தமிழ்நாடு

உஷார் மக்களே... “பேங்க் மேனேஜர் பேசுறேன்; ATM கார்டு நம்பர் சொல்லுங்க” - மோசடியில் ஈடுபட்ட மர்ம நபர்!

சென்னையில் பெண் ஒருவரிடம் வங்கி மேலாளரைப் போல பேசி ஏ.டி.எம் கார்டு நம்பரையும் பின் நம்பரையும் வாங்கி, ஒரு லட்சத்திற்கும் அதிகமான ரூபாயை மர்ம நபர் கொள்ளையடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உஷார் மக்களே... “பேங்க் மேனேஜர் பேசுறேன்; ATM கார்டு நம்பர் சொல்லுங்க” - மோசடியில் ஈடுபட்ட மர்ம நபர்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

சென்னை தாம்பரத்தை அடுத்த சிட்லப்பாக்கம் ஜார்ஜ் காலணியை சேர்ந்தவர் கண்ணன். இவர் அரசு மருத்துவராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது மனைவி ஷியாமளா. இவருக்கு நேற்றைய தினம் மாலையில் போன் செய்த மர்மநபர் ஒருவர், ‘நான் நீங்கள் அக்கவுண்ட் வைத்திருக்கும் வங்கியில் இருந்து மேலாளர் பேசுகிறேன். உங்கள் ஏ.டி.எம் நம்பரையும் பின் நம்பரையும் சொல்லுங்கள்’ என கேட்டிருக்கிறார்.

அதற்கு ஷியாமளா, “ஏதேனும் வெரிஃபிகேசன் என்றால் நானே வங்கிக்கு வந்து நேரில் தகவல் தெரிவித்துக்கொள்கிறேன்” என கூறியிருக்கிறார். ஆனாலும் போனில் பேசிய அந்த மர்ம நபர் விடாப்பிடியாக, “நான் பேங்க் மேனேஜர் தான் பேசுறேன். நீங்க என்னை நம்பலாம். உங்களுடைய ஏ.டி.எம் நம்பரையும் பின் நம்பரையும் சொல்லுங்கள்” என மீண்டும் கேட்டிருக்கிறார்.

அவர் சொன்னதை நம்பி, அந்த நபரிடம் தனது ஏ.டி.எம் எண்ணையும் பின் நம்பரையும் சொல்லியிருக்கிறார் ஷியாமளா. பின்னர், மீண்டும் தொடர்புகொண்ட அந்த நபர், “உங்களுடைய செல்போனுக்கு ஒரு ஓ.டி.பி நம்பர் வந்திருக்கும் அதனை சொல்லுங்கள் என கேட்டிருக்கிறார். அதனையும் அந்த மர்ம நபரிடம் சொல்லியிருக்கிறார் ஷியாமலா.

உஷார் மக்களே... “பேங்க் மேனேஜர் பேசுறேன்; ATM கார்டு நம்பர் சொல்லுங்க” - மோசடியில் ஈடுபட்ட மர்ம நபர்!

மீண்டும் மீண்டும் போன் செய்து, உங்களுடைய பின் நம்பர் தவறாக இருக்கிறது. மீண்டும் உங்களது செல்போனுக்கு ஓ.டி.பி நம்பர் அனுப்பி இருக்கிறேன். அதனை சொல்லுங்கள் என கேட்கவே, ஷியாமளாவும் கிட்டத்தட்ட 9 முறை அவர் கேட்டபோதெல்லாம் தனது செல்போனுக்கு வந்த ஓ.டி.பி எண்ணை சொல்லியிருக்கிறார்.

அந்த மர்ம நபர் போன் செய்த 10 நிமிடத்தில் 20 ஆயிரம் 20 ஆயிரம் ரூபாயாக கிட்டத்தட்ட ஒரு லட்சத்து 82 ஆயிரம் ரூபாய் பணத்தை ஷியாமளாவின் அக்கவுண்ட்டில் இருந்து எடுத்திருக்கிறார். தனது வங்கிக் கணக்கில் இருந்து பணம் எடுக்கப்பட்டதாக குறுஞ்செய்தி வந்ததும், சந்தேகமடைந்த ஷியாமளா, அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் அதனைக் காட்டி விசாரித்திருக்கிறார்.

அப்போதுதான், யாரோ ஒரு நபர் வங்கி அதிகாரி போல போன் செய்து தனது வங்கி கணக்கில் இருந்து பணத்தை திருடியதை அறிந்து அதிர்ச்சியடைந்திருக்கிறார். பின்னர் உடனே, இதுகுறித்து சிட்லப்பாக்கம் காவல்நிலையத்தில் ஆதாரங்களுடன் புகார் அளித்திருக்கிறார். பின்னர் பரங்கிமலையில் உள்ள இணையவழி குற்றத்தடுப்பு போலிஸாரிடம் அளிக்கப்பட்ட புகாரின் பேரில், சைபர் க்ரைம் போலிஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இப்படி நூதனமாக மக்களிடம் பேசி பணத்தைக் கொள்ளையடிக்கும் மோசடி சம்பவங்கள் தொடர்ந்து நடந்துகொண்டே தான் இருப்பதால், மக்கள் எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என போலிஸாரும், வங்கி அதிகாரிகளும் அறிவுறுத்தி வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories