பாபு

அதை தமிழகத்திலே நடைமுறைப்படுத்துவதற்கான அனைத்து ஆயத்தக் கூறுகளையும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசு செய்து வருகிறது. எனவே இதைத்தடுத்து நிறுத்துவதற்கு அனைவருக்கும் சமமான கற்றல் வாய்ப்பை ஏற்படுத்துவதற்கு ஒரு மிகப்பெரிய அரசியல் மாற்றம் நிகழ்ந்தே ஆக வேண்டும் என்பதுதான் 2021 தேர்தல். 2021 தேர்தல் அண்ணல் அம்பேத்கரின் தத்துவத்தை காக்கின்ற தேர்தல். 2021 தேர்தல்' தந்தை பெரியாரின் சமத்துவக் கோட்பாட்டைக் காக்கின்ற தேர்தல்.

நண்பர்களே ‘பள்ளிக் கல்வியை சிதைக்கின்ற பள்ளிக் கல்வியை செல்லா காசாக்குகின்ற’ தேசிய கல்வி கொள்கை 2020. கொஞ்சம் கூட வெட்கமில்லாமல் மத்திய கல்வி அமைச்சர் செப்டம்பர் 5, 2020 நியூ இந்தியன் எக்ஸ்பிரசில் எழுதுகிறார்.

குலக்கல்வி திட்டம்!

சமூகத்திற்கு கார்பென்டர் வேண்டுமாம். மரவேலை செய்பவர் வேண்டுமாம் பள்ளிகள் அதை உருவாக்கி கொடுக்குமாம். இனிமேல் தேசிய கொள்கையிலே பள்ளிக் கூடங்கள் கார்பென்டரை, மரவேலை செய்பவரை உருவாக்கிக் கொடுக்குமாம். நண்பர்களே சிந்தித்துப் பாருங்கள். என்னால் படிக்க முடியல, எங்க அப்பாவால படிக்க முடியல, எங்க தாத்தாவால் படிக்க முடியல, என் புள்ளயாவது படிக்கணும்னு பள்ளிக்கூடத்துக்கு அனுப்பிச்சா, நான் மர வேலை கற்றுக் கொடுக்கறேன்னு சொல்றாங்களே இது நியாயமா?

ராஜாஜி குலக்கல்வியை கொண்டு வந்தபோது பெரியாரின் தடி தடுத்து நிறுத்தியது. 2021-ல் குலக்கல்வி வேறு வடிவிலே வரும்போது அதைத் தடுத்து நிறுத்துவதற்கான தேர்தல்தான் 2021-ல் நடக்கக் கூடிய தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் என்பதை உணர்ந்து நாம் களப்பணி ஆற்ற வேண்டும். நண்பர்களே ஆறாம் வகுப்பிலிருந்து எட்டாம் வகுப்பிற்குள் ஒரு குழந்தை முழுமையாக ஒரு தொழிலைக் கற்றுக் கொள்ளுமாம்.

முழுமையாக ஒரு தொழில் மீது அந்தக் குழந்தைக்கு ஆர்வம் வந்துவிடுமாம். அவர்கள் சொல்வது Vocational Skill. Vocational Skill என்றால் வேலை வாய்ப்பிற்கான திறன்கள் பதினொரு வயதிலிருந்து பதிமூன்று வயதிற்குள் வேலைவாய்ப்பிற்கான திறனை ஒரு குழந்தை பெறுவதை எந்த அப்பாவாவது எந்த அம்மாவாவது விரும்புவார்களா? கல்லூரியில் படித்ததற்குப் பிறகு வேலைவாய்ப்புத் திறன் என்பது வேறு. +2முடித்ததற்குப் பிறகு, டிப்ளமோ முடித்ததற்குப் பிறகு, வேலைவாய்ப்பு திறன் என்பது வேறு; எட்டாவது படிப்பதற்கு முன்பு வேலைவாய்ப்புத்திறனா? அத்தகைய வேலைவாய்ப்புத் திறனைப் பெற்றால் அந்தக் குழந்தை மற்ற பாடங்களை படிக்கக்கூடிய ஆர்வம் இருக்குமா?

சற்று யோசித்துப் பாருங்கள்.. +2 முடித்தால் கல்லூரிக்கு போகலாம். இன்று ஐம்பதாண்டு கால திராவிட ஆட்சி என்ன செய்தது என்று கேட்கிறார்கள். ஐம்பதாண்டு கால திராவிட ஆட்சி எல்லோரையும் கல்லூரிக்கு இட்டுச்சென்றது. எல்லோரையும் பல்கலைக்கழகத்திற்கு இட்டுச் சென்றது. மாவட்டந்தோறும் ஒரு மருத்துவக்கல்லூரி என்கின்ற அளவிலே வீறுநடைபோடுகிறது தமிழ்நாடு. ஆனால் தேசிய கல்வி கொள்கை 2020 பள்ளிக் கூடங்களை செல்லாக்காசாக்கி இதையெல்லாம் தாண்டி ஒருவன் +2 முடித்தான் எனில் அது கல்லூரிக்கான தகுதி இல்லை என்று சொல்கிறது. அப்படி எனில் கல்லூரிக்கான தகுதி எது?

நீட்டை போன்ற ஒரு தேசிய அளவிலான ஒரு திறனறிவு தேர்வு. அந்த தேர்வில் ஒரு குழந்தை என்ன மதிப்பெண் பெறுகிறதோ அதை வைத்துதான் B.A History, B.A. Tamil, B.A. English என்று எந்த பட்டப் படிப்பிற்கு போனாலும் மருத்துவத்திற்கான ‘நீட்டை போன்ற ஒரு தகுதி தேர்வை எழுதி தகுதிபடுத்திக் கொண்டு போக வேண்டுமாம். அப்ப இனிமேல் பள்ளிக் கூடங்கள் என்ன செய்யும்?. அரைகுறைத் திறன் கொண்ட கூலித் தொழிலாளிகளை உருவாக்கும். கல்லூரிக்குப் போகனும்னா national testing agency கூட்டாட்சித் தத்துவதற்கு எதிராக மாநில உரிமைகளை பறிக்கின்ற தேசியக் கல்வி கொள்கையை நிராகரிக்கின்ற வாக்குகளை தமிழக மக்கள் இட வேண்டும். அதற்கான கருத்துப் பிரச்சாரத்தை உடன்பிறப்புகள் செய்ய வேண்டுமென்ற தோழமை வாழ்த்துகளோடு விடைபெறுகின்றேன்.”

இவ்வாறு பிரின்ஸ் கஜேந்திரபாபு உரையாற்றினார்.

banner

Related Stories

Related Stories