தமிழ்நாடு

“ஜனவரி மாதமே சொன்னபோது அலட்சியப் படுத்திவிட்டு முதலைக் கண்ணீர் விடும் பழனிசாமி” - மு.க.ஸ்டாலின் சாடல்!

தி.மு.க தலைவரின் கோரிக்கையை கடந்த மாதம் ஏற்காமல் அலட்சியப்படுத்திய முதல்வர் பழனிசாமி, தற்போது தேர்தல் நெருங்குவதால் அறிவித்துள்ளார்.

“ஜனவரி மாதமே சொன்னபோது அலட்சியப் படுத்திவிட்டு முதலைக் கண்ணீர் விடும் பழனிசாமி” - மு.க.ஸ்டாலின் சாடல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

“தி.மு.க. முன்வைத்த கோரிக்கையைக் காலந்தாழ்த்தியேனும் நிறைவேற்றியாக வேண்டிய கட்டாயத்திற்கு இந்த அரசு உள்ளது. வெற்று அறிவிப்பாக இல்லாமல் விரைந்து நிறைவேற்ற வலியுறுத்துகிறேன்” என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

கொரோனா கட்டுப்பாடுகளை மீறியதாக பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழும், இந்திய தண்டனை சட்டத்தின் கீழும் லட்சக்கணக்கானோர் மீது அ.தி.மு.க அரசு வழக்குப் பதிவு செய்தது. இப்படி பதிவு செய்யப்பட்ட வழக்குகளால் வேலைவாய்ப்பிற்காக காத்திருக்கும் இளைஞர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளதாகவும், இந்த வழக்குகளை திரும்பப்பெற வேண்டும் எனவும் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கடந்த மாதம் வேண்டுகோள் விடுத்தார்.

அப்போது இந்தக் கோரிக்கையை ஏற்காமல் அலட்சியப்படுத்திய முதல்வர் பழனிசாமி, கொரோனா பரவல் காலத்தில் விதிமுறைகளை மீறியதாக பதிவு செய்யப்பட்ட 10 லட்சம் வழக்குகள் ரத்து செய்யப்படும் என்றும் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக நடந்த போராட்டங்கள் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்குகள் ரத்து செய்யப்படுகிறது என்றும் இன்று அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்ட பதிவில், “கொரோனா பேரிடர் காலத்தில் பொதுமக்களைப் பாதுகாக்க வேண்டிய அரசு, அவர்களைப் பல வகைகளிலும் வதைத்ததுடன், வழக்கும் போட்டுத் துன்புறுத்தியதை அப்போதே சுட்டிக்காட்டியிருந்தேன். இந்த வழக்குகளால் இளைஞர்களின் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கான பயணம் உள்ளிட்ட பல வாழ்வாதாரச் சிக்கல்கள் ஏற்பட்டு வருவதைக் கடந்த ஜனவரி மாதமே விரிவாக எடுத்துரைத்த போதும், அலட்சியம் காட்டிய அ.தி.மு.க. அரசின் முதலமைச்சர் பழனிசாமி, இப்போது தேர்தல் நெருங்கி வருகிறது என்றதும் வழக்குகள் வாபஸ் என அறிவித்திருக்கிறார்.

சி.ஏ.ஏ.வை எதிர்த்துப் போராடியவர்கள் மீதான வழக்குகளும் வாபஸ் பெறப்படும் என்றும், கூடங்குளம் அணுமின் நிலையப் போராட்டக்காரர்கள் மீதான வழக்குகளைத் திரும்பப்பெறுவது குறித்து சட்டத்திற்கு உட்பட்டுப் பரிசீலிக்கப்படும் எனவும் தனது பரப்புரையில் வரிசையாக அறிவித்திருக்கிறார்.

முதலமைச்சரின் முதலை கண்ணீரைத் தமிழ்நாட்டு மக்கள் நன்கறிவார்கள் என்றபோதும், தி.மு.க. முன் வைத்த கோரிக்கையைக் காலந்தாழ்த்தியேனும் நிறைவேற்றியாக வேண்டிய கட்டாயத்திற்கு இந்த அரசு உள்ளது. வெற்று அறிவிப்பாக இல்லாமல் விரைந்து நிறைவேற்ற வலியுறுத்துகிறேன்!” எனக் குறிப்பிட்டுள்ளார்.

banner

Related Stories

Related Stories