தமிழ்நாடு

“பள்ளி வினாத்தாளில் டிராக்டர் பேரணி வன்முறை குறித்து சர்ச்சை கேள்வி” : இசைக்கலைஞர் T.M.கிருஷ்ணா கண்டனம்!

தனியார் பள்ளி ஒன்றில் விவசாயிகள் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தும் விதமாகக் கேள்வி கேட்கப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

“பள்ளி  வினாத்தாளில் டிராக்டர் பேரணி வன்முறை குறித்து சர்ச்சை கேள்வி” : இசைக்கலைஞர் T.M.கிருஷ்ணா கண்டனம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

மத்திய பா.ஜ.க அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி டெல்லி எல்லையில் கடந்த 80 நாட்களுக்கும் மேலாக விவசாயிகள் தீவிரமாக தங்களின் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். போராடிவரும் விவசாயிகளுடன் மத்திய அரசு பல சுற்றுப் பேச்சுவார்த்தை நடத்தியும், வேளாண் சட்டத்தை திரும்பப் பெறாமல் பிடிவாதத்துடன் இருந்துவருகிறது.

இதனைத் தொடர்ந்து தங்களின் போராட்டத்தை வலுப்படுத்தும் விதமாகக் குடியரசு தினத்தன்று விவசாயிகள் டிராக்டர் பேரணி நடத்தினர். பின்னர் பிப்ரவரி 6ம் தேதி சக்கா ஜாம் (நெடுஞ்சாலை மறியல்) போராட்டத்தையும், 18ம் தேதி ரயில் மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர். இவர்களின் போராட்டத்திற்கு இந்திய முழுவதும் ஆதரவு தெரிவித்து விவசாயிகளும் பல்வேறு கட்சிகளும் போராடி வருகின்றன.

இந்நிலையில், சென்னையில் உள்ள தனியார் பள்ளி ஒன்று, 10ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆங்கிலப் பாடத்திற்கான மாதிரி வினாத்தாளில்," குடியரசு தினத்தில் விவசாயிகள் நடத்திய டிராக்டர் பேரணியில், பொது சொத்துகளை சேதப்படுத்தியது, காவல்துறையினரைத் தாக்கி, வன்முறை நிகழ்ந்த சம்பவம் அனைவரின் மனதிலும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து செய்தித்தாள் ஆசிரியருக்குக் கடிதம் எழுதவேண்டும்” என போராட்டம் குறித்து மாணவர்கள் மனதில் நஞ்சை விதைக்கும் விதமாக கேள்வி கேட்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து பிரபல கர்நாடக இசைப்பாடகர் டி.எம்.கிருஷ்ணா தனியார் பள்ளியின் அந்த வினாத்தாளை ட்விட்டரில் பதிவிட்டு தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “சென்னையில் இருக்கும் பிரபல தனியார் பள்ளியின் வினாத்தாள் மாதிரி இது.

விவசாய திருத்தச் சட்டங்களும், போராட்ட சம்பவமும், இன்னும் விவாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் வேளையில், வன்முறையாளர்களின் தூண்டுதலால் இந்த செயல் நடந்துள்ளது” என தெரிவித்துள்ளார். முன்னதாக சூழலியல் செயற்பாட்டாளர் திஷா ரவி கைது செய்யப்பட்டபோது, கர்நாடக இசைப்பாடகர் டி.எம்.கிருஷ்ணா தனது எதிர்ப்பை பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories